தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மா எழுதும் மாயக் கண்ணாடி (2)

மா எழுதும் மாயக் கண்ணாடி (2)

மா எழுதும் மாயக் கண்ணாடி (2)


PUBLISHED ON : பிப் 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படுத்துக்கொண்டே யோசித்தான் முரளி. 'அம்மாவுக்காக கடைக்குப் போனபோது, குட்டிப் பெண்ணும், பாட்டியும் ரோடைக் கடக்க உதவி செய்தபோது - இந்த இரண்டு சமயத்திலும் சிரிக்கிற, சந்தோஷமான முகமாக இருந்தது.

பூரிக்காக அம்மாகிட்ட சண்டை போட்டபோது கோணலாக இருந்தது. அப்படின்னா யாருக்காவது உதவி பண்ணினா முகம் சிரிச்ச முகமாக இருக்குமா? நான் மறுபடியும் கேட்ட போது அம்மாதானே பூரி கொடுக்கலை? நான் எதுவும் தப்பு பண்ணலையே... அப்ப ஏன் என் முகம் கோணலாச்சு?'

மறு நாள் உணவு இடைவேளையின்போது...

''டேய் நேத்திக்கு மாயா டீச்சர்னு ஒருத்தங்க வந்தாங்க'' சொன்னது முரளி அல்ல, பிரேம்.

'நான் சொல்ல வந்ததை பிரேம் எப்படி சொல்கிறான்? அப்படின்னா பிரேம் வீட்டுக்கு மாயா டீச்சர் போயிருந்தாங்களா?' பிரேமிடமே கேட்டுவிட்டான்.

''ஆமாண்டா, நீதான் அவங்களை டீச்சர்னு கூப்பிட்டியாம். எனக்கு என்னவோ அவங்களை மாயாக்கான்னு கூப்பிடலாம்னு தோணுச்சு.''

''நீங்க ரெண்டு பேரும் என்னடா பேசறீங்க? எங்களுக்கு எதுவுமே புரியலை''என்றான் பாலா.

''சரி, அதை அப்புறம் சொல்றேன். உங்க வீட்ல இருந்த கண்ணாடியிலே உங்க முகம் எப்ப, எப்பல்லாம் சிரிச்ச முகமாக தெரிஞ்சது? எப்ப

கோணலாத் தெரிஞ்சது?''

''நேத்திக்கு நைட்டு கூட கோணலாத் தெரிஞ்சுது''

''அப்படியா? அதுக்கு முன்னாடி என்ன செஞ்சே?''

''ஆங்... ஞாபகம் வந்திடுச்சு. சாப்பிடும்போது எனக்கும் என் தங்கச்சிக்கும் சண்டை வந்தது.''

''எதுக்கு?''

''எங்க வீட்ல நேத்திக்கு நைட்டு, அம்மா அப்பளம் செஞ்சாங்க. நான் என்னோட அப்பளத்தை சாப்பிட்டுட்டு பத்தலைன்னு தங்கச்சி தட்டுல இருந்த அப்பளத்தை எடுத்தேன். அவ 'ஓ'ன்னு கத்த, அம்மா அவளைத் திட்டினாங்க. அப்பா என்னைத் திட்டினார். கோபத்துல தங்கச்சிய ஒரு குட்டு குட்டினேன். அவளோட முகமே அழுகையில கோணிடிச்சு. பிறகு கண்ணாடியில தெரிஞ்ச என் முகம் , அழும் போது கோணிக்கிட்டே போன தங்கச்சி முகம் மாதிரியே இருந்தது.''

''எனக்கு இப்ப ஞாபகம் வந்துடுச்சி'' ஷாநவாஸ் துள்ளிக் குதித்தான்.

''என்னடா, என்ன?''

''நேத்திக்கு நைட்டு படுக்கப் போறதுக்கு முன்னாடி கண்ணாடியிலே என் முகத்தைப் பார்த்தபோது முகமெல்லாம் வீங்கின மாதிரி இருந்தது. என்ன இதுன்னு யோசிக்றப்பத்தான், அம்மாவோட உரத்த குரல் கேட்டது''

''இன்னிக்காவது பல் தேச்சிட்டுப் படுடா. இல்லைன்னா மறுபடியும் பல்லு சொத்தையாகப்போகுதுன்னாங்க. பல் தேய்ச்சுட்டு வந்து படுக்கப் போறதுக்கு முன்னாடி பார்த்தப்ப வீக்கம் இல்லாம, கொஞ்சம் சிரிச்ச முகம் மாதிரி இருந்தது''

''ஓஹோ... நாம மத்தவங்களுக்கு உதவி பண்ணினா, நம்மோட காரியங்களை ஒழுங்கா செஞ்சா, நம்மளை சிரிச்ச முகத்தோட காட்டும். அது சரி, நான் என் தங்கச்சியோட அப்பளத்தை எடுத்தேன். அதுக்காக என் முகத்தை கோணலாக் காண்பிச்சுது. ஆனா முரளி பாவம். எக்ஸ்ட்ராவா ஒரு பூரி கேட்டதுக்கு அவன் முகத்தை ஏன் கோணலாக் காண்பிச்சுது?''

