PUBLISHED ON : டிச 19, 2016

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
எரி நட்சத்திரம் முழுவதுமாக எரிந்து காணாமல் போய்விடுமா?
ராகவ், 11ம் வகுப்பு, ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.
எரி நட்சத்திரம் என்பது, விண்மீன் அல்ல. அவை வானில் மிதக்கும் பாறைகள். சில சமயம் இந்தப் பாறைகள், பூமியின் ஈர்ப்பு விசையால் கவர்ந்திழுக்கப்படுகின்றன. அவ்வாறு பூமியை நோக்கி வரும்போது, வளிமண்டலத்தில் புகும். வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வு காரணமாக, வெப்பம் அதிகரித்து ஆவியாகி எரிந்துபோகும். அப்போதுதான் நமக்கு இவை, எரி நட்சத்திரமாக புலப்படுகிறது. சிறு சிறு பாறைகள் முற்றிலும் எரிந்துபோக, சில சமயம் பெரிய பாறைகளின் எரியாத சிறு பகுதிகள் பூமியில் விழும்; இவற்றையே விண்கற்கள் என்கிறோம்.
சில நேரங்களில் நிலா நகர்வது போலவும், சில நேரங்களில் நிலையாக இருப்பது போலவும் உணருகிறோமே, இது உண்மையா?
ப.ஹரிணி, 8ம் வகுப்பு, முத்துமல்லா நடுநிலைப் பள்ளி, சிறுநல்லூர், மதுராந்தகம்
பேருந்தில் அடுத்த தடவை பயணம் செய்யும்போது, ஒரு சோதனை செய்து பாருங்கள். ஜன்னலில் வழியாக வெளியே பார்க்கவும். பேருந்துக்கு அருகில் சாலையில் அமைந்துள்ள மின்கம்பம், கண் இமைக்கும் நேரத்தில் காட்சியிலிருந்து மறைந்துவிடும். தொலைவில் உள்ள மலையின் முகடு, கூடுதல் நேரம் ஜன்னல் வழியாக நமக்குக் காட்சி தரும். இதைப் போலவே, மலையைவிட பல மடங்கு தொலைவில் உள்ள நிலா, எப்போதும் ஜன்னலில் அதே இடத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை நமக்குத் தருகிறது.
சூரியன், நிலவைச் சுற்றி வட்டம் தெரிந்தால், மழைவரும் என்கிறார்களே, உண்மைக் காரணம் என்ன?
கு.தர்ஷினி, 5ம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கன்பட்டி.
சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில், 'சிர்ரஸ்' (Cirrus) எனப்படும் கீற்று மேகம் உருவாகும். இந்தத் தொகுப்பு கீற்று மேகத்தில், நீராவித் திவலைகள் குளிர்ந்து, சிறு சிறு நுண் அளவிலான பனிக் கட்டியாக இருக்கும். இந்த மேகம் சூழ்ந்த வானில், நிலவு அல்லது சூரியன் இருந்தால், அதைச் சுற்றி, ஹேலோ எனப்படும் ஒளிவட்டம் தோன்றும்.
ஒளிவிலக்கம் எனும் இயற்பியல் வினையின் காரணமாக, பாதியளவு நீரால் நிரம்பிய கண்ணாடி டம்ளரில் வைக்கப்படும் பென்சில், வளைந்து காணப்படுவதை நாம் அறிவோம். அதேபோல கீற்று மேகத்தில் உள்ள பனிக்கட்டிகளில் பட்டு ஒளிவிலக்கம் அடையும் நிலவின் ஒளி, ஒளிவட்டமாகக் காட்சி அளிக்கிறது. பனிக்கட்டி கொண்ட மேகத்திலிருந்து, சில சமயம் மழை வரலாம்; ஆனால், எப்போதும் ஒளிவட்டம் தெரிந்தால், மழை பொழியும் என சரியாகக் கூற இயலாது.
பிளாஸ்டிக் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகிறது?
நா.சத்யசுபா, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
தங்கம் போன்ற உலோகங்களை உருக்கி, வேறு பொருளாகச் செய்ய முடியும். அதுபோல, சில வகை பிளாஸ்டிக்கை உருக்கி மறுசுழற்சி செய்யலாம். ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பின்போது பயன்படுத்தப்படும் நிறமிகளை, முற்றிலும் பிரித்து எடுக்க முடியாது. எனவே, இவ்வாறு மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கை, உணவுப் பொருட்கள் எடுத்து செல்லப் பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை.
இத்தகைய பிளாஸ்டிக்குகளை வாளி, கப் போன்ற பொருட்கள் தயாரிக்கவும், ரோடு போடுதல் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கும், உபயோகப்படுத்துவார்கள். சில வகை பிளாஸ்டிக்குகளை, மறுபடி அதன் அடிப்படை வேதிப் பொருட்களாக மாற்ற முடியும். நுண்ணுயிரிகளைக் கொண்டு, தாவரக் கழிவுகளைச் சிதைத்து, மக்கிப்போகச் செய்வது போல, பிளாஸ்டிக்குகளை உண்ணும் நுண்ணுயிரிகள் தயாரிப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கிப் போகும்படியான புதுவகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பிலும், சில ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
