PUBLISHED ON : டிச 03, 2018

வரலாறு பலருக்கும் பிடிப்பதில்லை. உண்மையில், வரலாற்றை கதைபோல படித்தால் கிடைக்கும் சுவாரசியத்திற்கு ஈடே இல்லை. நம் முன்னோர்களின் கதைதான் வரலாறு என்பதை உணர்ந்துகொண்டால், எப்போதுமே அது பிடிக்காமல் போகாது. இந்திய வரலாற்றில் உங்களுக்குப் பிடித்த அரசர், அரசி யார்? என கேட்டிருந்தோம். கோவை, அத்வைத் ஜி.என்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தபோது, அருவியாகக் கொட்டினார்கள்.
ஏ.பிரணவ் (9ஆம் வகுப்பு)
ஷாஜகான் என்னைக் கவர்ந்த வரலாற்று நாயகன். கடந்தாண்டு, தாஜ்மஹாலை நேரில் பார்த்தேன். கிட்டத்தட்ட, 4 நூற்றாண்டுகள் கடந்தும் அது பிரமாண்டம் குறையாமல் காட்சியளிக்கிறது. தாஜ்மஹாலை எழுப்பி, உலக அதிசயப் பட்டியலுக்குள், இந்தியாவை சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.
கே.சுப்ரியா (11ஆம் வகுப்பு)
ஓரறிவு முதல், ஐந்தறிவு கொண்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணர்விருக்கிறது என்பதை, முல்லைக்கு தேர் கொடுத்து, உணர்த்திய தமிழ் குறுநில மன்னரான பாரியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஜி.பி. அஞ்சனா (9ஆம் வகுப்பு)
இராஜராஜ சோழன் என்னைக் கவர்ந்தவர். சோழர்களின் பொற்காலம் என்று இவரது ஆட்சியைக் கூறுவர். 'யுனெஸ்கோ'வால், மரபு அடையாளச் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர். அக்கோவிலுக்குப் போய் பாருங்கள். அப்புறம் உங்களுக்கும் இராஜராஜ சோழனைப் பிடிக்கும்.
ஜி. இந்த்ரேஸ் (9ஆம் வகுப்பு)
மாவீரன் சத்ரபதி சிவாஜி என்னை ஈர்த்த அரசர். அவரும் என்னைப்போல, அம்மா பிள்ளையாம். தாய் ஜீஜாபாயிடம் தான், குதிரை ஏற்றம், போர் தந்திரத்தைக் கற்றார். போரில் எதிரிகளை சிவாஜி தாக்கிய விதம் குறித்துப் படித்தால், ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.
எம்.லிங்கேஷ் (10ஆம் வகுப்பு)
மௌரியப் பேரரசர் அசோகரே என் நாயகர். நிலப்பகுதியை மாகாணம், மாவட்டம் எனப் பிரித்து, சிறப்பாக ஆட்சி செய்தார். நிழல் தரும் மரங்கள் நட்டு, விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டியும் வைத்தார். மருத்துவமனைகள், நீர்பாசனத் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர் அசோகர்.
எஸ்.ஜெயஸ்ரீ (10ஆம் வகுப்பு)
எனக்குப் பிடித்த அரசர் வீரபாண்டிய கட்டபொம்மன் தான். நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையருக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர். வரி செலுத்த மறுத்தவர். தூக்குமேடையிலும் வீரமுழக்கமிட்டவர்.
