தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நூலகம் அறிவோம் அரிய புத்தகங்களின் அறிவுச்சோலை

நூலகம் அறிவோம் அரிய புத்தகங்களின் அறிவுச்சோலை

நூலகம் அறிவோம் அரிய புத்தகங்களின் அறிவுச்சோலை


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புத்தகங்களின் முதல் பதிப்பு முக்கியமானது. அவற்றின் முன்னுரை, ஆசிரியரின் குறிப்பு ஆகியவை அந்தப் புத்தகம் வெளிவந்தபோது இருந்த சூழல், ஆசிரியரின் மனநிலை போன்ற பல அரிய தகவல்களைத் தரும். இரண்டாம் பதிப்பு, அதற்கடுத்த பதிப்புகளில் இவை சிலநேரம் கிடைப்பதில்லை. அப்படிப் பல அரிய புத்தகங்களின் முதற்பதிப்புகளைத் தேடும் ஆர்வம் உடையவரா நீங்கள்? அப்படியெனில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணம் என்ற ஊரில் உள்ளது இந்த நூலகம். 1,800 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்த நூலகத்திற்குச் சென்றால், எங்குமே கிடைக்காத பல அரிய புத்தகங்களின் சேகரிப்பு நம்மை வியக்கவைக்கிறது.

இரண்டு தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில், தரை முதல் மேற்புறச் சுவர் வரை புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நாவல்கள், பயணக் கட்டுரைகள், நாட்டார் இலக்கியம், ஜோதிடம், தத்துவம், வரலாறு, கலாசாரம் போன்ற பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. 1842இல் வெளிவந்த வீரமாமுனிவரின் சதுரகராதி, தமிழ் -- லத்தீன் அகரமுதலியின் கையெழுத்துப்பிரதி, 1908இல் வெளிவந்த பாரதியின் சுதேசி கீதங்கள், 1930இல் வெளிவந்த பாரதிதாசனின் படைப்புகள் ஆகியவை இந்த நூலகத்தின் குறிப்பிடத்தகுந்த நூல்கள்.

ராஜாஜியின் கடிதங்கள், பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதி பதிப்பித்த, பாரதி மற்றும் பாரதிதாசன் நூலின் முதல் பதிப்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. குடியரசு, விடுதலை போன்ற புரட்சிகர இதழ்களின் தொடக்ககாலப் பிரதிகள், காந்தியின் ஹரிஜன் இதழ், 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' இதழின் பழைய இந்தியப் பதிப்புகள் மற்றும் 1920 முதல் வெளிவந்த பல தமிழ் இதழ்கள் ஆகியவற்றையும் நீங்கள் இங்கு காணலாம். ஆங்கிலத்தில் 15,000 நூல்கள், தமிழில் 70,000 நூல்கள் என இந்த நூலகச் சேகரிப்பு பிரமிக்க வைக்கிறது. நூலகத்தின் முயற்சியால், மீண்டும் பதிப்பிக்கப்பட்ட 3,000 புத்தகங்களும் இங்கு உள்ளன.

இந்த நூலகத்தை நிறுவி, நிர்வகித்து வருகின்றனர் கிருஷ்ணமூர்த்தி, டோரதி தம்பதியினர்; ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.

மிக அரிதான, தனிப்பாடல் திரட்டு என்ற நூலை கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அவருக்குப் பரிசளித்தார். அதிலிருந்து அரிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டுமென்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு ஞானாலயா ஆய்வு நூலகத்தை நிறுவினார். தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து, அவர் அரிய நூல்களைத் திரட்டினார். தாவரவியல் பேராசிரியையாகப் பணிபுரிந்த அவருடைய மனைவிக்கும் புத்தகங்களின் மீது ஈடுபாடு உண்டு. தங்களுடைய ஓய்வூதியம் முழுமையையும் நூலகக் கட்டடம் அமைத்தல் மற்றும் பராமரிப்புக்காகச் செலவிட்டுள்ளனர் இந்தத் தம்பதி.

இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த அளவு பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. அரிய நூல்கள் குவிந்து கிடக்கும் இந்த நூலகத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் புத்தகங்களைத் தேடி வருகின்றனர். இலவசமாக இயங்கிவரும் இந்த நூலகத்திற்கு நீங்களும் சென்று பயனடையுங்கள்!

ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை மாவட்டம். ): 04322 - 221059

வேலை நேரம்: காலை 9 முதல் மாலை 9 மணி வரை (எல்லா நாட்களும்)

-ஹாலாஸ்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us