sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வண்ணங்களைப்போன்றதே எழுத்துகளும்

/

வண்ணங்களைப்போன்றதே எழுத்துகளும்

வண்ணங்களைப்போன்றதே எழுத்துகளும்

வண்ணங்களைப்போன்றதே எழுத்துகளும்


PUBLISHED ON : ஜன 23, 2017

Google News

PUBLISHED ON : ஜன 23, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவப்பு, பச்சை, நீலம்... இந்த மூன்றையும் 'அடிப்படை வண்ணங்கள்' என்பார்கள். காரணம், இவற்றிலிருந்துதான் பிற வண்ணங்கள் அனைத்தும் உருவாகின்றன.

உதாரணமாக, சிவப்பும் பச்சையும் சரிவிகிதத்தில் கலந்தால், மஞ்சள் நிறம் தோன்றும். சிவப்பும் நீலமும் சரிவிகிதத்தில் கலந்தால், magenta(மெஜன்தா - ரோஸ்) எனப்படும் நிறம் தோன்றும். பச்சையும் நீலமும் சரிவிகிதத்தில் கலந்தால், cyan(சையான்) எனப்படும் கடல் நீலம் தோன்றும். இப்படி மாற்றிமாற்றி பலவிதமாகக் கலந்தால் ஏராளமான வண்ணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

ஆக, நாம் பார்க்கும் வண்ணங்கள் அனைத்தும் சிவப்பு, பச்சை, நீலத்தைச் சார்ந்துள்ளன. இவை மூன்றும் அடிப்படை வண்ணங்கள். மற்ற அனைத்தும் சார்பு வண்ணங்கள்.

இதேபோன்ற ஒரு விஷயத்தை மொழி இலக்கணத்திலும் பார்க்கலாம். எழுத்துகளை முதலெழுத்துகள், சார்பெழுத்துகள் என்று பிரிப்பார்கள்.

முதலெழுத்துகள் என்பவை, தானே தனித்து நிற்பவை. உதாரணமாக, 12 உயிரெழுத்துகள், 18 மெய்யெழுத்துகள் ஆகிய முப்பதையும் முதலெழுத்துகள் என்பார்கள்.

சார்பெழுத்துகள் என்பவை, முதலெழுத்துகளைச் சார்ந்துநிற்பவை. உதாரணமாக: க = க் + அ

இங்கே 'க்' என்ற மெய்யெழுத்து, 'அ' என்ற உயிரெழுத்து, இவை இரண்டும் சேர்ந்து, 'க' என்ற உயிர்மெய்யெழுத்தை உருவாக்கியுள்ளன. 'க' என்ற எழுத்து க், அ என்ற இரு முதலெழுத்துகளையும் சார்ந்திருக்கிறது. ஆகவே, அது சார்பெழுத்து ஆகிறது.

சார்பெழுத்துகளில் பல வகைகள் உண்டு:

உயிர்மெய்யெழுத்துகள் அனைத்தும் சார்பெழுத்துகளே. 12 x 18 = 216 உயிர்மெய்யெழுத்துகள், முப்பது (12 + 18) முதலெழுத்துகளைச் சார்ந்து அமைகின்றன

(உதா: க, கா, கி, கீ...) ஆய்த எழுத்து (ஃ),

அளபெடை எழுத்துகள்: செய்யுளில் வழக்கத்தைக் காட்டிலும் நீண்டு ஒலிக்கும் ஆஅ, ஈஇ, போன்ற எழுத்துகள், இதில் உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு வகைகள் உண்டு.

குற்றியலுகரம்: ஒரு மாத்திரை கொண்ட 'உ'கரக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்துகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறுகி அரை மாத்திரையாக ஒலிப்பது.

குற்றியலிகரம்: ஒரு மாத்திரை கொண்ட 'இ'கரக் குடும்பத்தைச் சேர்ந்த எழுத்துகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறுகி அரை மாத்திரையாக ஒலிப்பது.

ஐகாரக் குறுக்கம்: ஔகாரக் குறுக்கம், இரு மாத்திரைகளைக் கொண்ட ஐ, ஔ குடும்பத்தைச் சேர்ந்த எழுத்துகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறுகி, ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரையாக ஒலிப்பது.

மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம்: அரை மாத்திரை கொண்ட ம், ஃ ஆகிய எழுத்துகள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறுகிக் கால் மாத்திரையாக ஒலிப்பது.

-என். ராஜேஷ்வர்






      Dinamalar
      Follow us