PUBLISHED ON : நவ 11, 2019

கருவுற்ற பெண்கள், புகைக்கரி உள்ளிட்ட மாசுத் துகள்களைச் சுவாசிக்கின்றனர். இதனால், புகை, தாயின் நஞ்சுக்கொடி வரை செல்ல வாய்ப்பிருப்பதாக, பெல்ஜியத்தைச் சேர்ந்த ஹேசல்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் குறை மாதத்தில் பிறப்பதற்கும், குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் காற்று மாசுவுடன் நேரடித் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக நிரூபிப்பதற்கு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.
காற்று மாசு, தாயின் நுரையீரலைப் பாதித்தால், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற கருத்தே, இதுவரை சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், தூசி துகள்களின் தடங்கள் தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் அருகிலுள்ள தொப்புள் சார்ந்த பகுதியில் காணப்பட்டதாக, 'நேச்சர்' என்கிற அறிவியல் இதழ் தெரிவிக்கிறது.
தாயின் வயிற்றில் இருக்கும் 'பிளசண்டா' என்கிற நஞ்சுக் கொடி, குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துகளை வழங்கும். அதோடு, உடலுக்குக் கேடு விளைவிக்கும் தூசி துகள்கள் குழந்தையை அண்டாமல் தடுத்து நிறுத்திப் பாதுகாக்கும்.
பிளசண்டா செய்கிற இந்த அரும்பணியை பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.
புதிதாகக் குழந்தை பெற்ற 28 அம்மாக்களிடம் நஞ்சுக்கொடியை தானமாகப் பெற்ற ஆய்வாளர்கள், அவற்றை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.
அப்போது, காற்று மாசுபாடு அதிகமாக இருந்த பகுதிகளில் வசிக்கும் அம்மாக்களிடமிருந்து, பெறப்பட்ட நஞ்சுக் கொடியில் சேகரமாகி இருந்த கார்பன் துகளின் அளவு, காற்று மாசுபாடு குறைவாக இருக்கும் பகுதியில் வசிக்கும் அம்மாக்களின் நஞ்சுக் கொடியில் சேகரமாகி இருந்த கார்பன் துகளின் அளவைவிட அதிகமாக இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள்.
மேற்கண்ட ஆராய்ச்சி மூலம், காற்று மாசுபாட்டுக்கும், அதனால் கருவிலிருக்கும் குழந்தை அடையும் பாதிப்புக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வைப் புதிய திசையில் நகர்த்தியுள்ளது.
- காரா
