PUBLISHED ON : நவ 11, 2019

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்.
1. மேக வெடிப்பு என்றால் என்ன?அதன் காரணம் என்ன?
சிவ.சபரிசக்திவேல், வேதியியல் மூன்றாமாண்டு, திருக்கோயிலூர், விழுப்புரம்.
மேக வெடிப்பு, மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும். இப்பகுதிகளின் புவியியல் அமைவிடம், பருவமழை (Monsoon)யின் தன்மை ஆகியவை முக்கிய காரணங்கள். ஒரு மணி நேரத்தில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தால் அது மேக வெடிப்பு எனப்படுகிறது. வெப்பமான காற்று, தரைப் பரப்பிலிருந்து மேலே எழுந்து மேகத்திலிருந்து விழும் மழைத் துளிகளைக் கீழே விழாமல் தடுத்து, மறுபடியும் மேகத்துக்குள்ளேயே செல்லச் செய்கிறது. வரம்புக்கு மீறி ரப்பரை இழுத்தால் அறுபடுவது போல, மேகத்தில் திரண்டு கொண்டே இருக்கும் மழை நீர் தாங்க முடியாத அளவு கூடி, திடீரென ஒரே சமயத்தில் கொட்டிவிடும். இதனால் எதிர்கொள்ள முடியாத அளவிற்குக் குறைந்த நேரத்தில் பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும். இதுவே மேக வெடிப்புப் பெருமழை. சுமார் ஒரு சில சதுர கிலோமீட்டர் அளவில் இதுபோல மழை பொழியும். ஓர் ஏக்கர் நிலத்தில் சுமார் 70,000 டன் நீர் சேரும் அளவுக்குக் கொட்டிவிடும்.
2. Donkey Power என்றால் என்ன? Donkey Powerஐ Horse Power மற்றும் Wattsஐ வைத்து எப்படி வழங்குவது?
பீ.சாமுவேல் ஜெபஸ், 8ஆம் வகுப்பு, சி.இ.ஓ.ஏ. பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை.
டாங்கி பவர் என்ற அலகு பயன்பாட்டில் இல்லை. வேடிக்கையாக உருவாக்கப்பட்ட அலகு இது. ஆயினும் 50 வாட் அதாவது 1/3 குதிரை சக்தியென இதை வரையறை செய்கின்றனர். எல்லா குதிரைகளும் ஒரே அளவு ஆற்றலை வெளிப்படுத்தாது என்றாலும், சராசரியைக் கணக்கிட்டுத்தான் குதிரை சக்தி வரையறை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குதிரை சக்தியின் அளவைக் கணக்கிட்டு தரம் (standardization) செய்துள்ளனர். இயந்திரத்தின் ஆற்றலை அளவிட இது பயன்படுகிறது. டாங்கி பவர் என்று யாரும் எங்கும் பயன்படுத்துவதில்லை. அதன் வரையறையும் சுமார் குத்துமதிப்பாகவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
3. மனிதர்களுக்கு ஆறறிவு மட்டுமே உள்ளது. ஏழாம் அறிவு கிடைத்தால் அது என்னவாக இருக்கும்?
அஜய் நாராயண், 10ஆம் வகுப்பு, சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
ஆறறிவு, ஏழாம் அறிவு என்பதெல்லாம் கவிதைக் கருத்தே தவிர அறிவியல் ரீதியான கருத்தே அல்ல. காட்சி, கேட்டல், தொடு உணர்வு, சுவை, முகர்தல் உணர்வு ஆகிய ஐந்து உணர்வுத் திறன்கள் மற்றும் பகுத்தறிவு ஆகிய ஆறு அறிவு கொண்டவர்கள் மனிதர்கள் என தொல்காப்பியம் கூறுகிறது. நவீன அறிவியலின்படி ஐந்து புலன்கள் தரும் அறிவைத் தவிர வலியை உணரும் தன்மை (nociception), வெப்ப நிலையை உணரும் தன்மை (thermoception), உடலைச் சமநிலையில் வைக்கும் தன்மை (equilibirioception) என்பன போல பல உணர்வுத் திறன்கள் உண்டு. 'புல்லும் மரனும் ஓர் அறிவினவே' என மரம் போன்ற தாவரங்களுக்கு ஓரறிவு அதாவது தொடு உணர்வு மட்டுமே உள்ளது என தொல்காப்பியம் கூறினாலும், மற்ற தாவரங்கள் வெளியிடும் வேதிப் பொருட்களை முகர்ந்து அறிந்து கொள்ளும் உணர்வும் தாவரங்களுக்கு உண்டு. தொடக்க நிலையில் அறிவியல் ஆய்வுகள் இருந்த காலத்தில் அன்றைக்குத் தெரிந்தவற்றை வைத்து வகுக்கப்பட்ட கருத்துதான் 'ஆறறிவு' எனும் கருத்து. ஆகவே, ஏழாம் அறிவு என்னவாக இருக்கும் என்று சரியாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
4.தாத்தாவைக் கொல்லும் பேரனின் முரண்பாடு (grandfather paradox) என்றால் என்ன?
பா.நரேன் கார்த்திக், அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
கடந்த காலத்துக்கு நம்மால் காலப் பயணம் செய்ய முடியும் என கொள்வோம். நிகழ்காலத்தில் வாழும் ஒருவர் தன்னுடைய தாத்தா குழந்தையாக இருந்த கடந்த காலத்துக்குக் காலப் பயணம் செய்கிறார். இவர் அங்கே சென்று செய்யும் ஒரு செயலால் தற்செயலாக அவருடைய தாத்தா இறந்து விடுவதாகக் கொள்வோம். குழந்தையாக இருந்தபோதே தாத்தா மடிந்து விடுகிறார். எனவே, அவர் திருமணம் செய்து குழந்தை பெற்று எடுக்க முடியாது. அதாவது காலப் பயணம் செய்த நபரின் தந்தையே பிறக்க மாட்டார். அப்போது காலப்பயணம் செய்தவர் எங்கிருந்து வந்தார்? இதுதான் தாத்தாவைக் கொல்லும் பேரனின் முரண்பாடு (grandfather paradox) என சார்பியல் தத்துவ ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் காலப்பயணம் சாத்தியமா? அப்படிச் சாத்தியம் ஆனால் தற்காலத்தில் நடந்துகொண்டு இருக்கும் ஒரு செயலின் கடந்த காலக் காரணத்தை அழித்துவிட முடியுமே. அதன் பிறகு தற்காலம் இப்போது உள்ள தற்காலமாக இருக்காதே என்ற கேள்விகள் எழுகின்றன. இவை எல்லாம் யூக ரீதியான ஆய்வுகள் நிலையில்தான் இன்று உள்ளன. நடைமுறையில் இந்த இயற்பியல் தத்துவங்களை நிறுவப் போதுமான சான்றுகள் இல்லை.
