PUBLISHED ON : ஏப் 09, 2018

விஞ்ஞானிகள் என்றாலே ஆண்கள்தானா? பெண்களே இல்லையா? இந்தக் கேள்வி நம்மைப் போலவே நந்திதா ஜெயராஜ், ஆஷிமா டோங்கரா என்ற இரண்டு இளம் பத்திரிகையாளர்களைத் தொற்றிக்கொண்டது. விளைவு, இந்தியா முழுக்க உள்ள பல்வேறு அறிவியல் துறைகளுக்குள் புகுந்து புறப்பட்டார்கள். அவர்கள் கண்டெடுத்த 100 அறிவியல் முத்துகளை 'லைஃப் ஆஃப் சயின்ஸ்' (Life of science) என்ற இணையதளத்தில் தொகுத்துள்ளார்கள். ஆச்சரியமான இந்தப் பணியைச் செய்தவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
பெண் விஞ்ஞானிகளைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
நாங்கள் இருவருமே மாணவர்களுக்காக அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறோம். அதில் எப்போதும் ஏன் ஆண் விஞ்ஞானிகளைப் பற்றியே அதிகம் எழுதுகிறோம்? பெண்களே இல்லையா என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து நிறைய வாசிக்கவும், தேடவும் ஆரம்பித்தோம். அறிவியல் துறையில் ஈடுபடும் பெண்களின் ஆராய்ச்சிகளை வெளிச்சத்திற்கு எடுத்து வரலாம் என்று முடிவெடுத்தோம். இதுதான் எங்கள் பயணத்தின் தொடக்கம்.
எத்தனை ஆண்டுகளாக இதனைச் செய்கிறீர்கள்?
2016 பிப்ரவரியில் தொடங்கினோம். இப்போது 100 பேரைத் தொட்டுவிட்டோம். இன்னும் சந்திக்க வேண்டிய பல பெண் விஞ்ஞானிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றனர். ஒவ்வொருவராகத் தேடிப் பிடித்து, அவர்கள் செய்யும் ஆய்வுகளைத் தெரிந்துகொண்டு, அதை முறையாக எழுதி வருகிறோம்.
இதில் சந்தித்த சவால்கள்?
பெண் விஞ்ஞானிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டம். ஒவ்வொரு கல்வி நிலையத்துக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புவோம். சிலசமயம் வந்தது வரட்டும் என்று நேரில் பார்ப்பதற்குப் புறப்பட்டுப் போய்விடுவோம். சிலர் அவர்களுக்குத் தெரிந்த பெண்களைப் பற்றிச் சொல்வார்கள். நெட்வொர்க்கிங்தான் எங்கள் தேடலின் பலம்.
பெண் விஞ்ஞானிகளைச் சந்தித்தபோது கிடைத்த புரிதல்?
முதலில், நகரத்தில் படித்தவர்கள், பெரிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்தவர்கள்தான் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு வருவார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அது முற்றிலும் தவறு. நாங்கள் சந்தித்த பெரும்பாலான விஞ்ஞானிகள், கிராமப்பகுதிகளில் வளர்ந்தவர்கள். அறிவியல் துறையில் அவர்களுக்கு இருந்த தீராத ஆசையும் நம்பிக்கையும்தான் அவர்களைப் பலமைல் தூரத்துக்கு அழைத்து வந்தது. இதுபோல் நிறைய படிப்பினைகள் கிடைத்தன.
பல ஆண்டுகளாக கவனம் பெறாதவர்களைச் சந்தித்தபோது, அவர்களுக்கு எப்படி இருந்தது?
பலர் ஆச்சரியப்பட்டார்கள், சிலர் நெகிழ்ந்து போனார்கள், ஒருசிலர் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்தார்கள். ஒருசிலர் கண்ணில் மகிழ்ச்சி மின்னியது. இப்போதாவது கவனம் பெற்றோமே என்ற ஆசுவாசம் தெரிந்தது. தங்கள் ஆராய்ச்சிகளைப் பற்றி எங்களிடம் விரிவாகப் பேசியதோடு, தனிப்பட்ட கதைகளையும், கடந்துவந்த பாதையையும், தடைகளையும் சொன்னார்கள். தாங்கள் செய்துவரும் ஆராய்ச்சிகள் நிச்சயம் மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற பொறுப்பை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ரொம்ப எளிமையாக, குழந்தைகளுக்குச் சொல்வதைப்போல், பலர் தங்கள் முயற்சிகளை எங்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அவர்களுடைய மென்மையான மனதும் ஆய்வில் இருக்கும் ஆர்வமும், தாங்கள் சொல்வது மற்றவர்களுக்குப் புரியவேண்டுமே என்ற கரிசனமும் எங்களை மிகவும் ஈர்த்தது.
பெண் விஞ்ஞானிகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?
அது, அவர்களைக் காயப்படுத்தவே செய்கிறது. மும்பையில் வானியல் துறையில் ஆராய்ச்சியாளர் ஒருவரை சந்தித்தோம். முதலில் அவருக்கு ஐ.ஐ.டி. மும்பையில் இடம் கிடைத்தபோது, பலரும் இடஒதுக்கீட்டால் இடம் கிடைத்தது என்று கேலி பேசினார்களாம். ஒருகட்டத்தில் அவருடைய திறமை பற்றி அவருக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், தமது ஆய்வுகளின் மூலம், தான் தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்று நிரூபித்தார். இவரைப்போல பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் நாம் பெண்களைப் பற்றிய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உங்கள் நோக்கம் நிறைவேறியதா?
நிச்சயமாக. ஏராளமான அனுபவம் கிடைத்தது. ஊக்கமும் கிடைத்தது. பெண்கள் பல துறைகளில் ஆராய்ச்சி செய்கிறார்கள். மிகவும் மனஉறுதியோடு இருக்கிறார்கள். இதையெல்லாம் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். அதனால், நாங்கள் சந்தித்த 100 பெண் விஞ்ஞானிகளின் பேட்டிகளைப் புத்தகமாக வெளியிட இருக்கிறோம்.
இரண்டு விதங்களில் வெளியிட உள்ளோம். ஒன்று மாணவர்களுக்காக, மற்றொன்று பொதுமக்களுக்காக. கிரெளட் ஃபண்டிங் மூலம் இதை செய்யும் முயற்சியில் இருக்கிறோம். இன்னும் நிறைய விஞ்ஞானிகளையும் சந்திக்கப் போகிறோம். எங்களின் பயணம் தொடரும்.