sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வெங்கியை கேளுங்க!

/

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : பிப் 10, 2020

Google News

PUBLISHED ON : பிப் 10, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. அப்படி இருக்க எதன் அடிப்படையில் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைவதாகச் சொல்கிறோம்?

எம்.லித்திகேஷ், 5ஆம் வகுப்பு, சீனிவாசா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.


சூரியன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. எனவே பூமியின் மீது குறிப்பிட்ட புள்ளியில் நாம் இருக்கும்போது கிழக்கே சூரியன் உதித்து மேற்கே மறைவது போலத் தென்படுகிறது. பஸ் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது, தொலைவில் உள்ள தந்திக் கம்பங்கள் பின்னோக்கிச் செல்வது போல தோற்ற மயக்கம் ஏற்படும். இவ்வாறுதான் சூரியன் உதித்து மறையும் நிகழ்வும் ஏற்படுகிறது.

நடு இரவு பன்னிரண்டு மணி என்றால், சூரியன் நம் காலடி திசையில் பூமியின் மறுபக்கத்தில் உள்ளது என்று பொருள். பூமி தன்னைத் தானே சுற்றி வரும்போது சூரியனை நோக்கி நாம் இருக்கும் புள்ளி நகரும். குறிப்பிட்ட கட்டத்தில் நாம் இருக்கும் புள்ளியின் அடிவானத்தில் சூரியன் தென்படும். இதைதான் சூரியன் உதிக்கிறது என்கிறோம். பின்னர் நமது புள்ளி சூரியனை நோக்கிச் சுழலும். எனவே வானில் சூரியன் உள்ள கோணம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் கோணம் சுமார் தொண்ணூறு டிகிரி வரும்போது, சூரியன் நமது தலைக்கு மேலே இருக்கும். இதுவே நடுப்பகல். பின்னர் மேற்கு திசையில் சூரியனது கோணம் குறைந்துகொண்டே செல்லும். இறுதியில் மேற்கு அடிவானில் சூரியன் காட்சி தருவதை சூரியன் மறைகிறது என்கிறோம். அதன் பின்னர் இரவு சூழ்ந்துவிடும். சூரியன் பூமியின் மறுபக்கம் நோக்கி இருக்கும்.

2. மூளையின் செயற்பாட்டைத் தூண்டக்கூடிய அல்லது சக்தி தரக்கூடிய உணவுகள் இருக்கின்றனவா?

சீ.மணியாழினி, 8ஆம் வகுப்பு, ஹயக்ரீவா மேல்நிலைப் பள்ளி, கடமலைக்குண்டு, தேனி.


மூளையின் செயற்பாட்டைத் தூண்டி அதிசக்தி வாய்ந்த மூளையாக மாற்றக் கூடிய அதிசய உணவு ஏதும் இல்லை. எலும்புகள் வளர கால்சியம் தேவை. பாலில் கால்சியம் உள்ளது. உடலில் இரும்புச் சத்து குறைந்தால், ரத்தத்தில் இருக்கவேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். பச்சைக் கீரை வகைகள் இரும்புச் சத்தை தரும். அதுபோல மூளை வளர்ச்சிக்குத் தேவையான சில பொருள்கள் பல உணவுப் பொருள்களில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஆன்டிஆக்ஸிடன்டுகள் பழங்களில் உள்ளன. கரோட்டின் சத்து கொண்டுள்ள கேரட் போன்ற பல்வேறு நிறங்களில் உள்ள காய் கனிகள் வைட்டமின் கே தரும். வால்நட், மீன் போன்ற உணவுகளில் ஒமேகா 3 என்ற நல்ல கொழுப்பு பொருள் உள்ளது. எதுவாக இருந்தாலும் சரியான சமவிகித உணவே சரியானது. சிலருக்கு மருத்துவக் காரணங்களால் குறிப்பிட்ட தாதுப் பொருள் அல்லது நுண் ஊட்டம் குறைவு என்றால் மருத்துவரின் பரிந்துரையால் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

3. நீலத்தடி நீரின் சுவை, ஒவ்வொரு பகுதிகளிலும் வேறுபடுவதன் காரணம் என்ன?

