PUBLISHED ON : ஏப் 09, 2018

திறந்த கல்விமுறையை முன்னெடுக்கும் டேவிட் வைலி
வழக்கம்போல் நான் லேட். சரியாகச் சொன்னால் அப்பாதான் லேட். இன்று பள்ளியில் ஓபன் டே. பள்ளிக்கு அப்பா வரவேண்டும். பதினோரு மணிக்குள் பள்ளிக்குப் போகவேண்டும் என்றால், அப்பா பத்தரைக்குத்தான் அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து வந்தார்.
அப்புறம், ஸ்கூலுக்குப் போய் என்னோட வகுப்பு டீச்சரைப் பார்த்துப் பேசிவிட்டு, ரிப்போர்ட் கார்டு வாங்கிக்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான புத்தகங்களுக்குப் பணம் கட்டி, ரசீது வாங்கிக்கொண்டு, நூலகத்துக்குப் போனால், காலியாக இருந்தது. உமா மிஸ்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். காலையிலேயே நிறையப் பேர் வந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள் போலிருக்கிறது.
ரசீதைக் கொடுத்தவுடன், பெரிய புத்தக மூட்டையையும், அதில் என்னென்ன பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் இருக்கின்றன என்ற விவரத்தையும் கொடுத்தார். ஒரு சில பாடங்களுக்கு இரண்டு புத்தகங்கள், வேறு சிலவற்றுக்கு பயிற்சிப் புத்தகங்கள் வேறு. கூடவே எழுதுவதற்கான நோட்டுப் புத்தகங்கள். ஒரு சில புத்தகங்கள், பள்ளி திறக்கும்போது கொடுக்கப்படும் என்ற சின்ன குறிப்பும் இருந்தது.
“எவ்ளோ புக்ஸ் மிஸ்? இதையெல்லாம் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள, முதுகே ஒடிஞ்சு போயிடும்,” சிரித்துக்கொண்டே சொன்னேன். உமா மிஸ்ஸும் சிரித்தார். “பெரிய கிளாஸ் வந்துட்டே இல்லையா, நிறைய புக்ஸ் வரத்தானே செய்யும்?” என்றார்.
அடுத்த வகுப்பு, இன்னும் நிறைய பொறுப்பு. அப்பாவும் அம்மாவும் 'விடுமுறையிலேயே படிக்க ஆரம்பித்துவிடு' என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரே போர்! இப்போது இந்தப் புத்தகங்களுக்கு எல்லாம் அட்டை போட்டு, தயார் செய்துவைக்க வேண்டும். டைம் டேபிள் கொடுத்த பிறகு, ஒவ்வொரு நாளும் கழுதை பொதி சுமப்பது மாதிரி இதையெல்லாம் சுமந்துகொண்டு வரவேண்டும்.
“கொஞ்சமா புக்ஸ் கொடுக்க மாட்டீங்களா மிஸ்?”
“கொடுக்கலாம். புக்ஸே இல்லாமகூட பாடம் நடத்தலாம். கையில சின்னதா ஒரு டேப் இருந்தா போதும்.”
“புக்ஸே இல்லாம பாடமா? அது என்ன மிஸ்?”
“இதுக்குப் பேரு அன்டெக்ஸ்ட்புக் (UnTextbook). அல்லது, ஓபன் டெக்ஸ்ட்புக்குன்னும் சொல்லுவாங்க. முதல்ல இது வேற மாதிரி ஆரம்பிச்சுது. இன்னிக்கு உலகம் பூரா, பாடப் புத்தகங்களோட விலை கன்னாபின்னான்னு உயர்ந்துடுச்சு.
அதுவும் மருத்துவம், சட்டம் மாதிரியான துறைகளில் படிக்கப் போகும்போது, ஒவ்வொரு புத்தகமும் ஏராளமான விலை. அவ்வளவு தொகை கொடுத்து எல்லோராலயும் வாங்க முடியாது இல்லையா… அப்போ தான் வேற மாதிரி யோசிச்சாங்க. ஓபன் ஸ்டாக்ஸ் (OpenStax) பிசிகாம்பஸ் (BCcampus) மாதிரியான திட்டங்கள் உருவாச்சு.
அதன்படி, ஆசிரியர்கள் புத்தகங்களை எழுதுவாங்க. அதைப் புத்தகமா அச்சடிக்கமாட்டாங்க. விக்கிபுக்ஸ் மாதிரி எல்லோரும் பயன்படுத்தறா மாதிரி இணையத்துல போட்டுடுவாங்க. அதுல நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.”
