தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஜூன் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

சூரியன் இருந்தும் எல்லா நேரங்களிலும் விண்வெளி இருட்டாக இருக்கக் காரணம் என்ன?

கே.ரம்யா, 8ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, சென்னை.


ஒரு விளக்கின் அருகே நிற்கும்போது ஒளி கூடுதலாகவும், தொலைவு செல்லச் செல்ல ஒளி மங்கியும் போகிறது. அதுபோல சூரியனுக்கு அருகே விண்வெளி பிரகாசமாகவே இருக்கும். ஆனால், சூரியனிலிருந்து தொலைவு செல்லச் செல்ல பிரகாசம் குறையும். சூரியனுக்கு அருகில் இருக்கிற விண்மீன் புரோக்சிமா சென்டாரி (Proxima Centauri). அங்கிருந்து ஒளி நம்மை வந்து அடைய, சுமார் 4.2 ஆண்டுகள் ஆகும். இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சூரிய ஒளியும் புரோக்சிமா சென்டாரியின் ஒளியும் மிக மங்கலாகவே இருக்கும்.

மண் பானையில் வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன?

வி.சந்தானகோபாலன், மதுரை.


மண் பானையானது களிமண், நீரைக்கொண்டு கைகளால் உருட்டிச் செய்யப்படுவது. ஈர நிலையில் செய்யப்படும் பானையை உலரவைத்து, சூடுபடுத்திய பிறகு விற்பனை செய்கிறார்கள். மண்பானையைக் கூர்ந்து கவனித்தால், அதில் சிறுசிறு நுண் துளைகள் இருக்கும். மண் பானையில் வைக்கும் நீர், தந்துகிக் கவர்ச்சியின் காரணமாக இந்தத் துளைகளில் நுழையும். சிறிது சிறிதாக பானையின் மேலே கசிந்து, ஆவியாகும். ஆவியாக பானையின் வெப்பத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, பானையில் உள்ள நீர் சற்றே குளிர்ந்துவிடும். நமது உடலும் வியர்வையை வெளியிட்டு, ஆவியாக்கி உடலை குளிர்விப்பதும் இதே முறையில்தான். அறை வெப்பநிலையைவிட 5 டிகிரி செல்சியஸ் குறைவாகத்தான் மண் பானை நீரைக் குளிர்விக்கும்.

விண்வெளி உடை அணியாமல் விண்வெளிக்குச் சென்றால் என்னாகும்?

க.வர்ஷினி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோச்சடை, மதுரை.


நீரின் அடியில் செல்லும்போது தலை மீது பெரும் பாரம் உள்ளது போன்ற அழுத்த உணர்வு ஏற்படும். தலைக்கு மேலே உள்ள நீர், கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம். கடலின் அடியில் உள்ள ஓர் உயிரி, அந்த அழுத்தத்திலேயே வாழ்கிறது. அதனைக் கடலின் மேலே எடுத்து வருவது ஆபத்தானது. திடீரென அழுத்தம் குறைந்து அந்த உயிரியின் உடல் வெடித்தும் விடலாம்.

அதுபோல, நமது உடல் தரைக்கு அருகே உள்ள காற்றழுத்தத்தைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் அழுத்தத்தால் நமது உடல் பூமியில் அழுந்தியுள்ளது. விண்வெளியில் காற்றழுத்தம் கிடையாது. எனவே ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருந்தாலும், காற்றழுத்தம் இல்லாத விண்வெளியில் நமது உடலும் உப்பி வெடிக்கும் வாய்ப்பு உண்டு.

காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டால், இதயச் செயற்பாடு, சதை, எலும்பு அமைப்பு மற்றும் நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு ஏற்படும். விண்வெளி நிலையத்தின் அறையில் காற்று அடைக்கப்பட்டதன் மூலம் அழுத்தம் கிடைக்கிறது. இங்கு, வெப்பநிலையும் கவனமாகப் பராமரிக்கப்படுகிறது.

கண் பார்வை மூலமாக ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்று படித்தேன். அது சாத்தியமா?

எம்.கோகுலகிருஷ்ணன், 7ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி. உயர்நிலைப் பள்ளி, கோவை.


கண் பார்வை மூலம் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதெல்லாம் சாத்தியமில்லை. சிறுவயதில் நாம் ஏதாவது தவறு செய்யும்போது ஆசிரியர் அல்லது அம்மா நம்மை ஒருவிதமான கோபத்துடன் பார்ப்பார்கள். அந்தப் பார்வை அடுத்தமுறை நாம் தவறான செயலைச் செய்யும்போது, யோசிக்க வைக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்கும்போது ஆசிரியர் பார்க்கும் மதிப்புமிக்க பார்வை, பலருக்கு உதவிகரமாக இருக்கச் செய்யும் கனிவான பார்வை போன்றவை நம்மைச் சிறப்பானவர்களாக்க உதவலாம். அதுபோல், ஹிப்னாடிசம் எனும் பிறரைத் தன்வயப்படுத்தும் கலை பற்றிப் பெரும்பாலோனோர் அறிந்திருக்கலாம். அது மனத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என, அது தொடர்பானோர் கூறுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us