தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கல்விக்கான திசைகாட்டி!

கல்விக்கான திசைகாட்டி!

கல்விக்கான திசைகாட்டி!


PUBLISHED ON : ஜூன் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

484 பக்கங்கள் கொண்ட 'புதிய கல்வி கொள்கை' வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மீது ஜூன் 30ஆம் தேதி வரையில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற இ மெயில் முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வியாளர்கள் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்?

புத்தகச் சுமை குறையும்!

நந்தகுமார், கல்வியாளர்


உலக அளவில், இந்தியாவில்தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். எனவே, அதற்கேற்றார்போல், புதிய தொலைநோக்குத் திட்டத்தை வகுப்பது காலத்தின் கட்டாயம். இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவில், குழந்தைக் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம், 6 வயதுக்குள் 85 சதவீத மூளை வளர்ச்சி அடைந்துவிடுகிறது.

புத்தகச் சுமையைக் குறைக்கும் பல அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, தொழில்முறை கல்விக்கும், அறிவியல் பிரிவுக்கும் இடையே இணைப்பிற்கான பரிந்துரையும் உள்ளது.

அறிவியல் பிரிவு மாணவர்கள், ஏதேனும் ஓர் அறிவியல் அல்லாத பாடத்தை விருப்பப்பாடமாகத் தேர்வுசெய்து படிக்கலாம். அதேபோல், இடைநிற்றல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன.

உட்கட்டமைப்புகள் மீதான கவனத்தை வைத்து கல்வி வளர்ச்சியை அளப்பதைக் காட்டிலும், கற்றல் திறன் வெளிப்பாட்டை அளவுகோலாகக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

கைத்தொழிலுக்கு முக்கியத்துவம்!

தங்கராஜ், கல்வியாளர்


21ஆம் நூற்றாண்டில், உலக அளவில் கல்வியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நம் வாழ்க்கையில், 'செயற்கை நுண்ணறிவு' தொழில்நுட்பம் மொபைல்போன் உள்ளிட்டவற்றின் வழியாக நம்மைச் சூழ்ந்துள்ளது. மேலைநாடுகளில் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை பள்ளிக் காலத்திலேயே அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், நாமோ இன்னும் இதுபோன்றவற்றை உள்ளடக்காமல் பாடத்திட்டத்தை வைத்துள்ளோம்.

உலகின் வளர்ச்சி வேகத்துக்கும், நம் கல்வி அறிவு மேம்பாட்டுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. எனவே, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை அவசியம்.

கைத்தொழில் சார்ந்த கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மும்மொழிக் கொள்கை ஏற்கெனவே உள்ளதுதான். தற்போது, அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். கூடுதலாக மொழிகளை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

பாதகம் என்று பார்த்தால், மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதைச் சொல்லலாம். பாடத்தில் மதிப்பெண் குறைந்து, மீண்டும் எழுதி கூடுதலாக மதிப்பெண் வாங்கலாம் என்றால், கால, ஆற்றல் விரயம் ஏற்படும்.

ஆங்கிலத்தின் மீது ஏன் கோபம்?

சுமந்த் சி ராமன், கல்வியாளர்


இந்தப் புதிய கல்விக்கொள்கையில் சாதக அம்சங்கள் அளவுக்குப் பாதக அம்சங்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, தாய்மொழி வழியே கல்வி என்கிற ஆலோசனை பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாணவர், மருத்துவப் படிப்பை தனது தாய்மொழியிலேயே படிக்க முடியுமா? அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்கிறபோது, பள்ளிக்கல்வியை ஏன் அவர் தாய்மொழியில் படிக்க வேண்டும்?

பின் உயர்கல்வியை எப்படி ஆங்கிலத்தில் தொடர்வார்? இந்தியாவில் வெறும் 15 சதவீதம் பேசப்படும் மொழி ஆங்கிலம் என்றும், 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தி பேசுகிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மேட்டுக்குடியினருக்கான மொழி என்றும் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆங்கில மொழியைத் தனிமைப்படுத்தும் வேலையே அன்றி வேறில்லை.

அதுமட்டுமன்றி, மாநிலத்தில் கல்வி மீதான உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் பரிந்துரைகள் உள்ளன. மத்திய கமிட்டி அமைத்து, மாநில கல்வி நடவடிக்கைகளைக் கண்காணிப்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது.

அடிப்படைக் கல்வியில் கவனம்!

என்.சி. ஸ்ரீதரன், கல்வியாளர்


தொழிற்துறை, பொருளாதாரக் கொள்கை என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் அவசியப்படும் நிலையில், கல்வியிலும் அது அதிகம் தேவைப்படுகிறது. கல்வியாளராக நான், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை வரவேற்கிறேன்.

மும்மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை தேவையற்றது. வீட்டுக்குத் தாய்மொழி, நாட்டுக்கு இந்தி, உலகுக்கு ஆங்கிலம் என்பதில் பெற்றோர், மாணவர்கள் தெளிவாக உள்ளனர்.

மூன்றாவது மொழி உங்கள் விருப்பத்திற்குரியது என்று விட்டுவிட்டால், பெரும்பான்மையானவர்கள் இந்தியையே தேர்வு செய்வார்கள்.

இதுதவிர, 10+2 என்பதை மாற்றி, 5+3+3+4 என்று மாற்றப் பரிந்துரைத்திருப்பதும் மிக முக்கியமானது. அடிப்படைக் கல்வியை மிக உறுதியாகச் சொல்லித்தர இந்த ஏற்பாடு மிகவும் உதவும்.

மேலும், ஆசிரியர்களுக்கான கல்விப் பயிற்சித் திட்டங்கள் குறித்து விரிவாக இதில் பேசப்பட்டுள்ளது. மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, திறமையான, தகுதியான ஆசிரியர்களை உருவாக்க இந்த ஏற்பாடுகள் உதவும். தேசிய கல்விக்கொள்கை, உலகத் தரத்திலான கல்விச் சாலைகளை உருவாக்குவதில் உறுதுணையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us