கெ.போ.ராகுல் ஜிஷ்ணு, 8ஆம் வகுப்பு, சௌராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை
.

நீர் என்று கூறும்போது இரண்டு அர்த்தத்தில் பொருள் கொள்கிறோம். ஒன்று வேதியியல்படி, நாம் படித்த H2O. இரண்டாவது நாம் குடிக்க பயன்படுத்தும் பல்வேறு வகை தண்ணீர்.

தூய H2Oவுக்கு நிறம், மணம் சுவை ஏதும் கிடையாது. ஆனால் ஆய்வகம் போன்ற சூழலில் மட்டுமே தூய H2O வைத் தயார் செய்கிறோம். சிறப்பு பயனுக்கு மட்டுமே உபயோகப்படுத்துகிறோம். தாகம் தீர்க்க தூய H2Oவைப் பயன்படுத்த முடியாது.

குறிப்பிட்ட இடத்தில் உள்ள கிணறு அல்லது ஆழ் துளைக் கிணற்றிலிருந்து நிலத்தடி நீரை எடுக்கும்போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரையே எடுக்கிறோம். மண்ணில் எளிதில் கரையக் கூடிய பொருள்கள் எல்லாம் கரைந்து அந்தத் தண்ணீர் கலவையாகவே இருக்கும். அந்தத் தாதுப் பொருள்கள் தான் நீருக்குச் சுவையைத் தருகின்றன. உலகில் எல்லா இடங்களிலும் மண் அமைப்பு ஒரேவிதமாக இல்லை. எனவே தாதுப் பொருள்களுக்கு ஏற்ப அதன் சுவை மாறும். சில இடங்களில் மண்ணில் ஆர்சனிக் உள்ளது. அந்தத் தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் பருகினால் உடலுக்குத் தீங்கு. பல நகர்ப்புறங்களில் நீரைச் சுத்திகரிக்க குளோரின் போன்ற பொருள்களைச் சேர்ப்பார்கள்.

4. அறையின் கதவை வேகமாக மூடும்போது, அறையின் ஜன்னல் கதவுகள் ஆடுவது எதனால்?

இர.கௌஷிக், 8ஆம் வகுப்பு, டி.ஏ.வி. பப்ளிக் பள்ளி, வேளச்சேரி, சென்னை.


அறையின் கதவை வேகமாக மூடும்போது கதவை உள்நோக்கிச் செலுத்துகிறோம் அல்லது வெளிநோக்கி இழுக்கிறோம். இந்தச் செயல்களின் போது அறையின் உள்ளே காற்று செலுத்தப்படும் அல்லது வெளியே இழுக்கப்படும்.

அமைதியான நீரில் சலசலப்பு ஏற்படுத்தினால், அதில் மிதக்கும் எல்லாம் அதிரும். அதுபோல கதவை வேகமாகத் திறக்கும்போது, வீட்டினுள் காற்றில் சலசலப்பை ஏற்படுத்துகிறோம். அதனால் காற்றில் அதிர்வு ஏற்படுகிறது. இந்த அதிர்வின் காரணமாக ஜன்னல் கதவுகள் அதிர்வடைகின்றன. ஜன்னலில் போடப்படும் கண்ணாடி சற்றே இளகி இருந்தால் கண்ணாடி அதிர்வடைவதையும் காணலாம்.

மேலும் உள்நோக்கிக் கதவை இழுத்து அறையின் உள்ளே காற்றை செலுத்தினால், கூடுதலாக உள்ளே வந்த காற்று எங்காவது வெளியே செல்ல முயலும். அந்த சமயத்தில் ஜன்னல் கதவுகள் சற்றே மூடிய நிலையில் இருந்தால் அதைத் தள்ளிக்கொண்டு காற்று வெளியே செல்லும்.






      Dinamalar
      Follow us