தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒன்பது வந்தது எப்படி?

ஒன்பது வந்தது எப்படி?

ஒன்பது வந்தது எப்படி?

1


PUBLISHED ON : ஜூன் 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2019

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பாழெனக் காலெனப்

பாகென ஒன்றென இரண்டென மூன்றென

நான்கென ஐந்தென ஆறென ஏழென

எட்டெனத் தொண்டென நால்வகை பூழிளண்

நவிற்றும் சிறப்பினை'

ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட -பரிபாடலில் வரும் பாடல் ஒன்றின் சிறுபகுதி இது. இதில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். மற்ற எண்கள் எல்லாம் தற்போதைய வழக்குப்படியே இருக்க, ஒன்பது மட்டும் 'தொண்டு' என்னும் பெயரில் வந்திருக்கிறது.

ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர் 'தொண்டு' என்பது. தொல்காப்பியர் காலத்திற்கு முன் அப்படித்தான் வழங்கியது. தொல்காப்பியர், அதற்குப் பிற்பட்ட காலத்தில் செய்யுளில் மட்டும் தொண்டு என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.

தொண்டுடன் அதாவது ஒன்பதுடன் பத்து சேர்ந்தால், தொண்பது என்று அழைக்கப்பட்டது.

(தொண்டு + பத்து = தொண்பது)

தொண்பது, 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களைப் போலவே தொண்பதும் அழைக்கப்பட்டது.

தொண்ணூறு என்னும் பெயர், 900 என்னும் எண்ணைக் குறித்தது.

தொண்டு + நூறு = தொண்ணூறு. அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்று குறிப்பிடுவது போல.

தொள்ளாயிரம் என்பது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது. (தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்)

ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம் என்னும் பிற எண்களைப் போலவே இதுவும் அழைக்கப்பட்டது.

தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து,

'நொ(தொ)ண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்

றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே.' (செய்.101)

என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார். 'தொண்டுபடு திவ்வின்' (மலைபடு கடாம். 21) என்கிறார் பெருங்கெளசிகனார்.

தொண்டு என்பது பின்னர் வழக்கொழிந்தது.

பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரம் நூறாம் இடத்திற்கும் வந்தன.

தொன்பது என்னும் பெயர், முதன்மெய் (தொ) நீங்கி, ஒன்பது என்று வழங்கப்படுகிறது. தெலுங்கில் தொம்மிதி என்று வழங்கப்படுகிறது. ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்தது.

எண் - பண்டைப்பெயர் - இன்றைப்பெயர்

9 - தொண்டு - ஒன்பது

90 - தொண்பது - தொண்ணூறு

900 - தொண்ணூறு - தொள்ளாயிரம்

9000 - தொள்ளாயிரம் - ஒன்பதினாயிரம்

ஆதாரம்: தேவநேயப்பாவாணரின் 'ஒப்பியன் மொழிநூல்'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us