PUBLISHED ON : ஜூன் 10, 2019
ஒன்று முதல் எட்டுவரை உள்ள எண்ணுப் பெயர்கள் ஒரே சொல். ஆனால் ஒன்பது என்பது ஒன்+பது என்ற இரண்டு சொற்களின் புணர்ச்சி. ஒன் என்பது ஒன்றின் திரிபு. பது என்பது பத்தின் திரிபு. பத்தில் ஒன்று போனால் ஒன்பது.
நன்னூல் ஆசிரியர் பவணந்தியார் ஒரு நூற்பாவில், 'முந்நூற்றறுபத்தொன்பது'(369) என்று கூறாமல்,
'ஒன்று குறைந்த முந்நூற்றெழுபது' என்று கூறுகிறார்.(ஒன்றொழி முந்நூற்று எழுபான்).
ஒன்றூ(ஊ)னமான(குறைந்த)பத்து என்ற நோக்கிலும் ஒன்பதை வழங்கினர். இதுவே காலப்போக்கில் ஒன்பதாகி விட்டதாக, 'தொண்ணூறு, தொள்ளாயிரம்' என்னும் கட்டுரையில் புலவர் சண்முக சுந்தரனார் குறிப்பிட்டுள்ளார் .
தொள்ளாயிரம் என்பதில் வரும் 'தொள்ளை' என்பதற்கு குறை என்று பொருள். ஆயிரத்தில் குறைந்ததே தொள்ளாயிரம் என்கிறார். எண்ணுப் பெயர்களில் ஒன்று, ஆறு, எட்டு, தொண்டு ஆகிய எண்களுக்கு வேறு
பல பொருளும் உண்டு. ஒன்றுக்கு ஒன்றுதல், பொருந்துதல் என்ற பொருளும் வரும்.
ஆறு என்பது நதியையும் குறிக்கிறது. எட்டு என்பது உயரத்தைத் தொடு என்ற பொருளையும் தருகிறது. அதுபோல் தொண்டு என்னும் ஒன்பதற்கு பல்பொருளுண்டு. அடிமை, பணியாள், மாட்டின் கழுத்து, ஒழுக்கம் கெட்டவன் அல்லது கெட்டவள் என இழிபொருள் வந்ததால், காலப்போக்கில் தொண்டை மாற்றி ஒன்பதாக்கினர். தெலுங்கில் இது போல் ஏழு என்ற எண், ஏடு என்று வழங்கப்படுகிறது. அது அழுகை என்ற பொருளில் அங்கே குறிப்பதால் அதனையும் 'ஆறுன்னொகெட்டி' (6+1=7) என்று கூறுவது வழக்கு' என்கிறார் புலவர் சண்முகசுந்தரனார்.

