தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : டிச 02, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. பறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக் கொள்கிறது?

த.சூரியகுமார், 9ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, ஏரிக்கரை, சென்னை.


நைட்டிங்கேல், குயில் போன்றவை பாடும் பறவைகளென அழைக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பறவைகளால் வார்த்தைகளை உச்சரிக்க முடியாது. இதனால் குயிலுக்கும் கிளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வீட்டில் வளரும் கிளி நமது பேச்சைக் கேட்டுப் பழகி, ஏறக்குறைய பேச்சைப் பின்பற்றி அதேபோல ஒலியை எழுப்பும்.

இதைத்தான் கிளி பேசுகிறது என்கிறோம். பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளைக்கூட பிழையில்லாமல் கிளி உச்சரிக்கும். வேறு சில பறவைகளுக்கும் இந்தத் திறன் உண்டு. கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கிக் கொள்கின்றன, உள்வாங்கிய குரலையும் வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி, அதே போன்று ஒலி எழுப்புகின்றன என்பதை, ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

டியூக் பல்கலைக்கழகத்தில் (Duke University) பணியாற்றும் முக்தா சக்ரவர்த்தியின் தலைமையில், இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. குயில்போல ஒலி எழுப்பக்கூடிய பறவைகளின் மூளைப்பகுதியைவிட, மனிதக் குரல்களைப் பாசாங்கு செய்யும் கிளி போன்ற பறவைகளின் மூளை அமைப்பு சற்றே தடித்த அளவில் உள்ளது. தற்செயலாக மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவே, இந்தப் பரிணாமம் என்கிறார்கள். இதே போன்ற ஒரு தற்செயல் பரிணாம மரபணு மாற்றம்தான் மனிதர்களுக்கும் பேசும் திறன் அளித்துள்ளது.

2. சூரியன், விண்வெளி, பால்வெளி, நட்சத்திரக் கூட்டம் இல்லாத பூமி எப்படி இருக்கும்?

எஸ்.கே.ராகுல், 8ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி. உயர்நிலைப் பள்ளி, கோவை.


பகலில் ஒளிரும் சூரியன், வானில் பல்வேறு வானக்காட்சியை ஏற்படுத்துகிறது. காலை தோன்றும்போதும் மாலை மறையும்போதும் சூரியனிடமிருந்து செங்கதிர் புலப்படுகிறது. நிலவு, விண்மீன் ஏதுமற்ற இரவு வானம் கருமையாகக் காட்சி தரும். வேறு விண்மீன்கள் ஏதுமில்லை என்றால், பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை என்று பொருள். விண்மீன்கள் போன்றவை இல்லையென்றால், வானியல் போன்ற ஆய்வுகளே சாத்தியம் இல்லை. பூமி, சூரியனைச் சுற்றுகிறதா அல்லது சூரியன், பூமியைச் சுற்றுகிறதா என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட உறுதியான விடை கிடைக்காது. அப்படிப்பட்ட வெற்று பூமி மிகவும் ரசனையற்றதாகவே இருக்கும்.

3. டெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா?

அஜய்நாராயண், 10ஆம் வகுப்பு, சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை
.

ஏடிஸ் (Aedes aegypti) என்னும் கொசுவால் பரவக்கூடிய வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நன்னீர் நிறைந்த அணைகளில் மட்டுமன்றி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும். ஆனால், இந்த ஏடிஸ் கொசுக்களால் அதிக தூரம் பறக்க முடியாது. அதிகபட்சமாக 150 மீட்டர் மட்டுமே பறக்கும். எனவேதான், நம் வீட்டைச் சுற்றி நமக்கு வெகு நெருக்கமாக உள்ள நீரில் உற்பத்தியாகும் கொசுவே அதிக ஆபத்து. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே மேற்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள காலி இடங்களில் கிடக்கும் டயர்கள், குப்பைகள், தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், குடம், வாளி போன்ற நீரில் இருந்தும் கொசு உற்பத்தியாகும் என்பதால், நீரைச் சேமிக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் மூடிவைக்க வேண்டும்.

4. பூமியில் இருந்தவாறு மற்ற கோள்களின் ஈர்ப்பு சக்தியை விஞ்ஞானிகள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?

எஸ்.சக்திவேல், திருப்பூர்.


ஒவ்வொரு கோளின் ஈர்ப்பு விசையும் அதன் நிறையைப் பொறுத்து அமையும் என்பதால், முதலில் அதன் நிறையைக் கணக்கிட வேண்டும். பூமியின் நிறையைக் கணக்கிட நியூட்டன் விதி உதவும். இது F=GmM/r^2=ma [இங்கே a=g]. m என்பது பூமியின் நிறை; M என்பது ஈர்க்கப்படும் பொருளின் நிறை; r என்பது புவியின் ஆரம்; G என்பது ஈர்ப்பு விசை மாறிலி (6.673×10-11 Nm2/kg2). பூமியின் தரைப்பரப்புக்கு அருகே புவி ஈர்ப்பு விசையின் அளவு g=9.8 m/s2 என நாம் அறிவோம்.

எனவே இதை Gm/r2 = g= 9.8 m/s2 என கூறலாம்.

அதாவது, m= gr2/G

m = (9.8 m/s2)(6.37×106 m)2/(6.673×10-11 Nm2/kg2)

m = 5.96×1024 kg

இப்போது பூமியின் நிறையைக் கண்டுபிடித்து விட்டோம். இவ்வளவு நிறை கொண்ட பூமி, ஓராண்டில் சூரியனிலிருந்து 149.6 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றுகிறது என்றால், சூரியனின் நிறை என்ன என கணக்கிட முடியும். இவ்வாறு சூரியனின் நிறையைக் கணக்கிட்ட பின், புதன் கோள், சூரியனை 88 நாட்களில் சுற்றுகிறது என்றால் எவ்வளவு நிறையுடன் இருக்கும் என கணக்கிட முடியும். இவ்வாறுதான் கோள்களின் நிறையை மதிப்பீடு செய்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us