PUBLISHED ON : மார் 18, 2019

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. முட்டைக்குள் கரு ஏன் திரவ நிலையில் உள்ளது?
ச.ஓவியா, 8ஆம் வகுப்பு, முருகப்பா மேல்நிலைப் பள்ளி, கல்லல், காரைக்குடி.
கருவுறுதலுக்கு முன்பு இரண்டு ஜோடி டிஎன்ஏவில், பெண்ணின் ஒரே ஒரு டிஎன்ஏ மட்டும் கொண்டுள்ள ஒரே ஒரு செல்தான் முட்டை. கருவுற்றபின், ஆணின் உயிரணுவில் உள்ள மற்றொரு டிஎன்ஏ சேர்ந்து ஜோடியாகி செல்பிரிதல் வழி ஒன்று, இரண்டு; இரண்டு, நான்கு என பல்கிப் பெருகி கோழி அல்லது வேறு உயிர் உருவாகும்.
கருவுற்றதும் செல் பிரிதல் வழி வளர்ச்சியுறத் தேவையான புரதத்தை முட்டை கொண்டுள்ளது. புரதமும் மற்ற பொருட்களும் வளரும் கருவின் பல பகுதிக்குச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் மட்டுமே, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான பொருட்கள் கிடைத்து வளர்ச்சி ஏற்படும்.
திடப் பொருட்களின் உள்ளே மூலக்கூறுகள் அங்கும் இங்கும் நகர முடியாது. ஆனால், திரவத்தில் புரத மூலக்கூறுகள் வேகமாக நகர்ந்து, புரதம் போன்ற பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும். இதனால்தான், முட்டைக்குள் கருவின் அமைப்பு திரவ நிலையில் உள்ளது.
2. காந்தத்தில் ஒரே துருவங்கள் ஈர்க்காமல் எதிரெதிர் துருவங்கள் ஈர்ப்பது ஏன்?
ஓம் கைலாஷ், 7ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக். பள்ளி, சொக்கம்புதூர், கோவை.
அறிவியலின் பல பரிசோதனைகள் வழியாக நமக்குக் கிடைத்த விடைதான், காந்தத்தில் எதிர் துருவங்கள் ஈர்க்கும்; ஒரே துருவங்கள் விலக்கு விசை கொள்ளும் என்பது.
பல்வேறு நிலைகளில் இயற்கை எப்படிச் செயற்படுகிறது என, உற்று நோக்கி ஆய்வு செய்வதுதான் பரிசோதனை. காலையில், இரவில், ஜனவரி மாதத்தில், கடும் குளிரில், வெயிலில் என, பல்வேறு நிலைகளில் இயற்கையின் ஓர் அம்சம் எப்படிச் செயற்படுகிறது என, சோதனைச் சாலையில் ஆய்வு செய்கிறோம். இதன் பிறகே, இயற்கையின் இயல்பு குறித்து அறிய முடியும். இவ்வாறு நிகழ்த்திய ஒரு பரிசோதனையில்தான் காந்தங்களின் ஈர்ப்பு, விலக்கு விசை பற்றிய தன்மைகளை அறிந்துகொண்டனர். செயற்கைக் காந்தங்களில்கூட இதுதான் நிலைமை. ஒரு பொருளில் புதிதாக நிலைக் காந்தத்தை ஏற்படுத்தினாலும் இப்படித்தான் இருக்கும். இதுவே, இயற்கையின் நியதியென நாமும் ஏற்றுக் கொண்டுவிட்டோம்.
3. பனிக்காலங்களில் எண்ணெய், நெய் உறைவது போல் பெட்ரோல், டீசல் உறைவதில்லையே ஏன்?
மா.லத்தீஸ்வரன், 4ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
குறிப்பிட்ட காற்றழுத்த நிலையில், ஒவ்வொரு பொருளுக்கும் கொதிநிலை, உறைநிலை உள்ளது. நீர், 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும்; அதன் பின்னர் ஆவியாகும். நூறு டிகிரிக்கும் குறைவு என்றால், திரவ நிலையில் இருக்கும். பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழே உறைந்து விடும்.
எண்ணெய், நெய் முதலியவற்றின் உறைவெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் மேல், சுமார் 18 டிகிரி இருக்கும். எனவே, சற்றே குளிர் ஏற்பட்டாலும் உறைந்துவிடுகிறது. பாமாயில், டால்டா போன்றவற்றின் உருகுநிலை வெப்பம் 33 - 39°C. எனவே, இயல்பு வெப்பநிலையிலும், பாமாயில் பல சமயம் திட நிலையில் இருக்கும்.
நல்ல வெண்ணெயின் உருகுநிலை 32 - 35°C. எனவே, கோடைக்காலம் தவிர மற்ற காலங்களில் கட்டியாக திடநிலையில் உள்ளது. இதன் பொருள் எல்லா திரவங்களையும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உறையவைத்து, திட நிலைக்குக் கொண்டு வரலாம். அந்த வகையில், பெட்ரோலின் உறைவெப்பநிலை -60°C. எனவே, குளிர்காலங்களில் பொதுவாகவே பெட்ரோல் உறைந்து போக வாய்ப்பில்லை.
4. ஒரு மனிதனின் நினைவுகளை இன்னொரு மனிதனின் மூளைக்குப் பரிமாற்றம் செய்ய முடியுமா?
எம்.எஸ்.ஹரிபிரசாத், 8ஆம் வகுப்பு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை.
ஒரு கணினியில் இருந்து கேபிள் இணைப்புகள் மூலம், தகவல்களை மற்றொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யலாம். அதுபோல மூளையின் நினைவுகளை மனிதனால் பரிமாற்றம் செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் தங்கள் நினைவுகள் மற்றும் படிப்பினைகளை ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்குப் பரிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவரின் படிப்பினைகள் அடங்கிய திருக்குறள்; நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஐன்ஸ்டீன் சொன்ன தத்துவம் ஆகியவை எல்லாம் அவர்கள் எழுதிய புத்தகங்களில் பதிந்துள்ளன. புத்தக வாசிப்பின் மூலம், முன்னோடிகளின் நினைவை, அறிவை, கருத்துகளை நாம் நமது மூளையில் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
