PUBLISHED ON : டிச 23, 2019
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கௌன்சில் (Indian Council of Medical Research - ICMR) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையின்படி, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு, உடலில் கொழுப்பு கூடுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றது. இப்பாதிப்புகள், 1990ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 10 முதல் 25 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், பீட்சா, பர்கர், கிராக்கர்ஸ் (Crackers) போன்ற உணவுகளின் விற்பனை, தொடர்ச்சியாக ஏற்றம் கண்டே வருகிறது. ஆனால், அவற்றைச் சாப்பிடுவதற்கு முன், ஒரு முறைக்குப் பல முறை சிந்திக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ஏனென்றால், இதில் இருக்கக்கூடிய அதிக அளவிலான உப்பு, கொழுப்பு போன்றவை கடுமையான ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகின்றன.
உதாரணத்திற்கு சிப்ஸ், நம்கீன் போன்ற எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளில் அதிக அளவு உப்பும் கொழுப்பும் இருக்கின்றன. அதேபோல, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப் போன்றவற்றிலும் அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க, உப்பு உதவுகிறது. இந்த உணவுப் பண்டங்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு மேற்சொன்னது போன்ற நோய்கள் வந்தால், அதைச் சமாளித்து வாழ்வதென்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். டில்லியைச் சேர்ந்த மஞ்ஜீத் சிங் என்பவரது பதினோரு வயது மகன், துரித உணவுகளையும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் அதிக அளவில் உண்டு வந்திருக்கிறான். ஒரு கட்டத்தில் கண்களில் இரண்டு இரண்டாகக் காட்சிகள் தெரிவது, அடிக்கடி தலைவலி உண்டாவது போன்ற பிரச்னைகள் அவனுக்கு ஏற்பட்டன. சிறுவனின் உடல் எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்று சொன்ன மருத்துவர், உணவில் உப்பு குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்தச் சிறுவனிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் மீண்டும் துரித உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தால், இதய நோய் உடனே வந்துவிடும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
- நன்றி: Down to earth