“அப்ப புக்ஸே வாங்க வேண்டாமா?”
“ஆமாம். ஆனால், இப்படிச் செய்யும்போதுதான் இன்னொரு முக்கியமான முன்னேற்றம் நடந்தது.”
“என்னது மிஸ் அது?”
“பாடப் புத்தகங்கள் ஏன் எப்பவும் ஒரே நிலையா இருக்கணும்? புத்தகங்கள் எழுதின காலத்துக்கும் இப்போ அதைச் சொல்லிக்கொடுக்கற காலத்துக்கும் எவ்வளவு வித்தியாசங்கள், முன்னேற்றங்கள், மாறுதல்கள்? அதையெல்லாம் ஏன் புத்தகத்துக்குள்ள உடனே உடனே கொண்டுவர முடியலன்னு யோசிச்சாங்க. அங்கதான் 'திறந்த கல்விமுறை'ங்கற திட்டம் உருவாச்சு?”
“அதென்ன மிஸ் திறந்த கல்விமுறை?”
“கணிதப் பாடத்தையே எடுத்துக்கோயேன். அதுல என்னென்ன சொல்லிக் கொடுக்கணுமோ அதெல்லாம் அத்தியாயங்களா இருக்கும், இல்லையா? ஓபன் டெஸ்ட்புக்குல, பாடங்கள் பாடங்களா இருக்காது. அது தொடர்பா இணையத்துல எங்கெல்லாம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கோ அவற்றுக்கெல்லாம் இணைப்புகள் கொடுத்திருப்பாங்க. அதுவும் கிளாஸ் டீச்சர் மட்டும் தான் கொடுக்கணும்ங்கறது இல்ல. மாணவர்களும் தாங்கள் படிச்சதுக்கெல்லாம் லிங்க் கொடுக்கலாம்.
அதேபோல், அந்தப் பாடத்துல இருக்கிற செய்திகளுக்கு நீங்களே விளக்கம் கொடுக்கலாம், வரைபடம் போடலாம், ஓவியங்கள் வரையலாம். அதாவது ஒரு பாடங்கறது வெறும் கறாரான எழுத்துகளா இருக்காது. இதைத்தான் சொல்லணுங்கற வரையறை இருக்காது. அதைச் சுத்தி ஏராளமான விஷயங்கள், தகவல்கள், தரவுகள்னு கொட்டிக் கிடக்கும். கல்வி இங்கே திறந்தவெளிப் பள்ளிக்கூடம் மாதிரி ஆயிடும். இது இணையத்துல இருக்குற ஓபன் ஸ்கூல்.
இதுல எல்லாமே லேட்டஸ்ட்டா இருக்கும். பாடப்புத்தகத்தோட வறட்டுத்தனம் இருக்காது. கணிதத்துலேயே அல்ஜீப்ரா பத்தி பேசறீங்கன்னு வெச்சுக்கோங்க. இன்னிக்கு அல்ஜீப்ராவுல ஆய்வுசெய்ற கணித அறிஞர்களோட பேட்டி, விளக்கங்களுக்கான சுட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் அந்தப் பாடத்தைக் கத்துக்கற முறையே மாறிப்போயிடும்.
பாடங்கள் லகுவா, இன்றைய காலகட்டத்தோட பொருந்தியதா இருக்கும். என்னிக்கோ நடந்ததைப் படிக்கறதைவிட, இன்னிக்கு நடக்கறதைப் படிக்கலாம். அதாவது பத்து ஆண்டுகளானாலும் மாறாத பாடநூல்கள் இங்கே இருக்காது. ஒவ்வொரு வகுப்புலேயேயும் ஒவ்வொரு ஆண்டுலேயேயும் மாறக்கூடிய டைனமிக் பாடப் புத்தகங்கள் இவை. இதன் மூலமா மாணவர்களும் ரொம்ப வேகமா கத்துப்பாங்க. ரொம்ப லேட்டஸ்ட்டான விஷயங்களையும் அணுகுமுறைகளையும் கத்துப்பாங்க.”
“எங்க மிஸ் இதெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு?”
“வட அமெரிக்காவுல.”
ஆசிரியர்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறாங்க! நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது. நான் புத்தகக் கட்டைத் தூக்கிக்கொண்டு நூலகத்தைவிட்டு வெளியே நடக்கத் தொடங்கினேன்.