தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : டிச 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. உடலுக்குச் சக்தி தேவை என்பதற்காகவே உண்கிறோம். பிறகு ஏன் உண்டபின் தூக்கம் வருகிறது?

ப.சௌமியா, 11ஆம் வகுப்பு, மதுரை.


மதியம் வயிறு முட்டச் சாப்பிட்டால், குட்டித் தூக்கம் வருவது இயற்கையே. உணவு செரித்தல் என்பதும் ஓர் உடலியக்கப் பணிதான். வயிறு நிறைய உணவு உண்ணும்போது, சுமார் 25 முதல் 50 சதவீதம் கூடுதல் ஆற்றலை செரிமானத்துக்காக உடல் பயன்படுத்துகிறது. எனவே, உணவு உண்டதன் காரணமாக சோர்வு ஏற்படலாம். இரண்டாவதாக, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ணும்போது டிரிப்டோபென் (tryptophan) எனும் அமினோ அமிலம் சுரக்கும். இது செரோட்டோனின் (serotonin) எனும் நரம்பியல் உணர்வியைத் தூண்டும். இதன் காரணமாகவும் தூக்கம் ஏற்படலாம். மேலும், கூடுதலாக உண்டு இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் இன்சுலினும் கூடுதலாகச் சுரக்கும். இதன் காரணமாக, போதிய உணவு உண்டுவிட்டோம் என்பதை உணர்த்தும் கொலெசிஸ்டகைனின் (cholecystokinin - CCK) சுரக்கும். இந்த நொதி மூளையில் தூக்கத்தைத் தூண்டும் பகுதியைத் தாக்கி தூக்கத்தை வரவழைக்கும்.

வயிறு நிறைய உணவு உண்டதும் தூக்கம் வருவது மதியம் மட்டும் அல்ல, இரவிலும் தான். இதே காரணங்களின் விளைவாகத்தான் இரவிலும் உண்ட மயக்கம் ஏற்படுகிறது.

2. பரிணாம வளர்ச்சியில் மனிதன் சூப்பர்மேனாக மாற வாய்ப்பு இருக்கிறதா? மாறினால் எந்தெந்த வகையில் திறமைசாலியாக இருப்பான்?

எஸ்.மெகபூப் நஸ்ரின், 12ஆம் வகுப்பு, வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.


தலைமுறைக்குத் தலைமுறை சூப்பர் மேனாக, சூப்பர் உமனாக மாறிக்கொண்டு தான் இருக்கிறோம். கடந்த சில நூறாண்டுகளில் மனிதனின் சராசரி ஊட்டம் கூடியதால், சராசரி உயரம் கூடியுள்ளது என்கிறார்கள். அதேபோல சராசரி ஆயுளும் வெகுவாகக் கூடியுள்ளது.

ஒருகாலத்தில் சிராய்ப்பு, வெட்டுக்காயம் போன்றவற்றால் கிருமித் தாக்குதல் ஏற்பட்டு மரணம் அடைவது சகஜமாக இருந்தது. தற்போது இந்த நிலை மாறி, அம்மை நோய், போலியோ போன்ற கொடிய நோய்களையும் வென்றுள்ளோம். ஒரு தனிநபர் தான் மட்டுமே சூப்பர்மேன் அல்லது சூப்பர் உமனாக மாறுவது என்பது கனவாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மனித இனமாக நாம் மாறி இருக்கிறோம்.

உயிரியல் வளர்ச்சி என்பது ஒரு பரிணாமம் என்றால், பண்பாட்டு முன்னேற்றம் மனித வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. மதம், இனம், மொழி என்ற பிரிவினைகள் பேசி, வன்முறையை வளர்ப்பதைக் கைவிட்டு, இயற்கையைச் சீரழிக்காமல், இணக்கமான நீதியும் சமஉரிமையும் உள்ள சமூகத்தை நாம் உருவாக்கும்போது, அடுத்தகட்ட சூப்பர் மேனாக அல்லது சூப்பர் உமனாக ஒட்டுமொத்தமாக மாறுவோம்.

3. சமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் இளகுவதில்லை எதனால்?

வெ. ஐஸ்வர்யா, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.


காஸ்கட் (gasket) எனப்படும் சமையல் குக்கர் ரப்பர் வளையம் பெரும்பாலும் இன்று சிலிகான் எனும் பாலிமர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வகை ரப்பரை இதற்காகப் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பொருட்கள் குக்கரின் அதிகபட்ச வெப்பமான சுமார் 121°C யைத் தாங்கும் சக்தி படைத்தவை. இவற்றின் உருகும் வெப்பநிலை மிகக்கூடுதல் என்பதால், இவை அதிக வெப்பத்தில் உருகி இளகுவது இல்லை.

4. பலாப்பழம் பெரியது அதன் விதை சிறியது, மாம்பழம் சிறியது அதன் விதை பெரியது. ஏன் இந்த முரண்பாடு?

ப.தங்கமணி, 7ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.


சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஹெலன் முல்லர் லண்டோவ் (Helene Muller-Landau) எனும் அறிவியலாளர் கணிதவியல், உயிரியல் ஆய்வு வழியாக இந்தக் கேள்விக்கு விடை கண்டார்.

தாவரம் தயாரிக்கும் விதைகள் எல்லாம் முளைப்பது இல்லை. பல விதைகள் சவாலான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். சில விதைகள் கட்டாந்தரையில் விழும்போது, அந்த விதை முளைக்கவே முளைக்காது. அதே சமயத்தில் நல்ல வாய்ப்புக் கிடைத்தால் முழு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு எதிரும் புதிருமான தேவையின் சமன்தான் விதைகளின் ஒப்பீட்டளவு பருமன் என்கிறார் லண்டோவ்.

ஒவ்வொரு தேங்காயிலும், தென்னை மரம் ஒரே ஒரு பெரிய விதையை உருவாக்குகிறது. அந்த விதை தற்செயலாக ஈரப்பசை இல்லாத இடத்தில் அல்லது போதிய சூரிய ஒளி இல்லாத இடத்தில் விழுந்து சவாலைச் சந்திக்கிறது என கொள்வோம். சவாலான நிலையிலும் விதை பெரியது என்பதால், அதன் உள்ளே உள்ள சத்தைக் கொண்டு நீண்ட நாட்கள் சவாலைச் சந்தித்து முளைவிட முடியும். சவாலைத் தரும் சூழல் நீங்கி வளரும் வாய்ப்பு வரும் வரை காத்திருக்க முடியும்.

அதே சமயம் அத்திப்பழத்தின் விதை கடுகளவுதான். ஆனால் எண்ணிக்கையில் கூடுதல். சவாலான இடத்தில் விழுந்த விதை முளைப்பது கடினம்தான். ஆனால், பல விதைகளில் ஒன்றாவது வளர ஏதுவான இடத்தில் விழுந்து முளைக்கும்.

அதாவது, ஒப்பீட்டளவில் பெரிய விதைகள் மாங்காய் போல இருந்தால் பழத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் இருக்கும். ஆனால், பலாப்பழம் போல சிறிய விதையாக இருந்தால் அதிகமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us