''சாப்பிடக்கூட ஆசைப்படக்கூடாதா? எப்பவும் வயிறு ஒரே மாதிரியாவா இருக்கும்? சில சமயம் அதிகம் பசிக்கும். சில சமயம் கம்மியாப் பசிக்கும்.''

''ஒண்ணும் புரியலை, மாயா டீச்சர் கிட்டத்தான் கேட்கணும்.''

''உனக்கு என்ன குழப்பம் சங்கர்?''

''நம்ம கிளாஸ் கலாவிற்கு நேத்திக்கு பர்த்டே.''

“ஆமா, எல்லாருக்கும் சாக்லேட்கூடக் கொடுத்தாளே!”

''ஆமா, எனக்குப் போன மாசம் எங்கம்மா ஒரு பேனா வாங்கிக் கொடுத்தாங்க.''

''அதுல பூகூட இருக்கும்.''

''ஆமாண்டா. நல்ல ஸ்மெல்கூட வருமே...''

''அதுதாண்டா. அந்த மாதிரி பேனா வேணும்னு கலா கேட்டுகிட்டே இருந்தா. சரி அவளோட பிறந்த நாளைக்குப் பரிசாத் தரலாம்னு நினைச்சேன்.''

''ஓ அப்படியா?''

''எங்க அம்மாவோட, ஆபீஸ் பக்கத்துல இருக்கற கடையிலேதான் அந்த பேனா கிடைக்கும். எங்கம்மா கிட்ட சொன்னேன். வாங்கிட்டு வீட்டுக்கு வரும்பொழுதே எட்டரை மணி ஆயிடுச்சு. கலா வீட்டுக்குப் போய்க் கொடுத்துட்டு வரலாம்னு அம்மாவை கூப்பிட்டேன். அம்மா, லேட்டாயிடுச்சு, நாளைக்கு ஸ்கூல்ல கொண்டு போய்க் கொடுத்துடுன்னு சொன்னாங்க.''

''இன்னிக்கு கொண்டு வந்து கொடுத்துட்டே இல்லே...அப்புறம் என்ன பிரச்னை?''

''அது இல்லேடா, பிறந்த நாள் அன்னிக்கே கொடுக்கணும்னு நினைச்சேன். லேட்டாயிடுச்சு வர முடியாதுன்னு அம்மா சொன்னவுடனே, கோபிச்சிட்டுப் போய், சாப்பிடாமலே படுத்துட்டேன்''.

''சரி, இப்ப நம்மோட கண்ணாடிப் பிரச்னைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?''

''அப்ப மேசை மேலே இருந்த கண்ணாடியிலே என் முகத்தைப் பார்த்தப்ப, ரொம்ப வெளுத்துப் போய், கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் இருந்தது. ஏன் என் முகத்தைக் கண்ணாடி அப்படி காண்பிச்சுது?''

சங்கர் கேட்ட கேள்வி எல்லோருக்குமே நியாயமாகத்தான் இருந்தது.

'மாயா டீச்சர் கிட்டதான் இதுக்கு பதில் கேட்கணும்.' நினைத்து முடிப்பதற்குள் மாயா டீச்சர் அவர்கள் வட்டத்தில் ஒருவராக இருந்தார்.

மாயா டீச்சரை முரளி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

''என்ன குழப்பமெல்லாம் தீர்ந்ததா?''

''இல்லே டீச்சர், சில கேள்விகளுக்குப் பதில் தெரிஞ்ச மாதிரி இருக்கு. சில விஷயங்கள் புரியலை.''

''ஆமா டீச்சர். மத்த விஷயங்களை விடுங்க. என் கூடப் படிக்கிற பொண்ணுக்குப் பரிசு கொடுக்க நினைச்சது தப்பா? ஏன் என் முகம் வெளிறிப் போயிருந்தது?''

''அதுக்கு காரணம், நீ சாப்பாட்டு மேலே உன் கோபத்தை காண்பிச்சே. சாப்பிடாமப் போனா நீ எப்பிடி ஆவேன்னு கண்ணாடி சொல்லுச்சு.''

''ஆனா, பரிசு கொடுக்க நினைச்சது தப்பா?''

''அது தப்பில்லே, தப்புன்னு உங்கம்மா நினைச்சிருந்தாங்கன்னா, நீ கேட்ட பேனாவை வாங்கிட்டே வந்து இருக்க மாட்டாங்க.''

“பூரிக்காக அம்மா கிட்ட கோபிச்சது, ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே கலா வீட்டுக்குப் போக நினைச்சது, இதெல்லாம் பத்தி யோசிங்க!''

அப்பொழுது மணி அடித்தது.

''டீச்சர் , பதில் சொல்ல மாட்டீங்களா?''

''உதவினா முகம் சிரிப்பாயிடும். கோபிச்சுக்கிட்டா கோணலாகிடும். உணவை மறுத்தா வெளுப்பாயிடும், இதெல்லாம் புரிஞ்ச மாதிரி, மீதியையும் யோசிங்க, மறுபடியும் பார்க்கும்போது பதில் சொல்றேன்.''

(தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us