தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1.விண்வெளி மையங்கள் அனைத்தும் ஊருக்கு வெளியில் ஏன் தீவுகளில் அமைந்துள்ளன?

சூ.இ.வருண் ஆதித்யா, 8ஆம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, மதுரை.


உலகில் மொத்தம் 32 விண்வெளி ஏவுதளங்கள் உள்ளன. இவற்றை ஸ்பேஸ்போர்ட் அல்லது காஸ்மோடார்ம் என்கிறார்கள். இதிலிருந்து புறப்படும் ராக்கெட்டுகள் செயற்கைகோள்களை ஏந்திச் செல்லும். விண்வெளிக்குச் செல்லாமல் வானில் வெகு தொலைவு செல்லும் ராக்கெட் ஏவும் இடங்களை, ராக்கெட் ஏவுதளங்கள் என்கிறார்கள்.

விண்வெளிக்கு முதன்முறை சென்ற செயற்கைக்கோள் ஸ்புட்னிக்1 மற்றும் மனிதரைச் சுமந்து சென்ற முதல் விண்கலம் வஸ்தோக் 1. இதை ஏவியது கஜகஸ்தானில் உள்ள பைக்கனூர் (Baikonur) விண்வெளி ஏவுதளம் தான். உலகின் முதல் மற்றும் மிகப் பெரியதுமான இந்த ஏவுதளம், தீவாக இல்லை. பாலைப் புல்வெளியில் ஏரல் கடலுக்கு கிழக்கில் உள்ளது.

அமெரிக்காவின் முதல் விண்வெளி ஏவுதளம், கேப் கேனவரல். இதன் கிழக்கே கடல் உள்ளது என்றாலும், தீவு இல்லை. இதன் அருகே மெரியட் தீவில், ஜான் எஃப் கென்னடி விண்வெளி மையம் அமைந்துள்ளது. சீனாவின் ஜிகுவான் (Jiuquan) விண்வெளி ஏவுதளம், கோபி பாலைவனத்தில் உள்ளது. இவை நான்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய விண்வெளி ஏவுதளங்கள்.

இந்தியாவின் தும்பாவில் அமைக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளம், விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகளை ஏவவில்லை. பூமியின் வெகு உயரே சென்று ஆய்வுசெய்யும் ராக்கெட்டுகளை மட்டுமே ஏவியது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் மற்றொரு ஏவுதளம் உள்ளது. இதுவும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவுவது இல்லை.

அந்த வகையில், வெகு சில ஏவுதளங்கள் மட்டுமே தீவுகளில் உள்ளன. பெரும்பான்மை ஏவுதளங்கள் கடல் அல்லது பாலைவனப் பகுதிகளில் உள்ளன. மற்ற கிரகங்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் அல்லது புவிநிலை சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும் செயற்கைக்கோள் முதலியவற்றை ஏவும்போது, கிழக்கு நோக்கி ஏவினால் பூமியின் மேற்கு கிழக்கு சுழற்சியும் ராக்கெட்டுக்கு கூடுதல் உந்துதல் தரும். குறைந்த எரிபொருள் செலவில் விண்வெளிக்குச் செல்லலாம். எனவேதான், விண்வெளி ஏவுதளங்களை கிழக்கில் கடல் அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் அமையுமாறு தேர்வு செய்கிறார்கள்.

2. மனிதனின் கை, கால்கள் ஒரே அளவில் வளர்வது எவ்வாறு?

டி.ஸ்ரீதர், 8ஆம் வகுப்பு, ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, உளுந்தூர்பேட்டை.


நம் பார்வைக்கு இரண்டு கால்களின் அளவும் சமம் என்று தோன்றலாம். ஆனால், ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டு கால்களின் நீளத்துக்கும் சற்றே வித்தியாசம் இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு சேர வருபவரை ஆராய்ந்து பார்த்த ஓர் ஆய்வில், சுமார் 32 சதவீதத்தினரின் இரண்டு கால்களும் ஒரே அளவாக இருக்கவில்லை. அரை செ.மீ. அளவுக்கு மேல் வித்தியாசமாக இருந்தது. சீனாவில் இரண்டு லட்சம் நபர்களின் கை, கால்களின் அளவுகளை ஆராய்ந்து பார்த்ததில், 80 சதவீதம் சமம்; 17 சதவீதம் ஒரு கை நீண்டவர்கள்; 3 சதவீதம் ஒரு கால் நீண்டவர்களாக இருந்தனர்.

