தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : செப் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி.

1. இறப்புக்குப் பிறகு நமது ஆன்மாவுக்கு என்ன ஆகும்?

டி.ஸ்வேதா, 12ஆம் வகுப்பு, ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி, சேலம்.


இறப்பு என்றாலே மனத்தில் ஓர் அச்சம் ஏற்படும். இறந்த பிறகு மனிதர்களாகிய நாம் எங்கு செல்வோம் என்பது எல்லோரும் தெரிந்துகொள்ள விரும்பும் கேள்வி. அறிவியல் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இறந்தபின் என்ன நடக்கிறது என்பது பற்றிப் பல கட்டுக்கதைகள் மக்களிடத்தில் பரவின. இன்னும் சிலர் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ளலாம் என்று நம்பி ஏமாந்தார்கள். ஆனால், இறப்புக்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதற்கான நம்பும்படியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிட்டவில்லை.

மூளையின் இயக்கமாக நாம் கூறும் மனம், சிந்தனை போன்றவற்றை ஆன்மாவோடு தொடர்புபடுத்தி, இறந்தாலும் ஆன்மா மட்டும் நிலைத்து இருக்கும் எனச் சிலர் கருதுகின்றனர். அறிவியல் பார்வையில் புரிந்துகொண்டால் உயிர்தான் ஆன்மா. ஊடகமாக இருக்கும் உடல் இல்லாமல், ஆன்மா என்கிற ஒன்று தனியாக இருக்கிறது என்பதை அறிவியல் உலகம் எப்போதும் ஏற்பதில்லை.

2. நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சிக்கு என்ன தேவை?

க.நந்தினி, 5ஆம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கர்பட்டி.


உலகத்தின் முதன்மை உணவு உற்பத்தியாளர்கள் தாவரங்கள்தான்! அவற்றுள் தாமரை, ஆம்பல், கம்மல் செடி போன்ற நீர் அல்லது ஈரப்பாங்கான இடங்களில் வளரும் தாவரங்கள் நீர்வாழ்த் தாவரங்கள் எனப்படுகின்றன. இவை, ஒரு பகுதியோ அல்லது முற்றிலுமாகவோ, கடல்நீர் அல்லது நன்னீரில் மூழ்கி வாழும்.

காற்றைச் சுவாசித்து வாழும் விலங்குகளுக்குக் காற்று எப்படி அத்தியாவசியமோ, அதுபோல நீர்வாழ் தாவரங்களுக்கு நீர் அவசியம். எல்லா நீர்வாழ் தாவரங்களும் செழித்து வளர போதிய தூய்மையோடு நீர் வேண்டும். சில தாவரங்கள் நீரின் மேல் வரை உயர்ந்து வளரும். நீர் மட்டம் மிக மிக உயர்ந்தாலோ அல்லது மிகவும் தாழ்ந்து போனாலோ, அந்த வகைத் தாவரங்கள் வளர முடியாது.

தண்ணீரில் மிதக்கக்கூடிய கம்மல் செடி, பெரணி (Fern) வகையைச் சேர்ந்தது. கால்நடை, கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. மிகச் சிறிய இலைகளையும் நுண்ணிய வேர்களையும் கொண்டது. இதன் தண்டு, வேர்ப்பகுதி நீரில் மூழ்கி இருக்கும். இதன் வளர்ச்சிக்கு 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும்.

3. எரிபொருள் எவ்வாறு கிடைக்கிறது? இதற்கு மாணவர்களாகிய நாங்கள் ஏதாவது செய்ய முடியுமா?

என்.பவித்ரா, 9ஆம் வகுப்பு, மாருதி வித்யா மந்திர், புதுச்சேரி.


எரிபொருள் என்பதை பெட்ரோலியம் அல்லது நிலக்கரி என எடுத்துக்கொண்டால், அவை பூமியின் பல்வேறு இடங்களில் பல்வேறு செறிவுகளில் உள்ளன. எங்கெல்லாம் செறிவாக இருக்கிறதோ அங்கே சுரங்கம் அல்லது ஆழ்கிணறு தோண்டி இந்தவகை எரிபொருட்களை வெளியே எடுக்கின்றனர். மின்னாற்றலும் தற்போது எரிபொருளாகப் பயன்படுகிறது. ஆகவே, காற்றாலை, அணு ஆற்றல், சூரிய ஒளி, நீர் ஓட்டம் என பல்வேறு வகைகளில் மின்னாற்றலை உருவாக்குகிறார்கள்.

மாணவர்களாகிய நீங்கள் எரிபொருள் சிக்கனம் எனும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் உதவலாம். மேலும் சிறப்பாகக் கல்வி கற்று எரிபொருள் தொடர்பான நவீன ஆய்வுகளை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வெப்பநிலை வேறுபாட்டைக் கொண்டு மின்சாரம் தயார் செய்ய முடியும் என்கிறது அறிவியல். இவ்வாறு மின்சாரம் தயார் செய்ய நானோ தொழில்நுட்பம் முதல் வேதியியல் நுண்ணறிவு வரை தெரிந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உலக சூழல் பாதுகாப்புக்கும் மாணவர்களாகிய உங்களால் உதவ முடியும்.

4. அனைத்து வாயுக்களையும் திட வடிவமாக மாற்ற முடியும்தானே? அப்படி இருக்க, வாகனங்களின் நச்சுப் புகையையும் திட வடிவில் மாற்றினால் காற்று மாசு அடையாதே?

ஏ.ஆர்.அருணேஸ்வரன், 9ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வி.சாலா மெட்ரிக், மதுரை.


நீங்கள் கூறியது போன்ற நவீன நுட்ப ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கார்பன் நானோ டியூப் எனப்படும் ஒரு நுண்குழாயைப் பயன்படுத்தி வாகனங்களின் நச்சுப் புகையை திடம் அல்லது திரவமாக மாற்ற முடியுமா என ஆய்வுகள் நடைபெறுகின்றன. திடப்பொருளைச் சூடேற்றினால் திரவப்பொருள் ஆகிவிடும். மேலும், சூடேற்றினால் திரவம் வாயுவாக மாறும். வாயுப் பொருளைக் குளிர்வித்தால் திரவப் பொருளாகும். திரவப்பொருளை மேலும் குளிர்வித்தால் திடப்பொருளாகி விடும். அப்படி இருக்க, வாயுக்களை நேரடியாகக் குளிர்வித்து திடப்பொருளாக்க வேண்டும்.

வாகனத்தில் இருந்து புகை வெளிப்படும் இடத்தில் பொருத்தக்கூடிய வகையில், அதிக ஆற்றல் இல்லாமல் எளிதான செயல்முறையில் இதற்கான கருவி இயங்க வேண்டும். இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் அனைத்து கனரக வாகனங்களிலும் பொருத்த முடிகிற பருமனில் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை வாயுவைத் திடமாக மாற்றும் முயற்சியில் போதிய வெற்றி கிடைக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us