PUBLISHED ON : ஜன 06, 2020

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. நீரில் மூழ்கியபடியே பலூனை ஊத முடியுமா?
வி.ஸ்டெஃபி வின்ஸி, 7ஆம் வகுப்பு, புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பெரம்பூர், சென்னை.
நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்யும்போது அது கடலுக்கு உள்ளே இருந்தாலும் பலூன் ஊதலாம். மூச்சுப் பிடித்து நீருக்குள் சென்று, நமது நுரையீரலுக்குள் இருக்கும் காற்றைப் பலூனுக்குள் செலுத்த முடியும். ஆனால், மூச்சுப் பிடித்து வைத்த காற்றை வெளியே விட்டுவிட்டால், நமக்கு மூச்சு வாங்கும். ஆனாலும் ஓரளவு காற்றை பலூனுக்குள் செலுத்தலாம்தான். நீருக்குள் பலூனை வைத்து அதன் வாயில் காற்று அடைக்கும் பம்ப்பை வைத்து காற்றைச் செலுத்த முடியும். நீருக்குள் அழுத்தம் அதிகம் என்பதால், நீரினுள்ளே பலூன் பெரிதாக விரிவடையாது.
2. பாகற்காய், கீரை போன்றவற்றை இரவில் சாப்பிடக் கூடாது என்று சொல்வது ஏன்?
ஏ.மாணிக்கம், 10ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.
இது ஒரு கருத்துதான். இவ்வாறு உண்ணக்கூடாது என்று விளக்கும் வகையில் ஆய்வுகள் ஏதுமில்லை. பலர் இரவில் பாகற்காய், கீரை போன்றவற்றை உண்கிறார்கள். ஆயினும் சில வகை உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும் எனவும், சில வகை நிம்மதியான உறக்கத்தைத் தரும் எனவும் ஓர் ஆய்வு சுட்டுகிறது. இரவில் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் அடுத்த நாள் சரியான உணவை உண்பார்கள் எனவும், உறக்கம் கெட்டுப்போனால் கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து மிகுந்த உணவை அதிக அளவில் உண்பார்கள் எனவும் ஓர் ஆய்வு கூறுகிறது.
வாழைப்பழம், பெரிய வகை பழங்கள் இரவு உறக்கத்துக்கு நல்லது. அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்கள் உடலில் ஆற்றலை கூடச்செய்து இயக்கத்தில் வைத்து இருக்கும். எனவே, எளிதில் தூக்கம் வராது.
சிறுவர்கள் இரவில் சாக்லேட் உண்டால் எளிதில் உறக்கம் வராமல் தவிப்பது இதனால்தான். நார்ச்சத்துள்ள பொருட்கள் நல்லது எனவும் இவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் இத்தகைய ஆய்வுகள் தொடக்க நிலையில் தான் உள்ளன. எந்த உணவு எப்போது உண்பது சிறந்தது என்பதற்கு, போதிய அறிவியல் ஆய்வுகள் இதுவரை இல்லை.
3. மக்கள்தொகை பெருக்கத்தால் காற்றிலுள்ள ஆக்சிஜன் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்புண்டா?
ஆர்.கிருதியா, 4ஆம் வகுப்பு, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.
சராசரி மனிதர் ஒரு நிமிடத்தில் சுமார் 7இல் இருந்து 8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். இதில் சுமார் 20 சதவீதம் ஆக்சிஜன் இருக்கும். உள்வாங்கும் ஆக்சிஜனில் வெறும் நான்கில் ஒரு பங்கை மட்டுமே நமது உடல் உள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. மீதமுள்ள மூன்று பகுதி வெளியே விடும் மூச்சுக் காற்றில் வந்துவிடுகிறது. எனவே, ஒரு நாளைக்கு சராசரி நபர், சுமார் 550 லிட்டர் ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு வடிவில் வெளியே வந்துவிடுகிறது.
ஒளிச்சேர்க்கை நிகழ்வின் படி தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை உமிழ்கிறது என, நாம் அறிவோம். சுமார் 50 செ.மீ. சுற்றளவு கொண்ட 30 - -40 மீட்டர் உயரமான மரம் ஒரு நாளைக்கு சுமார் 92 லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கிறது. அதாவது சுமார் ஏழு மரம் ஒரு நபரின் தினசரி ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.
உலகில் சுமார் 400 பில்லியன் மரங்கள் உள்ளன என செயற்கைக்கோள்கள் அளிக்கும் தரவுகளை வைத்து மதிப்பீடு செய்யும்போது தெரியவருகிறது.
அதாவது, சுமார் 57 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உலக மரங்கள் ஆண்டுதோறும் வெளியிடுகின்றன. தற்போது உலக மக்கள்தொகை வெறும் 7.7 பில்லியன் மட்டுமே.
அதுபோக, பிற உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் தேவை. கார் போன்ற இஞ்சின்கள் இயங்க ஆக்சிஜன் தேவை. நெருப்பு பற்றவைக்க ஆக்சிஜன் தேவை.
பல்வேறு படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் காரணமாக, வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு ஆண்டுதோறும் சுமார் 2.2 ppm அளவுக்கு உயர்கிறது என, ஓர் ஆய்வு கூறுகிறது.
அதாவது ஆக்சிஜன் அளவும் குறைகிறது என்பது பொருள். இப்படியே போனால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர், ஆக்சிஜன் அளவு இன்றைய நிலையைவிட 1% குறைந்து போகும். எனவே, இது உடனடி ஆபத்து அல்ல.
4. இயற்கையாக விளைவதுபோல், ஹைபிரிட் காய்கறிகளும் சத்தானவையா?
த.தர்மேஷ், 10ஆம் வகுப்பு, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, காஞ்சிபுரம்.
பொத்தாம் பொதுவாக இந்தக் கேள்விக்கு விடை தரமுடியாது. எடுத்துக்காட்டாக, நிலத்தில் நுண்ணூட்டச் சத்து குறைவாக உள்ள பகுதியில் இயற்கையாகவே விளைந்தாலும் அந்தக் காய்கறிகளில் சில தாதுப்பொருட்கள் குறைவாக இருக்கலாம். சில சமயம் செறிவாக அமையலாம். மண்வளத்தைப் பொறுத்து ஆங்காங்கே விளையும் காய்கறிகளில் வித்தியாசம் ஏற்படும். எனவேதான், குறிப்பிட்ட இடத்தில் விளையும் மஞ்சள் பிரகாசமாகவும், சில இடங்களில் அவ்வளவு நிறம் இல்லாமலும் இருக்கிறது. மண்ணில் உள்ள வளங்களே காய்கறிகளில் சென்று சத்தாகக் குவிகிறது. எனவே, மண் வளம் இழந்த பகுதிகளில் செயற்கையாகப் பல்வேறு முறைகளில் மண்வளத்தைக் கூட்ட வேண்டியுள்ளது. எரு இடுதல், தழைகளை இட்டுச் சத்து சேர்த்தல், அளவோடு உரம் இடுதல் எல்லாம் பயன்தரும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதுபோல் எந்த வகைக் காய்கறியாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உரம் இட்டால் தீங்கு ஏற்படலாம்.
