PUBLISHED ON : ஜூலை 08, 2019

சின்னக் கற்பனை. மொகலாயர்கள் அரசவை நடந்து கொண்டிருக்கிறது. காலை முதல் காரசார விவாதம், வழக்கு விசாரணை என சளைக்காமல் அரசவைக் கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்று மாலை நான்கு மணிக்கு ஏதாவது சூடாகச் சாப்பிடலாம் என அக்பர் விரும்புகிறார்.
அக்பரின் ஆணையைக் கேட்ட அரண்மனை உணவு தயாரிப்பாளர் வெள்ளித்தட்டில் சூடாக உருளைக்கிழங்கு பஜ்ஜி, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி என எல்லாம் எடுத்து வந்து அக்பரின் பசியைப் போக்கி இருப்பாரா? மாலை வேளையில் நாக்குச் சுடாமல் சூடாக கமகம காப்பியோ, தேநீரோ அக்பர் குடித்திருப்பாரா? நிச்சயம் இல்லை. ஒரு வேளை, இப்போது அக்பர் ஆட்சி செய்திருந்தால், சாப்பிட்டு இருக்கலாம்.
இந்தியாவில், இப்போது காய்கறிக் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான காய்கறிகள் அந்தக் காலத்தில் கிடையாது. தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய், உருளைக்கிழங்கு, தேநீர், காப்பி என, எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. இன்றைய குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்களில் கிடைக்கும் உணவு வகைகள், இடைக்காலத்தில்கூட கிடைத்திருக்கவில்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும், நம்முடைய சமையல் வகைகள் மாறிக்கொண்டும், புதிய விஷயங்களை ஏற்றுக் கொண்டும் வளர்ந்து வந்துள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எண்ணற்ற உணவு வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் நம் உணவுத்தட்டில் இடம் பிடித்தவை.
நம்முடைய விவசாயிகள் புதிய வகைப் பயிர்களை, பருப்பு வகைகள், காய்கறிகள், பழ வகைகள் என, எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதைப் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.
நம்முடைய தட்டிற்கு அவை எப்படி வந்தால் பிடிக்கும் என்பதுதான் சவால். இதைச் செய்தவர்கள்தான் சமையல் வல்லுநர்கள்.
எந்தப் பயிரைக் கொண்டு, என்ன செய்தால் சுவையான உணவு கிடைக்கும் என்பதைச் சமையலறைகளில் மண்டையைப் போட்டு உருட்டியதால்தான், இன்று நம் தட்டில் பிரியாணி, நூடுல்ஸ், ஜிலேபி, ரசமலாய், குலோப்ஜாமூன் என, விதவிதமான உணவுகள் எல்லாம் கிடைக்கின்றன.
- சுவை வளரும்
