
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
01. புயலில், மரங்களும் எடை அதிகமான பொருட்களும் பறக்கின்றன. மனிதன் ஏன் பறப்பதில்லை?
எஸ்.எஸ். ராஜேஷ், 11ஆம் வகுப்பு, எஸ்.ஹெச்.என்.வி. மெட்ரிக். பள்ளி, சிவகாசி.
மனிதனைவிட பல மடங்கு எடை கூடுதலான விமானம் சாதாரணமாகப் பறக்கிறது. எனவே, ஒரு பொருள் பறப்பதற்கு எடை மட்டுமல்ல; அவற்றின் வடிவமும் முக்கியமானது.
புயலின்போது, நட்ட மரங்கள் சாயுமே தவிர, காற்றின் வேகத்தில் மேலே பறக்காது. இலைகள் அல்லது சில கிளைகள் வேண்டுமானால் குறிப்பிட்ட தொலைவு வரை பறக்கலாம். மேலும், வீட்டின் கூரை, மரப் பலகை போன்றவை பறப்பதைப் பார்த்திருப்போம். ஆக, தட்டையான வடிவத்தில் இருப்பவை எல்லாம் புயல் காற்றில் வேகமாக உயரே எழும். மனிதன் புயலின்போது பாதுகாப்பான பகுதியில் ஒதுங்கிவிடுவான் அல்லது ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்வான். இதனால்தான் அவன் பறந்துசெல்வதில்லை.
02. சூரியனால் பூமியில் என்னென்ன நடக்கின்றன? சூரியன் அழிந்தால் பூமிக்கு என்ன ஆகும்?
ரா. நவீன், 8ஆம் வகுப்பு, அக்சயா அகாடமி, ஒட்டன்சத்திரம்.
உயிரின செயற்பாட்டில் சூரிய ஆற்றலுக்குத்தான் முதலிடம். சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றலில் மிகக்குறைந்த அளவே பூமியை வந்து அடைகிறது. ஆனாலும், அந்த ஆற்றல்தான் பூமியில் உயிர் வாழ்வதற்கும், பிற இயற்கைச் செயற்பாடுகளுக்கும் உதவுகிறது.
சூரிய ஆற்றலை எடுத்துக்கொண்டு உணவு தயாரிக்கும் தாவரங்கள்தான், பல விலங்குகளுக்கு உணவாக இருக்கின்றன. அந்த விலங்குகளை உண்டே மாமிச உண்ணி உயிர்கள் வாழ்கின்றன. இந்த உயிர்கள் மடியும்போதுதான் சில வகைப் பூச்சிகளும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் உருவாகின்றன. எனவே, உயிர்ச் சுழற்சிக்கு சூரிய ஆற்றல் மிக அவசியம்.
சூரிய ஆற்றலின் காரணமாகவே காற்று வீசுகிறது; பூமியின் வெப்பம், உயிர்கள் வாழ்வதற்குத் தகுந்ததாக அமைகிறது. சூரிய ஆற்றல் இல்லை என்றால், பூமியில் உயிர் மட்டுமல்ல, காற்று வீசுதல் போன்ற எந்த இயக்கமும் இருக்காது. மொத்தத்தில் சூரிய ஆற்றல் இல்லையெனில், பூமி இயக்கமற்ற ஒரு பொருளாக மாறிவிடும்.
03. தொழில்நுட்பங்கள் பெருகி இருக்கும் இந்த நவீன காலத்தில் அதிகம் கண்டுபிடிப்புகள் நடக்காதது ஏன்?
பூர்ணி, 12ஆம் வகுப்பு, புனித ஜோசப் மெட்ரிக். பள்ளி, மின்னஞ்சல்.
டிஜிட்டல் உலகைச் சாத்தியமாக்கி இருக்கும் கணினி, ராக்கெட், செல்போன் போன்றவை கடந்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவையே. அதுபோல பரிணாமம், பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, எலெக்ட்ரான், புரோட்டன் போன்ற அணுத்துகள்களும், அதைவிட நுட்பமான நியூட்ரினோ போன்ற அடிப்படைத் துகள்களும் இந்தக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உலகில் இன்னும் விடை கிடைக்காத பல புதிர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வைட்டமின் சி எனும் வேதிப் பொருள் இடது, வலது என்ற இரண்டு வடிவில் அமையலாம். இயற்கையில் இருந்து கிடைக்கும் உயிர்ப் பொருட்கள், இடது வகை வைட்டமின் சி யை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. ஆனால், நாம் உற்பத்தி செய்யும்போது இடது, வலது என பாதிக்குப் பாதியாகவே அமையும். இந்தச் செயலில் உயிர்ப் பொருட்கள் எப்படி இடது வகையை மட்டும் உற்பத்தி செய்கின்றன என்பது பெரும் புதிராக இருக்கிறது.
அதேபோல கரும்பொருள் (dark matter), கரும் ஆற்றல் (dark energy) என்றால் என்ன என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. நீங்கள் படித்து முடித்து விஞ்ஞானியாக மாறும்போது, இந்த உலகில் கண்டுபிடிக்க பல சவால்கள் இருக்கின்றன என்பதை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள்.
04. நீரைக் கொதிக்க வைத்த பிறகு பாத்திரத்தில் சிறுசிறு குமிழ்கள் தோன்றுவது ஏன்?
டி.பவன் கார்த்திக், ஆர்.வி.மெட்ரிக்.பள்ளி, மேலூர்.
இயற்கையாகக் கிடைக்கும் எல்லா நீரிலும் பல்வேறு விதமான வாயுக்கள் கலந்துள்ளன. அதுதவிர பல்வேறு வேதிப் பொருட்களும் நீரில் இருக்கும். இவ்வாறு வாயுக்கள், வேதிப்பொருட்கள் கலந்த ஒரு கலவையே நீர். அதனைச் சூடேற்றும் போது வெளியேறும் வாயுக்களால் குமிழ்கள் தோன்றும். மேலும் சில வேதிப்பொருட்கள் வெப்பத்தில் உருகி ஆவியாகி வெளியேறும். இதுவும் பார்ப்பதற்குக் குமிழி போலவே தெரியும்.
இந்தக் குமிழிகள், நீரின் மீதான காற்று மூலக்கூறுகளின் மோதலால் உண்டாகிறது. இதற்குப் பரப்பு இழுவிசை (Surface Tension) காரணம். உள்ளிருக்கும் காற்று மூலக்கூறுகள் வெளியேறுவதற்காக அதைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் நீர்ச்சுவர்களை முட்டிக்கொண்டே இருக்கும். இதனால், நீர்க் குமிழிகள் உருவாகி மேலே எழுகின்றன.