PUBLISHED ON : ஜூலை 08, 2019

இந்திய உணவுகளில் பருப்புகள் தனித்தன்மையான ருசி கொண்டவை. நம் உணவின் உயிர்நாடி கூட. பருப்புகளில் ஏராளமான புரதச்சத்துகள் உண்டு. தினசரி நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு பருப்பு வகை கட்டாயம் இருக்கும்.
உதாரணமாக சாம்பார், பருப்புத் துவையல், கூட்டு, இட்லி, தோசை என, எதைச் சாப்பிட்டாலும் அதில் பருப்புதான் கதாநாயகன். நமக்குப் பருப்பு வகைகளிலிருந்து, நான்கு மடங்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கிறது.
கடினமான பருப்பு வகைகள் ஈரப்பதமான நிலப்பரப்பில் வளர்கின்றன. மண்ணுக்கு நைட்ரஜன் சத்தைப் பெற்றுக் கொடுக்கின்றன. இந்தியாவில் சில கிலோமீட்டர் தொலைவுகளிலேயே நிலப்பரப்பு, மண் தன்மை ஆகியவை மாறும். இந்த மாற்றத்திற்குக் காரணம், காலநிலை அமைப்புதான். அதேசமயம், இதனால்தான் நம்மால் பல்வேறு வகையான பயிர்களைப் பயிரிட முடிகிறது.
தென்னிந்தியாவின் உணவில் உளுந்து அதிகம் சேர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா? இங்குதான் உளுந்து முதன்முதலில் தோன்றியது. உளுந்து வளர்வதற்கான மண் அமைப்பு இங்கு அமைந்திருந்தது. அதுவும், புல்வெளிகள் உள்ள பகுதியில்தான் உளுந்து வளருமாம்.
காலை உணவில் பலருக்கும் பிடித்தது பொங்கல். தூக்கம் கண்ணைக் கட்டும் என, பலர் பயம் காட்டினாலும் பொங்கலின் ருசி, தனி ருசிதான். இப்படி ருசியான பொங்கல் கிடைத்தற்கு பாசிப் பருப்புக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பாசிப் பருப்பும் நம்முடைய மண்ணில்தான் தோன்றியது.
வட இந்தியா என்றதும் கொண்டைக்கடலை, பூரிதான் முதலில் நம் நினைவிற்கு வரும். ஆம்! கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, பட்டாணி வகைகள் அகியவை அங்குதான் முதன்முதலில் விளைந்தன. நிச்சயம், சிந்து சமவெளி மக்களை மறக்கக் கூடாது.
அவர்கள்தான் குளிர்காலப் பயிர்களாக இந்தப் பருப்பு வகைகளை வளர்த்தனர். இன்றும் வடஇந்தியாவில், குளிர்காலப் பயிரிடும் முறை நடைமுறையில் உள்ளது. அடுத்தமுறை நீங்கள் சென்னாபட்டூரா சாப்பிடும்போது, அது எங்கிருந்து வந்தது என்பதோடு யாரால் வந்தது என்பதையும் மறக்கமாட்டீர்கள்தானே?
