PUBLISHED ON : மார் 18, 2019

கிழக்குத் தொடர்ச்சி மலைகள், தமிழகத்தின் வல்லநாட்டில் தொடங்குகிறது. அங்கிருந்து நீண்டு ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் வரை செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அளவு பிரபலம் ஆகாத மலைத்தொடர் இது.
குருமலை, சாயமலை, காரிசாத்தான், கரட்டுமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், நாகமலை, கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன்மலை, கல்ராயன்மலை, அழகர் மலை, யானை மலை, ஏலகிரி ஆகிய மலைத்தொடர்கள் கிழக்குத் தொடர்ச்சியைச் சார்ந்தவை.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரைவிட, கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மிகவும் பழமையானது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், நீளமாக ஓர் அமைப்போடு இருக்கும். கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர், அங்கும் இங்குமாய் துண்டுகளாகக் காணப்படுகிறது.
நதியும், அருவியும்
மலைத்தொடரை ஒட்டி ஓடும் நதிகள்தான், மலைகளின் உயிர். தமிழகத்தின் வைகை நதி தொடங்கி ஒடிசாவின் மகாநதி வரை பல நதிகள், இந்த மலைத்தொடரை நம்பியுள்ளன. காவேரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, தாமிரபரணி என பெரிய பரப்பளவைக் கொண்ட நதியும், நாகநதி, செய்யாறு, இடியாறு, ஸ்வேதா நதி என குறுகிய பரப்பளவில் ஓடும் நதிகளும் அடக்கம். கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், ஒவ்வோராண்டும் 1,000 மி.மீ. அளவு மழை பெய்கிறது. இந்தப்பகுதி வடகிழக்குப் பருவமழையை நம்பியுள்ளது.
பெரியார் அருவி, மேகம் அருவி, பீமன் அருவி என, பல முக்கிய அருவிகளும் இங்குண்டு. அதேபோல், இந்த மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைத்தொடர் வழியாக வரும் நதிகளை நம்பித்தான் பலரும் விவசாயம் செய்கின்றனர்.
செழுமையான காடுகள்
கிழக்கு மலைத்தொடரின் காடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வறண்ட காடுகள், வெப்ப மண்டலக் காடுகள், சோலைக் காடுகள், பசுமைக் காடுகள் என, அனைத்து வகையான காடுகளும் அமைந்துள்ளன. ஈட்டி, செம்மரம், வேங்கை, பலா போன்ற பல்வேறு மர வகைகளை இங்கு காணமுடியும். இங்கு 2,500 மலர் வகைகள் உண்டு.
