PUBLISHED ON : நவ 25, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. நிலவின் மறு பக்கத்தை பூமியில் இருந்து பார்க்க முடியாதது ஏன்?
எம்.ஹரி, 8ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி. உயர்நிலைப் பள்ளி, கோவை.
அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். நான்கு நிலைகளிலும் பூமியை நோக்கிய பகுதி ஒன்றுதான் என்றாலும், விண்வெளியில் அதன் திசை வேறு. இதற்குக் காரணம், நிலா தன்னைத்தானே சுற்றுவதும், புவியின் சுற்றுவட்டப் பாதையில் வருவதும் ஒரே நேரத்தில் நடப்பதுதான். இதனால் தொடர்ச்சியாக, நிலவின் ஒரு பக்கம் மட்டுமே நாம் காணக் கிடைக்கிறது. பூமியிலிருந்து நாம் காணும் பக்கத்துக்கு நியர் சைட் (Near side) அல்லது ஃபேஸ் ஆஃப் மூன் (Face of Moon) என்றும், காண இயலாத பக்கத்துக்கு டார்க் சைட் (Dark side) என்றும் பெயர்.
2. எவ்வித அடையாளம் கொண்டும் வேறுபடுத்த முடியாத இரட்டையர்கள் இருக்க வாய்ப்பு உண்டா?
கே.நேதாஜி, எஸ்.ஆர்.கே.வி. உயர்நிலைப் பள்ளி, கோவை.
எதிர்பாராதவிதமாக இரண்டாக உடையும் கருவின் பகுதிகள், தனித்தனி கருவாகப் பிரிந்து வளர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது. சிலநேரம், ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியாமல் இருந்தால், ஒட்டிக்கொண்டு கர்ப்பப் பையில் வளர்ந்து, குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிப் பிறப்பார்கள்.
இரட்டைக் குழந்தைகள், பார்க்க ஒரே மாதிரியாக இருந்தால், அவர்களில் சிலருக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ஆனால், கைரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும். முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு, இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரட்டையர்களில் ஒருவருக்கு என்ன நேர்கிறதோ அதே செயல் மற்றவருக்கும் ஏற்படும் என்பது பொதுக்கருத்து. ஆயினும், நடைமுறையில் அந்தந்த நபர்கள் சந்திக்கும் அனுபவம் வேறாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு அம்மை நோய் ஏற்பட்டு முகத்தில் வடு ஏற்படலாம்; அல்லது கீழே விழுந்து உடலில் தழும்பு ஏற்படலாம். இவ்வாறு இருவருக்கும் ஏதாவது நுணுக்கமான வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். சில சமயம் அந்த வித்தியாசம் எளிதில் புலப்படும்; சில சமயம் புலப்படாமல் போகலாம். எவ்வித வித்தியாசமும் இல்லாத இரட்டையர்கள் இருப்பது மிக அரிது.
3. ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களின் இரத்த வகை வெவ்வேறாக அமைவது எதனால்?
ஆ. மகாலட்சுமி, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
தாய், தந்தைக்கு ஒரே இரத்த வகை என்றாலும்கூட அவர்களது குழந்தைக்கு வேறு வகை இரத்தம் அமைய வாய்ப்புள்ளது. தாய்க்கும் தந்தைக்கும் வெவ்வேறு இரத்த வகை என்றால், குழந்தைக்கு வேறு வகையில் அமைய வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, தாய்க்கு A, தந்தைக்கு B என்று இருந்தால், குழந்தைக்கு A, B, AB மற்றும் O இரத்த வகையில் ஏதாவது ஒன்று இருக்கலாம். எனவே, அப்பா அல்லது அம்மாவுக்கு இருக்கும் அதே இரத்த வகைதான் குழந்தைக்கு இருக்க வேண்டும் என்பதில்லை.
4. கரப்பான்பூச்சி கவிழ்ந்து விழுந்துவிட்டால், மீண்டும் நிமிர முடியாதது ஏன்?
வி.ஸ்டெஃபிவின்ஸி, 7ஆம் வகுப்பு, புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பெரம்பூர், சென்னை.
பூச்சி இனங்களில் ஒன்று கரப்பான். ஹீமோகுளோபின் இல்லாததால் அதன் இரத்தம் வெண்மையாக இருக்கும். இதன் உடலமைப்பும் வித்தியாசமானது. அதன் உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுக்கள் உள்ளன. எனவே, தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் வாழும். தலையை இழப்பதால் பட்டினியால் மட்டுமே உயிர்விடும். தலைகீழாகக் கவிழும் கரப்பான் பூச்சி, தனது கால்களை மடக்கி, விரித்து, நேராவதற்கு விசையை ஏற்படுத்தி திரும்பி எழும். வயது மூப்பு அல்லது பல காலம் உணவு உண்ணாமை முதலியவற்றால் நலிவுற்று இருக்கும் கரப்பான்பூச்சியால் வேகமாகக் காலை மடக்கி அசைக்க முடியாது. இதன் காரணமாகவே கவிழ்ந்து கிடந்தால் மீண்டும் எழ முடியாமல் இருக்கிறது.
