தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : ஆக 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

* அறிவியல் தொழில்நுட்ப உதவியால் புதிய நட்சத்திரத்தை நம்மால் உருவாக்க முடியுமா?

நிதர்ஷன், 8ஆம் வகுப்பு, சென்னை.


விண்மீன் என்பது பெருமளவு ஹைட்ரஜன், சிறிதளவு ஹீலியம் என, பல்வேறு தனிமங்களை வாயு நிலையில் கொண்டுள்ள ஒரு வாயுப்பந்து. அதன் நிறை அதிகமாக இருப்பதால், அதன் மையத்தில் ஈர்ப்பு விசையால் பெரும் அழுத்தம் ஏற்படும். அழுத்தத்தின் விளைவாக வெப்பநிலை கூடும். கூடிய வெப்பநிலையில் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற தனிமங்கள் தமது எலக்ட்ரான்களை இழந்து அயனியாகும்.

பெரும் வெப்பநிலையில் மிகக் கூடுதலான வேகத்தில், ஹைட்ரஜன் அயனிகள் அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு இருக்கும். இந்நிலையில் தற்செயலாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும். அப்படி மோதும்போது, ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியம் உருவாகும். இதுவே அணுக்கரு பிணைவு (fusion reaction) வினை. நமது சூரியன் உட்பட வானில் எல்லா விண்மீன்களும் ஒளிர, இந்த அணுக்கரு பிணைவு வினையே காரணம்.

இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்து பிரான்ஸ் நாட்டில் ITER என்ற ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. செயற்கையாக விண்மீன்களில் நடைபெறும் அணுக்கருப் பிணைவு வினையைப் பூமியில் நடத்த, ஆய்வுகள் செய்து ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த ஆய்வு முழுமையாகும்போது, பூமியில் செயற்கையாக விண்மீனை உருவாக்கி விட்டோம் என்று சொல்லலாம்!

ஆனால், விண்வெளியில் சூரிய நிறை போன்ற அளவு பொருட்களைத் திரட்டிச் சேர்த்து புதிய விண்மீனை உருவாக்குவது இப்போதைக்கு கற்பனைக் கதைகளில் மட்டுமே சாத்தியம்.

* கடலைப்போல் ஆறு, குளங்களில் அலைகள் எழுவதில்லையே, ஏன்?

ஹ.ஸ்வேதா, 4ஆம் வகுப்பு, டி.வி.எஸ். பள்ளி, மதுரை.


கடலின் மீது வீசும் காற்றே, அலைகளை ஏற்படுத்துகிறது. மெல்லிய காற்று வீசும்போது, ஏரி குளங்களிலும் சிற்றலைகள் ஏற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், பாத்திரத்தில் இருக்கும் நீரில் சிற்றலைகள் ஏற்படாது. ஏனெனில், நீரின் மீது காற்று வழுக்கிச் செல்லும். நீண்ட தொலைவு செல்லும்போது, அங்கும் இங்கும் காற்றின் ஆற்றல் ஏரி, குளங்களில் உள்ள நீரில் புகுந்து பரவும். இதையே சிற்றலைகளாக நாம் பார்க்கிறோம்.

கடல் பரப்பு நீண்டது என்பதால், ஏரியைவிடக் கூடுதல் தொலைவு நீரின் மீது காற்று வீசும். நீண்டநேரம் காற்று வீசுவதால் நீரோடு வினைபுரிந்து, ஆற்றலைப் புகுத்தக் கூடுதல் வாய்ப்பு ஏற்படும். ஓரிடத்தில் உருவான சிற்றலைகள் மற்ற இடத்தில் உருவாகும் சிற்றலைகளோடு இணைந்து அலையின் நீளம் கூடும். அலையின் ஆற்றல் அதிகரிக்க, அலையின் உயரமும் கூடும். கூடுதல் தொலைவு செல்லும்போது, சிற்றலை பேரலையாக மாறும்.

காற்றின் வேகம், காற்று வீசும் காலம், தொலைவு ஆகிய மூன்றும் அலைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன. எனவே குறைவான பரப்பளவு கொண்ட ஏரி, குளம், ஆறுகளில் குறிப்பிடத்தகுந்த வீரியத்துடன் அலைகள் ஏற்படுவதில்லை.

* மரங்களிலிருந்துதான் ஆக்சிஜனைப் பெறுகிறோம். அதிலிருந்து கிடைக்கும் விறகை வைத்துச் சமைத்தால் நன்மைதானே?

பி.ஜானகி, கோவை
.

உயிருள்ள மரம் தனது ஒளிச்சேர்க்கை வினையில் நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடை எடுத்து, அதில் உள்ள கார்பனை, கார்போஹைட்ரேட் வேதிப்பொருளாக மாற்றுகிறது. கார்பன் கொண்ட கார்போஹைட்ரேட் மரத்திலேயே தங்கிவிட, இந்த வேதிவினையின் எச்சமான ஆக்சிஜன் வெளியே வந்துவிடுகிறது. கார்போஹைட்ரேட் போன்ற பொருட்களை உட்கொண்டுதான் விதை அளவு சிறியதாக இருந்த மரம், பிரமாண்டமாக வளர்கிறது.

அந்த மரத்தை வெட்டி விறகாக எரிக்கும்போது, அதில் உள்ள கார்பன், காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிகிறது. வினையின் விளைவாக, கார்பன்டை ஆக்சைடு அல்லது கார்பன் மோனாக்சைடாக மாறுகிறது. அதாவது வளிமண்டல ஆக்சிஜன் அளவு குறையும்; கார்பன் அளவு கூடும். இது நன்மை அல்ல!

* மழைத் துளி இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பது ஏன்?

கே.நேதாஜி, 8ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி. மேல்நிலைப் பள்ளி, கோவை.


கண்ணீர்த்துளி போன்ற வடிவத்தில் மழைத் துளிகளை வரைவது தவறு. சிறு துளியாக இருக்கும்போது, மழை நீர் வடிவம் சற்றேறக்குறைய கோளவடிவமே. 0.2 செ.மீ.க்கும் குறைவான பருமனை உடைய துளிகளையே 'சிறுதுளி' என, வரையறை செய்கிறோம்.

பரப்பு இழுவிசை என்ற தன்மை, நீருக்குக் கூடுதலாக உண்டு. எனவே, அமைதியாக உள்ள நீரின் மீது மெதுவாக இரும்பு ஊசிகளை வைத்து, மிதக்கச் செய்ய முடியும். பரப்பு இழுவிசை காரணமாக, ரப்பர் மேல்தோல் போன்ற ஓர் அமைப்பு நீர்த் துளிக்கு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாகவே, மழைத்துளிகள் கோளவடிவத்தில் இருக்கின்றன.

சைக்கிளில் வேகமாகச் செல்லும்போது, காற்று வீசவில்லை என்றாலும், நமது முகத்தில் எதிர்காற்று வீசுவது போல இருக்கும். அதுபோலவே 0.2 செ.மீ.க்கும் 0.6 செ.மீ.க்கும் இடைப்பட்ட பருமன் உடைய மழைத்துளி கீழே விழும்போது, அதன் மீதும் எதிர்காற்று வீசும். எனவே, வீசும் எதிர்காற்றின் வினையால், அந்தத் துளியின் அடிப்பாகம் சற்றே தட்டையாக மாறி நீர்த்துளியின் வடிவம் கோளமாக மாறும்.

0.6 செ.மீ.க்கும் கூடுதல் பருமன் என்றால், காற்றின் வினையால் உடைந்து சிறுசிறு துளிகளாக மாறிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us