PUBLISHED ON : ஜூலை 08, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
ஒரு விலங்கைக் கொன்று உண்பதை, அசைவ உணவு என்கிறோம். உயிருள்ள தாவரங்களைப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளை ஏன் சைவம் என்கிறோம்?
சி.ஹேஷ்வந்த் பாலாஜி, 12ஆம் வகுப்பு, எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வஞ்சிபாளையம், திருப்பூர்.
அறிவியல் பார்வையில் சைவம், அசைவம் எனும் பிரிவுகள் இல்லை. எத்தகைய உணவை உயிரிகள் உண்கின்றன என்பதை வைத்து, தாவர உண்ணிகள், விலங்குண்ணிகள், அனைத்துண்ணிகள் என, வகைப் படுத்துகிறோம். இந்த அடிப்படையில் மனித இனம் அனைத்துண்ணிகள் வகையைச் சார்ந்தது.
இதேபோல உணவுச் சங்கிலியில் முதன்மைத் தயாரிப்பாளர், நுகர்வோர், சாருண்ணி, ஒட்டுண்ணி வகைகள் உள்ளன. ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றலைத் தயாரிக்கும் தாவரங்கள், முதன்மைத் தயாரிப்பாளர்கள். தாவரங்களை உண்டு வாழும் சிறு பூச்சிகள், விலங்குகள் நுகர்வோர், ஒரு நுகர்வோரை இரையாகக் கொள்ளும் இரைக்கொல்லி நுகர்வோர்கள், தாவரம், முயல், நாய், ஓநாய், புலி என்பது போலப் படிநிலையாக உணவுச் சங்கிலியில் அமையும்.
சைவம், அசைவம் என்பதெல்லாம் மனிதன் பண்பாடு சார்ந்து ஏற்படுத்திக்கொண்ட கருத்துகள் ஆகும். இவை, இயற்கை விதிகள் அல்ல. எடுத்துகாட்டாக, தயிர் சாதம், அசைவம் என சிலர் கருதுகின்றனர். தயிர், இட்லி போன்ற நொதித்த உணவுகளில் பாக்டீரியா பல்கிப் பெருகி இருப்பதால், அதை அசைவம் என்கின்றனர். சில பிரிவினருக்கு உருளை போன்ற கிழங்கு வகைகளும், வெங்காயம், பூண்டு முதலியவையும் அசைவம்! இந்தியாவின் சில இடங்களில் மீன் சைவ உணவு என கருதப்படுகிறது. சில இடங்களில் முட்டை அசைவம் என கருதப்படுவதில்லை. அதே சமயம், விலங்குப் புரதங்கள் நிறைந்த பால், சைவம் என பலரால் கருதப்படுகிறது. தாய்லாந்து போன்ற நாடுகளில் 'பௌத்த சைவம்' என்பது, சில வகை மாமிசங்களை மட்டும் ஒதுக்கிய உணவு.
சிறு நூறாண்டுகளுக்கு முந்தைய மக்கள், பயணத்திற்கு எத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்
எம்.ஜெய்ஹரிஷ், 6ஆம் வகுப்பு, விகாஸ் வித்யாலயா, திருப்பூர்.
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு உதவும் வகையில், 1858இல் பயணியர் கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் சாலை வழியே குதிரையில் சவாரி செய்து, சென்னையில் இருந்து நீலகிரி செல்ல ஆறு நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னையில் இருந்து கோல்கட்டா வரை நீராவிக் கப்பலில் செல்ல மூன்று நாட்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நம்மில் பலரும் இன்று பயணம் போகிறோம். அந்தக் காலத்தில் சுற்றுலா செல்வது போன்ற பயணங்கள் அமையவில்லை. யாத்திரை போவது, வணிகர்கள் செல்வது மட்டுமே இருந்தது. யாத்திரை செல்பவர்கள் பெரும்பாலும் நடந்தும், வணிகர்கள் மாட்டு வண்டி, பல்லக்கு, குதிரைச் சவாரி போன்றவற்றிலும் பயணம் மேற்கொண்டனர். எப்போதும் நீர் நிறைந்து இருக்கும் பகுதியில், படகு சவாரிகளும் இருந்தன.
பிரிட்டிஷார் ஆட்சியில் தபால்துறை உருவாக்கப்பட்டபோது, ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் பல்லக்கு மற்றும் குதிரை சேவை இருந்தது. இரயில் டிக்கெட் வாங்குவதுபோல பல்லக்கு சேவைக்கு டிக்கெட், விற்பனையானது. இரயில் சேவை விரிவடைந்ததும் தபால் அலுவலகப் பல்லக்கு சேவை முடிவுக்கு வந்தது.
இருக்கை அளவு, பெடல் செய்யும் விதம் என சைக்கிள் ஓட்டுவதற்கு விதிமுறைகள் இருக்கின்றனவா?
கே.ரம்யா, 8ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, சென்னை.
இருக்கை, செயின், கேரியர் என, சைக்கிளின் ஒவ்வொரு பாகத்துக்கும் இந்திய தர நிர்ணயம் (BIS - Bureau of indian standards) உள்ளது. அதாவது, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப சைக்கிள் தயாரிக்க, பெடல் அளவுகள், அதன் இருக்கையின் தரம் இவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஒரு சைக்கிளில் BIS முத்திரை இருந்தால், அந்தத் தர நிர்ணயத்துக்கு ஏற்பத் தரத்தைக் கொண்டுள்ளது என நாம் முடிவு செய்யலாம்.
செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கலாமா?
பா.ல.கனிவமுதன், 6ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.
மூளைச் செயற்பாடு, நோய் எதிர்ப்புச் சக்தி, இரத்த நாளங்கள் வளர்ச்சி அடைய என, பல்வேறு உடலியல் செயல்களுக்கு நுண்ணிய அளவில் தாமிரம் (Copper) தேவை. அதற்காக தாமிரப் (செம்பு) பாத்திரத்தில் நீரை வைத்துக் குடிப்பதால், உடலுக்குள் தாமிரச் சத்து சென்று சேராது. அதேபோல தாமிரப் பாத்திரத்தில் வைக்கப்படும் நீரில் பாக்டீரியா அழிந்துவிடும் என்பதற்கும் அறிவியல் ஆதாரங்கள் இல்லை. நேரடியான தாமிரம் தனிம வடிவில் உடலுக்குள் செல்வது உயிருக்கு ஆபத்து. தாமிரச் செறிவான புரதங்கள் மற்றும் நொதிகள் வடிவில்தான் உடல் தாமிரத்தை ஏற்கும். சுருக்கமாகச் சொன்னால், செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால், ஆபத்தும் இல்லை; பயனும் இல்லை.
