PUBLISHED ON : ஜூலை 11, 2016

மெலிந்த அழகிய உடலமைப்பும், நீண்ட மெல்லிய வாலும் உடையவை வாலாட்டிக் குருவிகள். பறவை இனத்தில் 'மோடாசிலிடா' (Motacillidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வாலை அடிக்கடி ஆட்டிக்கொண்டே இருக்கும். நீர் நிலைகளின் கரைகளில், சதுப்பு நிலங்களில், புல்வெளிகளில் இவை வாழும். சிறு பூச்சிகளை, புழுக்களைத்தேடி உணவாக உட்கொள்ளும். இவற்றில் பெரும்பாலானவை மழைக்காலத்தில் வலசை வருபவை.
(ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பறவைகள் புலம் பெயர்வதை வலசை என்கிறோம்) வெள்ளை, மஞ்சள், சாம்பல் ஆகிய நிறங்களில் வாலாட்டிக் குருவிகள் காணப்படுகின்றன.
சாம்பல் நிற வாலாட்டிக்குருவி (Grey Wagtail)
கழுத்துப் பகுதியும், வால் பகுதியும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும். சேற்றுப் பகுதிகளில் நடந்து சென்று அங்குள்ள சிறு பூச்சிகள், புழுக்களை உண்ணும். ஆற்றின் ஓடைகள் அருகே இவை கூடு கட்டியிருக்கும்.
வெள்ளை வாலாட்டிக் குருவி (White Wagtail)
சிட்டுக்குருவியைப் போலவே மெல்லிய உடல் பருமன் கொண்டவை. மெலிந்த உடலும் நீண்ட வாலும் கொண்ட இப்பறவைகளின் மேல்பாகம் சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பாகம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். முன் கழுத்துப் பகுதி கருப்பு வண்ணத்தில் காணப்படும். இப்பறவைகள் ஐரோப்பா, ஆசியா, வட ஆப்பிரிக்கா பகுதிகளில் காணப்படுகின்றன.
