PUBLISHED ON : ஆக 12, 2019

உலகில் புதிதாகப் பல்வேறு வைரஸ் நோய்கள் உருவாகி மக்களைத் தாக்கி வருகின்றன. இதில் சில நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கான மருந்துகள் இன்னும் ஆய்வு அளவிலேயே இருக்கின்றன. கேரளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'நிபா' வைரஸ் குறித்த அச்சமே, இன்னும் மக்கள் மனத்தை விட்டு நீங்கவில்லை.
அடுத்து குஜராத் மாநிலக் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியுள்ளது 'சந்திபுரா' வைரஸ். இதை புனேவில் உள்ள NIV (The National Institute of Virology) உறுதி செய்திருக்கிறது. 5 முதல்
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே 'சந்திபுரா' வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உயிருக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வைரஸ், முதன்முதலில் 1965ஆ-ம் ஆண்டு மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதல் பற்றித் தெரியவந்தது. 'ஃபிளெபோடோமைன் சாண்ட்ஃப்ளை' (Phlebotomine sandfly) என்கிற ஒரு வகையான பெண் கொசு இனத்திடமிருந்து, இந்த வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றுகிறது.
இந்தியா, செனகல், நைஜீரியா ஆகிய நாடுகளில் உள்ள இந்த வகை கொசுக்களால் வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டில், இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் குழந்தைகளைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியது.
குப்பைக் கூளங்கள் மற்றும் தூசு அதிகமாகச் சேரும் வீட்டின் பகுதிகளில்தான் இந்தப் பூச்சி இனங்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, வீடு மற்றும் பொதுவெளிகளை சுகாதாரமாக வைத்திருந்தால், கொசுக்கள் பெருகாமல் தவிர்க்க முடியும்.
மழைக்காலம் நெருங்கி வரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்த வகை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- தன்யா