சிறு வித்தியாசங்களை ஒதுக்கிவைத்துப் பார்த்தால், கை, கால்களின் நீளம் சற்றேறக்குறைய ஒன்றுதான். எலும்பு வளர்ந்து நீண்டால் கால் நீளமாகும். எலும்பு வளர்வது நின்றால் கால் நீளமாவது நின்றுபோகும். எலும்புகளில் உள்ள குருத்தெலும்பு பகுதியில்தான் எலும்பு செல்கள் உருவாகின்றன. அவை தீர்ந்து போகும்வரை எலும்பு வளர்ச்சி இருக்கும். நோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரே அளவில்தான் புதிய எலும்பு செல்கள் உருவாகும். எனவே, இரண்டு கால், கைகளின் நீளமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே அமைந்துவிடுகிறது.

3. மூடி வைப்பதாலேயே சில பழங்கள் பழுத்து விடுவது எதனால்?

கே.தாமரைச்செல்வி, 4ஆம் வகுப்பு, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.


குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் காய் உள்ளபோது, இயல்பிலேயே எத்திலீன் (Ethylene) வாயுவை உமிழும். இந்த எத்திலீன் வேதிப்பொருள்தான் காய்களைப் பழுக்கச் செய்கிறது. காய் வெளியிடும் எத்திலீன் அதைச் சுற்றிப் படரும். அதைச் சுவாசிக்கும் காய், பழுக்கும். திறந்தவெளியில் வைத்தால், வீசும் மென்காற்றுகூட காயைச் சுற்றியுள்ள எத்திலீன் வாயுப் படலத்தைச் சிதைத்துவிடலாம். எனவே, எளிதில் பழுக்காது. மூடி வைத்தால் காய் உமிழும் எத்திலீன் வாயு அங்கேயே அடைபட்டுக் கிடக்கும். மேன்மேலும் காய் வெளியிடும் எத்திலீன் காரணமாக, அதைச் சுற்றி எத்திலீன் செறிவு கூடும். இதனால் பழமாகும் வினை வேகம் கொண்டு விரைவாகப் பழுத்து விடுகிறது.

செயற்கையாக பழுக்கவைக்க, கால்சியம் கார்பனேட் என்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர். இந்த வேதிப்பொருள் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து, அசெட்டிலீன் (Acetylene) வாயுவை உருவாக்குகிறது. வேதியியல்படி, அசெட்டிலீன் வாயு எத்திலீன் வாயுக்கு நெருங்கிய வேதிப்பண்பு கொண்டது. எனவேதான், அசெட்டிலீன் தூண்டி பழம் விரைவாகப் பழுக்கிறது. ஆனால், இப்படி அசெட்டிலீன் கொண்டு செயற்கையாகப் பழுக்க வைப்பது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவேதான் பல இடங்களில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

4. மேகக் கூட்டங்களில் உயிரினங்கள் இருக்குமா?

நிரஞ்சனா, 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.


சமீப காலம் வரை ஆகாயத்தில் உயிரிகள் இல்லை என்றுதான் நம்பப்பட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் வளிமண்டலத்திலும் உயிரிகள் உள்ளன என நிறுவியுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி, ஆண்டுதோறும், சுமார் இருபது லட்சம் டன் பாக்டீரியா காற்றின் வழியே ஆகாயத்துக்கு அடித்துச் செல்லப்படுகிறது. மேலும் சுமார் 5.5 கோடி டன் பூஞ்சை வகைகள் ஆகாயத்துக்கு ஆண்டுதோறும் அடித்துச் செல்லப்படுகின்றன என்கின்றனர். மேகத்தில் ஆவி சுருங்குதல் வழி நீராவி ஐஸ் படிகமாக மாறி, மழை பொழிவதற்கு மேகத்தில் உள்ள நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us