
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. சாலையில் மின்காந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வாகனங்கள் பயணித்தால் எரிபொருள் தேவை இருக்காது அல்லவா?
அ.ஜீவைரியா பானு, 11ஆம் வகுப்பு, பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பழனி.
பியேரி கியூரி (Pierre Curie) மற்றும் அவரது அண்ணன் ஜாக்விஸ் (Jacques) இணைந்து ஒரு விளைவைக் கண்டுபிடித்தார்கள். சில படிகங்கள் அல்லது பீங்கான் பொருட்களை அழுத்தினால், அவை மின்னூட்டத்தை ஏற்படுத்தின. அதே பொருட்களின் மீது மின்சாரம் செலுத்தினால் அவை நசுங்கி அழுந்தின. இதற்கு அழுத்த மின் விளைவு (Piezo Electric) என்று பெயர்.
அழுத்த மின்னூட்டப் பொருளின் மீது வாகனங்கள் செல்லும்போது மின்சாரம் உருவாகும். இங்கிலாந்து பேராசிரியர் முஹமது ஸாஃபி (Mohamed Saafi) மணிக்கு சுமார் 2,000 அல்லது 3,000 வாகனங்கள் சென்றால் ஒன்று இரண்டு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றார். இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை வைத்து, சுமார் 2,000 முதல் 4,000 தெரு விளக்குகளை எரிய வைக்கலாம்.
சாலைகளில் வாகனங்கள் செல்வதால், பள்ளங்கள், குழிகள் ஏற்படுகின்றன. அதேபோல, அழுத்த மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருட்களை சாலையில் பொருத்தினால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை உறுதிசெய்ய முடியாது. அவ்வப்போது பொருள் சிதைந்தால் சாலையைச் சீர் செய்யவேண்டி வரும். எனவே, நீண்ட காலம் நின்று செயற்படும் புது வகை அழுத்த மின்சாரப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் வரை இந்த முயற்சி ஆய்வு அளவில் மட்டுமே இருக்க முடியும்.
2. இந்தியா தீபகற்ப நாடாக இருந்தும், மழை குறையக் காரணம் என்ன?
சே.ஜோயல் ரொனால்ட், 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
ஆண்டுக்குப் பொழியும் சராசரி மழையின் அளவில் உலக நாடுகளைப் பட்டியல் இட்டால் முதலில் இருப்பது கொலம்பியா (3,240 மி.மீ.) அடுத்ததாக, இந்தோனேஷியா (2,702 மி.மீ.) இந்தியா (1,083 மி.மீ.) ஆகியவை இருக்கின்றன. சீனாவில் 645 மி.மீ., லிபியாவில் 56 மி.மீ., எகிப்தில் வெறும் 51 மி.மீ. மழை மட்டுமே பொழிகிறது.
இந்தியாவில் அந்தமான் தீவுகளில் 2,967 மி.மீ., மேகாலயா 2,818 மி.மீ., மழை பொழிகிறது. தமிழ்நாட்டில் 998 மி.மீ. மழை பொழியும்போது கேரளத்தில் 3,055 மி.மீ., மேற்கு இராஜஸ்தானில் 313 மி.மீ. மட்டுமே பொழிகிறது.
உலகில் எங்கே எவ்வளவு மழை பொழியும் என்பது, பல்வேறு காரணிகளோடு தொடர்புடையது. நிலநடுக்கோட்டுக்கு அருகே அதிக மழையும், துருவங்கள் அருகே குறைவான மழையும் பொழியும். மேலும், கடலுக்கு அருகே உள்ள பகுதியில் கூடுதல் மழை இருக்கும். பருவக்காற்று வீசும் திசை வழியில் இடர்படும் மலைகள் போன்ற புவியமைப்பு ஆகியவையும் எவ்வளவு மழை பொழியும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
3. ஒரு ராக்கெட்டில் பல செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்வது எப்படி சாத்தியம்?
பா.குருநாத், 11ஆம் வகுப்பு, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.
