PUBLISHED ON : ஜன 07, 2019

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஆபத்துக் காலங்களில் அறிவிக்கப்படும்'ரெட் அலர்ட்' என்பது என்ன?
எம்.தீட்சிதா, 4ஆம் வகுப்பு, ஜி.வி.ஜே. சி.பி.எஸ்.இ. பள்ளி, உப்பத்தூர், விருதுநகர்.
ஆசியாவில் மஞ்சள் நிறத்தை 'புனிதம்' எனவும், சிவப்பு நிறத்தை 'வளமை' எனவும் நம்புகின்றனர். ஆனால், பண்டைய யூத மதத்தில் சிவப்பு நிறம், பாவத்தின் குறியீடாகவும், வெள்ளை நிறம், புனிதத்தின் அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே ஐரோப்பாவில் ஆபத்தின் குறியீடாகச் சிவப்பு நிறம் மாறியது.
இரயில்களில் சிவப்புக் கொடி அபாயத்தை குறிக்கப் பயன்பட்டது. இந்த ஐரோப்பிய நடைமுறை உலகெங்கும் பரவியதில் ஆபத்தை அறிவிக்கும் நிறமாக சிவப்பு மாறியது. எனவே, தீவிரவாதத் தாக்குதல்கள் முதல் சுனாமி வரையிலான பேரிடர் எச்சரிக்கைகள் வரை மக்களுக்கு உணர்த்த 'ரெட் அலர்ட்' (Red alert) எனும் வார்த்தை பேரிடர் மேலாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
நமது உடலில் அழுக்குகள் எவ்வாறு உருவாகின்றன?
மா.பாலகுரு, 4ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடி.
மண்ணில் உருண்டு புரண்டு விளையாடும்போதோ அல்லது புகை, மணல், தூசு போன்ற மாசுகள் உடலில் படும்போதோ அழுக்கு உருவாகிறது. கைவிரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்குகள், சாப்பிடும்போது உடலுக்குள் சென்று நோயை வரவழைக்கும். ஆனால், பெரும்பாலும் உடலின் மேற்பகுதியில் ஏற்படும் 'அழுக்கு' என்பது, இறந்த தோல் செல்கள், வியர்வைச் சுரப்பி வெளியேற்றிய எண்ணெய்ப் பசை மற்றும் வியர்வையின் கலவையே! தினசரி இருவேளை குளித்து, கைகால் நகங்களை வெட்டிப் பராமரிப்பது, அழுக்குகளால் ஏற்படும் நோய் பாதிப்புகளைக் குறைக்கும்.
ஆதாம், ஏவாள் அல்லது குரங்கு. இவற்றில் எதில் இருந்து மனிதர்கள் உருவானார்கள்?
வி.ஆர்.ஷாலினி, 12ஆம் வகுப்பு, தூய இருதய அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.
ஆதாம், ஏவாள் புராணக்கதை, அறிவியல் விளக்கம் இல்லாதபோது கூறப்பட்ட கதை.
இதற்கு 'பொது மூதாதையர்' எனும் கருத்தைப் புரிந்துகொள்வது அவசியம். நமக்கும் நம் உடன் பிறந்தவர்களுக்கும் பொது மூதாதையர் நம் தாய், தந்தையரே. நம் தாயின் சகோதர, சகோதரிகளுக்குப் பிள்ளைகள் இருந்தால், அந்த மாமா, சித்தி, பெரியம்மா பிள்ளைகளுக்கும் நமக்கும் பொது மூதாதையர் நம் தாய் வழி தாத்தா, பாட்டி. நம் தாத்தாவின் உடன் பிறந்தவர்களின் வாரிசுகள் மற்றும் நமக்குப் பொது மூதாதையர், நம் கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டி.
பூனை, சிங்கம், புலி, சிறுத்தை எல்லாம் பூனைக் குடும்பத்தைச் சார்ந்தவை. சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சூடேலரஸ் (Pseudaelurus) என்ற ஒரு பொது மூதாதையர் உயிரி இருந்தது. சிங்கமும் அல்லாத, பூனையும் அல்லாத அந்தப் பொது உயிரியின் பரிணாம படிநிலை வழித்தோன்றலே இன்றைய உயிரினங்கள்.
தொல்மானிடவியல் (Pale anthropology) ஆய்வுகள், நவீன மரபணு ஆய்வுகள் முதலியவற்றின் வழி சுமார் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களே, ஒராங்குட்டான், கொரில்லா, சிம்பன்சி மற்றும் மனிதனின் பொது மூதாதையர். சுமார் 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயிரினத்தின் ஒரு கிளை கொரில்லா, மற்றொரு கிளை சிம்பன்சி, மனிதன் முதலியவைகளுக்குப் பொது மூதாதையராக அமைந்தது. இக்கிளையிலிருந்து சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதஇனம் பிரிந்தது. இன்றைய கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குட்டான், மனிதன் எல்லாம் இப்படி உருவானவையே.
சுமார் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பொது மூதாதையர் உயிரி இருந்தது. எனவே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்வதும் அறிவியல் ரீதியில் தவறே. கொரில்லா மற்றும் நம் முன்னோர்களைத் தேடிப்போனால் பதினைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தைக் கண்டடையலாம். இவ்வகையில் கொரில்லாக்கள் நமது முன்னோர்கள் அல்ல; பங்காளிகள்!
ஒரு புட்டியில் காற்றை எடுத்துச்சென்று காற்றில்லாத வேற்றுக்கிரகத்தில் விட்டால் காற்றின் நிலை என்னவாகும்?
பி.டி. தமிழ்வளவன், 4ஆம் வகுப்பு, அரசு தொடக்கப் பள்ளி, அபிஷேகப்பாக்கம், புதுச்சேரி.
காற்று அல்லது வாயு நிலைக்கு வடிவம் இல்லை. காற்று இல்லாத கோளில் புட்டியைத் திறந்தால் காற்று சட்டென வெளியேறிப் பரவி, புட்டி வெற்றிடமாகும். வெளியேறிய காற்று அந்தக் கோளைச் சுற்றிப் படரும். புட்டியில் அடைத்துச் செல்லும் காற்றின் அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால், சூழலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பூமியில், காற்றில் உள்ள ஆக்சிஜன் ஈரப்பசை கொண்ட இரும்போடு வினைபுரிந்து இரும்பு ஆக்சைடு எனும் துரு வடிவிலான திடப் பொருளாக மாறும். அதுபோல புட்டியிலிருந்து வெளியேறிய காற்று, அந்தக் கோளின் தரைப் பரப்பில் உள்ள பொருட்களோடு வினைபுரிந்து திடப்பொருளாகவும் மாறலாம்.
