தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

கணக்கில் 60 நொடிகள், 60 நிமிடங்கள் என இருக்கின்றன. இதை நூறாக மாற்ற முடியாதா?

அ.மாணிக்கம், 6ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.


பத்தின் மடங்காகக் கொள்ளும் தசம எண் முறையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதுபோல் அறுபதின் மடங்கு (sexagesimal) கொண்டதும் ஓர் எண் முறையே!

படத்தில் உள்ளவாறு, கட்டை விரலைக் கொண்டு மற்ற நான்கு விரல்களின் மடிக்கக்கூடிய பகுதிகளை எண்ணினால் 12 வரும். இன்னொரு கையில் உள்ள ஐந்து விரல்களையும் (5x12) வைத்து இவ்வாறு கணக்கிட்டால் மொத்தம் அறுபது வரை கைவிரல்கள் கொண்டு எண்தொகை செய்ய முடியும்.

சுமார் கி.மு.3000 ஆண்டுகளில் சுமேரியர்கள் மற்றும் அதன் பின்னர் பாபிலோனியர்கள் அறுபதின் மடங்கு எண் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்தியாவில் பத்து விரல்களை வைத்து தசம எண் முறையை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால், காலம் மற்றும் கோணங்களை அளவிட, இந்தியா மற்றும் பண்டைய காலத்தில் பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, மொத்தம் ஒரு நாள் என்பது அறுபது நாழிகை என்ற கணக்கே இருந்தது. இவையும் அறுபதின் மடங்குக் கணக்கு தான்.

இதன் தொடர்ச்சியாக காலம் மற்றும் கோணங்களைக் கணக்கிட ஐரோப்பாவில் அறுபதின் மடங்கு எண் முறை பயனில் அமைந்தது.

தோராயமாக ஒரு மாதம் என்பது, 30 நாட்கள், 12 மாதங்கள் கொண்டது ஓராண்டு என வகுக்கும்போது, மொத்தம் ஓராண்டில் 360 நாட்கள் வரும். பண்டைய காலத்தில் ஓராண்டை, 360 நாட்கள் என்றே வைத்திருந்தனர். அதேபோல 12 இராசிகள், ஓராண்டில் 12 பௌர்ணமிகள் என்பதன் அடிப்படையில் 12 என்பது சிறப்பான எண்ணாகக் கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என கணக்கிட்டு, ஒரு நாள் என்பது, 24 மணி நேரம் என ஐரோப்பாவில் வகுக்கப்பட்டது.

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, தசம எண்களைக் கொண்டு காலம், கோணம் முதலியவற்றை வகுக்கலாம் என்ற சீர்திருத்த முயற்சியை மேற்கொண்டனர். எனினும் இந்த முறையை மாற்றுவதால் பயனில்லை என்பதால் கைவிட்டு விட்டனர்.

தக்காளி என்பது ஒரு வகைப் பழம்.அதை ஏன் காய்கறிகளுடன் சேர்க்கிறார்கள்?

வீ.என்.ரஞ்சனி, 12ஆம் வகுப்பு, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, சென்னை.


தினசரி வாழ்க்கையில் பழம் அல்லது காய் என தக்காளியை நாம் அழைக்கிறோம். தாவரவியல் அடிப்படையில் பழம் என்பதன் பொருள் வேறு. தாவரவியல் அடிப்படையில் விதைகள் அடங்கிய அவரை நெற்றுகூட பழம்தான்! ஆனால், அதனை விற்பனை செய்யும்போது, காய் என்றே விற்கின்றனர். பூவில் உள்ள சூல் பை வளர்ச்சி பெற்று உருவாவது எல்லாம் தாவரவியல் அடிப்படையில் பழம் என்றே வகைப்படுத்தப்படுகிறது. சமையல் செய்யும்போது, கூடுதல் உவர்ப்புத் தன்மையோடு இருக்கும் பழங்களைக் காய் என்கிறோம். எடுத்துக்காட்டாக மாங்காய். அதேபோல உண்பதற்குப் பயன்படுத்தும் கிழங்கு, கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றையும் காய் என்றே கூறுகிறோம். எனவே, தாவரவியல் துறையில் பழமாகவும் சமையலில் காயாகவும் தக்காளி பார்க்கப்படுகிறது.



எறும்புப் புற்றில் இருக்கும் மண் வித்தியாசமாக இருப்பது ஏன்?

எஸ்.சூரியகுமார், விக்னேஷ்வரா வித்யாலயா, பெருமாநல்லூர்.


மணலைத் தலையில் சுமந்து வந்தே எறும்புகள், தனக்கான புற்றைக் கட்டுகின்றன. எனவே, தன்னால் சுமக்கக்கூடிய அளவுள்ள மணல் துகள்களை மட்டுமே அது எடுத்து வரும். சிறுசிறு கற்கள், கூழாங்கற்கள் போன்றவற்றை எறும்பால் எடுத்துவர முடியாது. அதாவது, சிறுமணல், களிமண் முதலியவை மட்டுமே எறும்புப் புற்றில் இருக்கும். மேலும் களிமண், சிறுநீர் முதலியவற்றால் எறும்புகள் கச்சிதமாக இறுக்கி புற்றை உருவாக்குகின்றன. எனவே, சுற்றியுள்ள மணல் பகுதியிலிருந்து சற்றே வித்தியாசமாக எறும்புப் புற்று உருவாகிறது.

கொட்டாவி வருவதற்கும், தூக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

பி.ஜானகி, கோவை.


மூக்கில் ஏதாவது அடைப்பு அல்லது தூசு இருந்தால் தும்மல் ஏற்படும். அதுபோல அரைத்தூக்க நிலை, அயர்வு, தூக்கக் கலக்கம் ஆகிய உடல் நிலைகளில் வெளிப்படும் உடலியக்கமே, கொட்டாவி. கொட்டாவி வந்தால் தூக்கம் வருகிறது என்று சொல்வது சரியல்ல. உடலுக்கு ஓய்வு தேவை என்பதற்கான அறிகுறிதான் கொட்டாவியாக வெளிப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us