ஓடும் பேருந்தில் இருந்து நான்கு பேர் குதிக்கிறார்கள் என்றால், எல்லோரும் ஒரே நேரத்தில் குதிக்க மாட்டார்கள். முதலில் ஒருவர் குதித்த பின்னரே மற்றவர் குதிப்பார். இடைவெளி இல்லாமல் மொத்தமாகக் குதித்தால் அனைவரும் விழுந்து விடுவார்கள். அதுபோலவே வரிசையாக செயற்கைக்கோள்கள் அடுக்கப்பட்டு ராக்கெட்டில் இருந்து ஒவ்வொன்றாக வெளியே தள்ளப்படும். தள்ளு விசை தருவதற்கு ஸ்பிரிங் அல்லது சிறு வெடி அமைப்பு இருக்கும்.
ஏவப்பட்ட 2 நிமிடம் 40 நொடிகளில் ராக்கெட் சுமார் நூறு கி.மீ. உயரத்துக்குச் சென்றுவிடும். அந்த நிலையில், மூக்கு போன்ற அமைப்பு திறக்கப்படும். ஏவப்பட்ட 16 நிமிடம் 26 நொடிக்குள் சுமார் 578 கி.மீ. உயரம் செல்லும்போது, அடுக்கி வைக்கப்பட்ட விண்கலங்களில் முதலாவதைப் தள்ளிவிடும். அதன் பின்னர், ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தள்ளிவிடும். கடைசியாக சுமார் 21 நிமிடங்கள் 19 நொடிகள் கடந்தபின், கடைசி விண்கலம் விண்ணில் செலுத்தப்படும்.
ராக்கெட்டின் மொத்த எடையில் சுமார் 86% எடை அதன் எரிபொருள். அதன் கட்டுமானம் 13% எடை. செயற்கைக்கோள் போன்ற உபயோகமான பொருட்களின் எடை 1% தான் இருக்கும். 600 கி.மீ. உயரத்தில் உள்ள சூரியப் பாதைக்கு 1,750 கிலோ விண்வெளிச் சுமையை எடுத்துச் செல்ல முடியும்.
4. சிறு துளை வழியாக வெளியேறும் நீர் தொடர்ச்சியாக இல்லாமல் திவலைகளாக வெளியேறுவது ஏன்?
கே.நேதாஜி, 8ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.கே.வி.உயர்நிலைப் பள்ளி, கோவை.
நீர் என்பது H--O-H (H2O) என்ற வடிவில் பிணைந்து இருக்கும். Hஇன் ஒரு எலெக்ட்ரான் O வுடன் சென்று விடுகிறது. எனவே, எலெக்ட்ரான் இல்லாத H நேர்மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது. கூடுதல் எலெக்ட்ரான் கொண்ட O எதிர் மின்னேற்றம் கொண்டதாக மாறிவிடுகிறது. எதிர் எதிர் மின்னேற்றம் கொண்ட துகள்கள், ஒன்றை ஒன்று ஈர்க்கும். அதனால் H, O ஒன்றை ஒன்று கவர்கின்றன. அதே போல O, H ஒன்றையொன்று பிணைந்து கடைசியில் H--O-H என்று ஆகிறது. இப்போது O எதிர் மின்னேற்றம் கொண்டது. அந்த மின்னேற்றம் அதன் தலைப்பகுதியில் இருக்கும். அதே போல Hகளில் நேர் மின்னேற்றம் அதன் கால் பகுதியில் இருக்கும். நீர்த் திவலை என்பது பல கோடி நீர் மூலக்கூறுகள் கொண்டவை. எனவே, H--O-Hகள் ஒன்றையொன்று ஓர் ஒழுங்கு அமைப்பில் பிணையும். இதன் காரணமாகவே, நீருக்கு பரப்பு இழுவிசை ஏற்படுகிறது. பரப்பு இழுவிசை காரணமாக, சிறு துளை வழியாக வெளியேறும் நீர் திவலைகளாகத் திரள்கிறது.

