
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
இசையைக் கேட்டால் மனம் மயங்குவது ஏன்?
ர.பிரவின்புதா, 6ஆம் வகுப்பு. பாரததேவி ஆங்கிலப் பள்ளி, புதுச்சேரி.
கேட்கும் இசை நமது பசியைப் போக்காது; தாகத்தைத் தீர்க்காது; காற்று, மழை போன்ற இயற்கை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றாது; கொடிய நோய்க்கு மருந்தாகாது என்றாலும் மனித நாகரிகம் தோன்றிய கற்காலத்திலேயே இசைக் கருவிகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
மனித மூளையில் இசை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் தெரியவரும் வியப்பான தகவல், நமக்குப் பிடித்த இசையைக் கேட்கும்போது இன்பத்தை உணரும் ஆழ்மூளைப் பகுதி இயங்கத் தொடங்குகிறது. இன்ப உணர்வை ஏற்படுத்தும் நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ் (Neurotransmitters) எனும் வேதிப்பொருள் அப்போது சுரக்கிறது. இதனால் மனம் லயித்து, இன்ப வெள்ளத்தில் மிதக்கிறது. இசையில் மயங்கும்போது, மூளை செல்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மேலும், ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
அணுவையும் ஓர் உயிரி செல்லையும் இணைத்துப் புதிய உயிரியை உருவாக்க முடியுமா?
பாண்டி, இயற்பியல் முதலாண்டு, மதுரை.
எல்லா உயிரி செல்களும் பல்வேறு அணுக்கள், மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. எனவே, அணு வேறு; உயிரி செல்கள் வேறு என்பதில்லை. டி.என்.ஏ. என்பது சில மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தொடர். இதில் ஓர் அணுவை நீக்கிவிட்டு வேறு அணுவைப் புகுத்தினால் புதிய உயிரி உருவாகும். இவ்வாறுதான் பரிணாமத்தில் புதிய உயிரிகள் உருவாகியுள்ளன. மேலும், ஜீன் எடிட்டிங் (Genome editing) எனும் முறையில் தீவிரமான மரபணு நோய்களை அகற்றவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
நாம் வளர்க்கிற செடியை, ஒரு நாள் பார்க்காமல் இருந்தால் வேகமாக வளர்வது போல் தெரிகிறதே எப்படி?
பி.ரிஷி ஆகாஷ், 8ஆம் வகுப்பு, முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளி, இராமநாதபுரம்.
'இன்பத்தில் நேரம் போவதே தெரியாது' என்கிறது ஓர் இங்கிலாந்து பழமொழி. அதுபோல முனைப்புடன் ஒரு வேலையில் ஈடுபடும்போது நேரம், காலம் எதுவுமே தெரியாது. அவ்வாறே, செடியின் வளர்ச்சி என்பது அதற்குக் கிடைக்கும் பராமரிப்பு, நீர், சூரிய ஒளி, காற்று முதலியவற்றோடு தொடர்புடையது.
'பானையைப் பார்த்துக் கொண்டிருந்தால் சோறு வெந்துவிடுமா?, மரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தால் கனி விழுந்து விடுமா?' என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல நமது பராமரிப்பு சார்ந்தே செடியின் வளர்ச்சி இருக்கும். தவிர, நாம் பார்க்காதபோது செடிகள் வேகமாக வளர்வது இல்லை.
பூமியின் கடிகார நேரத்தைவிட விண்வெளியில் கடிகார நேரம் மெதுவாக நகருமா?
ஆயிஷா நிஹார், 8ஆம் வகுப்பு, ஸ்ரீ கோபால் நாயுடு உயர்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.
மார்ச் 27, 2015 அன்று சர்வதேச விண்வெளி மையத்தில் ஸ்காட் கெல்லி (Scott Kelly) எனும் அமெரிக்க விண்வெளி வீரர் சுமார் 340 நாட்கள் தங்கியிருந்துவிட்டு மார்ச் 1, 2016இல் பூமி திரும்பினார். அப்போது அவர் 'எனது இரட்டைச் சகோதரர் மார்க் கெல்லியைவிட ஆறு நிமிடங்கள் இளையவனாக இருந்தேன். சுமார் ஓராண்டு காலம் விண்வெளியில் இருந்ததால் கூடுதலாக 13 மில்லி வினாடி இளையவனாகிவிட்டேன்' என்று கூறினார். அதாவது பூமியில் ஓராண்டு முடிந்திருக்க, விண்வெளியில் 13 மில்லி வினாடி குறைவாகவே காலம் கடந்து இருக்கும்.
இது, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் மற்றும் சிறப்பு சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் எழும் 'கால விரிவு' (Time dilation) எனும் இயற்பியல் பண்போடு தொடர்புடையது. காலம் என்பது வெளி (Space) உடன் சம்பந்தப்பட்டது. எனவே, ஒரு பொருள் பயணம் செய்யும் வேகம், அதன் மீதுள்ள ஈர்ப்புவிசைக்கு ஏற்ப அதன் கால ஓட்டம் அமையும் என்கிறது ஐன்ஸ்டீன் தத்துவம்.

