தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : பிப் 25, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்

01. செல்போன்களின் நம்பர் எந்த முறையில் வழங்கப்படுகிறது? தற்போது இருக்கும் பத்து இலக்கங்களைக் கூட்டவோ, குறைக்கவோ வாய்ப்பு இருக்கிறதா?

அ.திவ்யதர்ஷினி, 9ஆம் வகுப்பு, சுவாமி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி, திருப்பூர்.


என்னிடம் இரண்டு பேன்ட்கள் (P1, P2) மற்றும் மூன்று சட்டைகள் (S1, S2, S3) உள்ளன என கொள்வோம். இவற்றைப் பயன்படுத்தி P1S1, P1S2, P1S3; P2S1, P2S2, P2S3 என ஆறு விதமாக ஆடை அணிய முடியும். அதுபோல, ஆறு இலக்க எண் மட்டுமே கொண்டதாக செல்போன்கள் இருந்தால் (10x10x10x10x10x10) அதாவது அதிகபட்சம் 10,00,000 செல்போன் இணைப்புகள் மட்டுமே தரமுடியும். இன்று இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டிவிட்டது. 7 இலக்க எண்களால் 10 மில்லியன், 8 இலக்க எண்களால் 100 மில்லியன், 9 இலக்க எண்களால் 100 கோடி இணைப்புகளையே தரமுடியும். இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 125 கோடி. எனவே, ஒன்பது இலக்க எண் கூட பற்றாக்குறையாகவே இருக்கும். 10 இலக்கம் என்றால் மொத்தம் 1,000 கோடி இணைப்புகளைத் தரமுடியும். இதற்கும் மேலாக இந்த மக்கள் தொகையின் அளவு கூடப்போவது இல்லை. எனவேதான், உலகம் முழுவதும் பத்து இலக்க எண்முறை வழக்கில் இருக்கிறது.

02. சினிமா படச்சுருள்களில் ஒளி, ஒலியை எவ்வாறு பதிவு செய்து, பிரித்தெடுக்கின்றனர்?

து.தேவஹர்ஷினி, 5ஆம் வகுப்பு, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, தட்டாஞ்சாவடி.


படச்சுருள் என்பது ஒளியைப் பதியவைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் (Photographic emulsion) பூசப்பட்ட ஒரு நீண்ட செல்லுலாய்டு பட்டை. இதில், ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து, மற்ற பகுதியில் உள்ள வேதிப் பொருட்களை நீக்கிவிடுகின்றனர். படச்சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு. இதில் ஒளியும் ஒலியும் பதிவாகிறது. பிம்பங்களைப் புகைப்பட நெகடிவ் போல பதிவுசெய்து, ஒலியை மின் அதிர்வுகளாகவும் ஒளியைத் துடிப்புகளாகவும் மாற்றுவார்கள். ஒளித்துடிப்பை சினிமா படச்சுருளில் இரண்டாவது பகுதியாகத் தனியாகப் பதிவு செய்வார்கள். திரையரங்கில் ஒலியைப் பதிவு செய்த பகுதியின் மீது ஒளியைப் பாய்ச்சி, ஒளித்துடிப்பை மறுபடி ஒலியாக மாற்றிவிடுவார்கள். இன்று நவீன அறிவியலின் வளர்ச்சியில், படச்சுருள்களை டிஜிட்டல் நுட்பம் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

03. தினமும் இருமுறை பல் துலக்குவதால் பற்கள் தேய வாய்ப்புள்ளதா?

க.காவ்யா, மின்னணுவியல் மூன்றாமாண்டு, வி.எஸ்.பி.பொறியியல் கல்லூரி, கரூர்.


பற்களை மென்மையாகவே துலக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுப்பது, அதிக நேரம் துலக்குவது என, பற்களைத் தேய்த்தால், மேல்பூச்சாக உள்ள எனாமல் தேய்ந்து போகும். மேலும், கடினமான நார்கள் உள்ள பல் துலக்கிகளைப் பயன்படுத்தினாலும் ஈறுகள் தேய்ந்துவிடும். அதன் தொடர்ச்சியாகப் பல்கூச்சம் முதல் பல நோய்கள் ஏற்படலாம். அதேசமயம் பல்லின் மீது உணவுத் துணுக்குப் படிந்தால், அதில் உள்ள சர்க்கரை, அமிலமாக மாறி, பல்லின் மேற்பூச்சை அரித்துவிடும். எனவே, ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னர், வாயையும் பற்களையும் சுத்தம் செய்வது அவசியம். பற்களைப் பாதுகாக்கத் தினசரி காலை, இரவு என இருமுறை பல் துலக்குவது, ஈறுகளைச் சுத்தப்படுத்துவது, வாய் கொப்பளிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

04. சர்க்கரை ஆலைகளில் செய்யப்படும் மின் உற்பத்தி பற்றி விளக்கவும்?

இ.கே.நாதன், பெங்களூரு.


ஒரு எரிபொருளைக் கொண்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆற்றலை உற்பத்தி செய்வது இணை மின்சார உற்பத்தி எனப்படும். சாதாரண மின்சார உற்பத்தியில், அதிக அளவிலான வெப்பம் வீணாக்கப்படும். ஆனால், இணை மின்சார உற்பத்தியில், இந்த வெப்பமானது வீணடிக்கப்படாமல் சூடாக்கும் செயற்பாட்டுக்கு உபயோகிக்கப்படும்.

கரும்பைப் பிழிந்து அதன் சாற்றை எடுத்து, சர்க்கரை போன்ற பொருட்களைத் தயாரிக்கிறார்கள். மிஞ்சும் கரும்புச் சக்கை நல்ல எரிபொருள். அதைக் கொதிகலனில் எரித்தால் சர்க்கரை ஆலை செயற்படத் தேவையான வெப்பம் மற்றும் மின்சாரத்தைப் பெறலாம். குப்பைகளையும் மாற்றுப் பயனுக்கு உட்படுத்தி ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். இதுவரை இந்தியாவில் சுமார் 213 சர்க்கரை ஆலைகளில் இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்பட்டு, ஆண்டுக்கு 2,332 MW மின்சாரம் உற்பத்தியாகிறது. பொதுவாக, கரும்பு உற்பத்தி அதிகமுள்ள காலங்களில் இந்த மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்புச் சக்கையை எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தில், நீரை ஆவியாக்குவார்கள். அதிலிருந்து வெளியாகும் நீராவி, டர்பைனைச் சுற்றிச் சுழலச் செய்யும். டர்பைனில் இணைக்கப்பட்ட டைனமோ, மின்சாரத்தை உருவாக்கும். இதனால், தொழிற்சாலையின் இயங்கும் திறன் அதிகரிப்பதோடு, மின் உற்பத்தியும் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us