
வகுப்புகள் செல்லச்செல்ல பாடங்களின் சுமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விளையாடும் நேரம் குறைந்து பாடநூல்களுடனே பிள்ளைகள் சுற்றி வருகின்றனர். இப்படி படிக்கும் பிள்ளைகளுக்கு இன்று படித்தது ஞாபகத்தில் இருக்கும். எப்போதோ சிறுவயதில் படித்தில் எது இன்னும் ஞாபகத்தில் உள்ளது என்பதை அறிய, கீழ்வகுப்பில் படித்ததில் இன்னும் உங்கள் நினைவில் இருப்பது எது? எனக் கேட்டிருந்தோம். திண்டுக்கல், வத்தலகுண்டு, ஃபர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம்.
மு. ஆசிபா, 8 ம் வகுப்பு
4ஆம் வகுப்பு படிக்கும்போது, எனது கையெழுத்து மோசமாக இருந்துச்சு. அப்போ என் டீச்சர் திட்டாமல், அவங்களே கரும்பலகையில் எழுதிக் காட்டினாங்க. எந்தெந்த எழுத்துகள், எப்படி எழுதத் தொடங்கி, எப்படி முடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. கூடவே கர்சிவ் ரைட்டிங் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. இப்பவும் அதெல்லாம் ஞாபகம் இருக்கு.
கே. தர்ஷினி பிரியா, 8 ம் வகுப்பு
கே.ஜி., படிக்கும் போது நிஜமான பழங்களைக் காட்டி பாடம் நடத்தினதும், எண்களின் வடிவங்களைக் காட்டி சொல்லிக் கொடுத்ததும் இன்றும் நன்றாக நினைவில் வைத்துள்ளேன்.
எஸ்.ஏ. பிரஜிதா, 8 ம் வகுப்பு
எனக்கு 4ஆம் வகுப்பில் ஆங்கில, தமிழ் பாடங்களை எடுத்த ஆசிரியர்கள் பாடங்களை நாடக வடிவில் நடத்துவாங்க. ஒரு பாடத்தில் என்னென்ன பாத்திரங்கள் வருகிறதோ, அந்தந்த பெயரில் மாணவர்களை நிறுத்தி பாடம் நடத்தியது நினைவில் இருக்கு. பாடங்களும் சுலபமாக மனசில் பதிந்தது.
உ. தர்ஷினி, 8 ம் வகுப்பு
3ஆம் வகுப்பு படிக்கும் போது இஸ்ரோவிற்கு அழைத்துச் சென்று ராக்கெட் பற்றி பாடம் நடத்தினர். பல ஆராய்ச்சியாளர்கள் பேசினாங்க. அந்த வயதில் அது புரிந்ததோ இல்லையோ, பிரமிப்பாக இருந்தது. அதிலிருந்து எனக்கு ராக்கெட்டில் பறக்க வேண்டுமென்று ஆசை துளிர்விட்டு மரமாகி உள்ளது.
பா. சிவஸ்ரீ, 8ம் வகுப்பு
சின்ன வயசுல தமிழ் ஆசிரியர்கள் பாடல்களை நடனமாடிச் சொல்லிக்கொடுப்பாங்க. அதெல்லாம் இன்னும் ஞாபகத்தில் அப்படியே இருக்கு.
ச. சந்தியா, 8 ம் வகுப்பு
குழுவாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் பெயர் வைத்து சொல்லிக் கொடுத்தனர். சினிமா பாடல் மெட்டில் ரைம்ஸ் சொல்லிக் கொடுத்தனர். கே.ஜி., வகுப்புகளில் ஆடிக்கொண்டே சொல்லிக் கொடுத்தது நினைவில் உள்ளது.
சி. சுகள் முபஷ்ஷிரா, 8 ம் வகுப்பு
சின்ன வகுப்பில் நிறைய பிக்னிக் அழைத்துச்செல்வார்கள். அருங்காட்சியகம், நூலகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கியது, பசுமையாக மனத்தில் உள்ளது.

