PUBLISHED ON : ஜூலை 11, 2016

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
சூரியன் காலையில் சிவப்பு மஞ்சளாகவும், மதியம் வெள்ளையாகவும் இருப்பது ஏன்?
சு.கோகுல்,7ஆம் வகுப்பு, ஜெ.ஜி. வித்யாலயா,சென்னை- 33.
சூரிய ஒளி என்பது நிறமாலை நிறங்களின் கலவை. காற்றில் ஒளி பரவும்போது காற்று மூலக்கூறுகளால் ஒளி சிதறடிக்கப்படும். இந்த ஒளிச்சிதறல் ஒளியின் அலைநீளத்தைப் பொருத்து வேறுபடும். சிவப்பு நிறத்தை விட ஊதா நிறம் 16 மடங்கு ஒளிப்பரவல் அடைகிறது. எனவே கூடுதலான காற்று அடுக்கின் வழியே ஊடுருவி அடிவானத்திலிருந்து வரும் சூரிய ஒளியில் முற்றிலும் ஊதா நிறம் சிதறடிக்கப்பட்டுவிடும். ஒப்பீட்டளவில் சிவப்பு குறைவாகதான் சிதறியிருக்கும். எனவே அடிவானச் சூரியனில் கூடுதல் சிவப்பு மிஞ்சி இருக்கும். இதனால்தான் சூரியன் ஆரஞ்சு கலந்த சிவப்பாக அடிவானத்தில் தென்படுகிறது. தலைக்கு மேலே சூரியன் உள்ளபோது வளி மண்டலத்தின் தடிமன் ஒப்பிட்டளவில் குறைவு. அதாவது குறைவான காற்று அடுக்கில் புகுந்து சூரிய ஒளி நம்மை வந்து அடைகிறது. எனவே ஒப்பீட்டளவில் அடிவானத்தைவிட மிகக் குறைவாகவே ஊதா நிறம் சிதறடிக்கப்படுகிறது. எனவே அனைத்து நிறங்களும் அதே கலவை விகிதத்தில் நம் கண்களை வந்து அடைகிறது. இதனால் இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் உச்சி வெயில் சூரியன் காட்சிப்படுகிறது.
அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis), அரோரா ஆஸ்டிராலிஸ் (Aurora Australis) ஆகியவற்றிற்கும் வானவில்லுக்கும் என்ன தொடர்பு?
ரா.பா. அம்ருத லக்ஷ்மி, 9ஆம் வகுப்பு, சிவஸ்வாமி கலாலயா பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
மழைத்துளிகள் முப்பெட்டகம் போல செயல்பட்டு சூரிய ஒளியை நிறப்பிரிகை செய்வதால் வானவில் ஏற்படுகிறது. பூமியின் வடதுருவ, தென்துருவ பகுதிகளில் சூரியனிலிருந்து வரும் மின்னேற்றத் துகள்கள் புகுந்து அதன் வழியாக ஏற்படும் பல வண்ண மின்னிறக்கச் செயல்தான் அரோரா பொரியாலிஸ், அரோரா ஆஸ்டிராலிஸ். எதிர் மின்னேற்றத் துகள்கள் குறை அழுத்தக் காற்றில் பாயும்போது ஏற்படுத்தும் மின்னிற ஒளிதான் டியூப்லைட்டில் வெளிப்படுகிறது. அதுபோல ஏற்படும் நிகழ்வே அரோரா பொரியாலிஸ், அரோரா ஆஸ்டிராலிஸ். அதற்கும் வானவில்லுக்கும் தொடர்பு இல்லை.
ரத்த தானத்தில் பெறப்படும் ரத்தம் எத்தனை நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்? என்னென்ன நன்மைகள்?
த. அனுராகா, 9ஆம் வகுப்பு, பாரதி வித்யா பவன், ஈரோடு.
பொதுவாக, ரத்த தானத்தில் பெறப்படும் ரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள் தனியே பிரிக்கப்பட்டு குளிரூட்டியில் நாற்பத்தி இரண்டு நாட்கள் வரை பாதுகாக்கலாம். நோயாளிக்கு உடனே ரத்தம் தேவை எனில் ரத்த தானம் செய்பவர் வரும் வரை காத்திராமல் பாதுகாத்து வைத்த ரத்தத்தை அதன் வாழ்நாளில் எப்போது வேண்டும் என்றாலும் உடனே எடுத்து பயன்படுத்தலாம்.
ஏன் சிலர் தூக்கத்தில் நடக்கிறார்கள்? அது வியாதியா?
R.சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.
தூக்கத்தில் நடப்பது (Somnabulism- Sleep Walking) என்பது பரவலாக இருக்கும் ஓர் உடல் கோளாறு. பொதுவாக, ஒரு தூக்கச் சுழற்சியில் ஐந்து கட்டங்கள் உள்ளன. விரைவிழி இயக்கமற்ற (வி.வி.இஇ NREM - Non Rapid Eye Movement) நிலையில் மொத்தம் நான்கு கட்டங்கள் உள்ளன. வி.வி.இஇ1, வி.வி.இஇ2, வி.வி.இஇ3, வி.வி.இஇ4 என்பவை அவை. இது தவிர ஐந்தாவதாக கனவுகள் மிகுந்த விரைவிழி இயக்க (வி.வி.இ REM - Rapid Eye Movement) உறக்கம். தூக்கத்தில் நடக்கும் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கிய பின் சுமார் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு பிறகு விரைவிழி இயக்கமற்ற கட்டத்தில்தான் தூக்கத்தில் எழுந்து நடந்து செல்வார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் அரை விழிப்பு நிலையில் இருந்தாலும் அப்போது நடக்கும் எதுவும் அவர்களுக்கு காலையில் விழித்து எழுந்ததும் நினைவு இருக்காது. வளரிளம் பருவத்தினர் (10 - 12 வயதினர்) மற்றும் ஆண்களிடம் இந்த கோளாறு காணப்படுகிறது. சில நேரங்களில், பெரியவர் ஆன பிறகும் கூட இக்கோளாறு நிலைத்திருக்கக்கூடும். இந்தக் கோளாறு ஏன் சிலருக்கு ஏற்படுகிறது என்பது குறித்து மருத்துவ அறிவு இன்று சொற்பமே என்றாலும் இது மனநிலை கோளாறு அல்ல. இரவு நேர ஆஸ்துமா, சீரற்ற தூக்கம், சிலவகை மருந்து உட்கொள்ளுதல் எனப் பல காரணங்களால் இந்த நிலை தூண்டப்படலாம்.
கிறுகிறுவென சுற்றி நிற்கும்போது நம்மைச் சுற்றி இருப்பவை எல்லாம் சுற்றுவதுபோல தெரிகிறதே ஏன்?
V.சுமதி, மின்னஞ்சல்.
நமது உடல் நிமிர்ந்து உள்ளது; படுக்கை நிலையில் உள்ளது, இயக்க நிலையில் உள்ளது என்றேல்லாம் மூளை எப்படித் தெரிந்து கொள்கிறது? காதுதான் மூளைக்கு நமது உடலின் பேலன்ஸ் - சமநிலை- குறித்த தகவல்களை தருகிறது. நமது உட்செவியில் உட்செவிப்புற நிணநீர் (Perilymph) நிரம்பிய சிறு குழாய் ஒன்று உண்டு. உட்செவிப்புற நிணநீர் நிரம்பிய குழலில் சிறுசிறு கண் இமை முடி போன்ற குற்றிழைகள் (Cilia) இருக்கும். இயல்பில் குற்றிழைகள் நேராக நிமிர்ந்து இருக்கும். உடல் சாய்ந்தால் உள்ளே உள்ள நிணநீர் தளும்பும். அப்போது அந்த குற்றிழைகள் ஓடும் நீரில் தலைசாயும் நாணல் புல் போல வளையும். அது எந்த அளவுக்கு வளைகிறது என்பதை வைத்துதான் மூளை நமது சமநிலையை மதிப்பிடுகிறது. இந்த வளைவு சிறு சிறு மின் அதிர்வுகளை ஏற்படுத்தும். ஐந்து மின் அதிர்வுகள்தான் மூளையை அடையும்போது அதைவைத்து நமது உடலின் சமநிலை குறித்து மூளை மதிப்பீடு செய்கிறது.
நாம் சுழலும் போது சுழலும் உட்செவிப்புற நிணநீர், நாம் நின்றுவிட்டாலும் அதற்குப் பிறகும் கூட சில நொடிகள் தளும்பி சுழன்று கொண்டே இருக்கும். சுழல்வதை நாம் நிறுத்திய பிறகும் சற்று நேரம் உட்செவிப்புற நிணநீர் சுழன்று கொண்டு இருப்பதால், குற்றிழை முடி வளைந்துதான் இருக்கும், எனவே மூளை இப்போதும் நாம் சுழன்று கொண்டு இருப்பதாகக் கற்பிதம் செய்து கொள்ளும். எனவேதான் அறை நம்மை சுற்றி வருவது போன்ற தோற்ற மயக்கம் ஒருசில நிமிடங்களுக்கு ஏற்படுகிறது.
