PUBLISHED ON : ஜூலை 04, 2016

திருபாய் அம்பானி நினைவு தினம் ஜூலை 6
(28.12.1932 - 06.07.2002)
அதிரடியான வியூகங்களோடு செயல்பட்டு மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர். “உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர், தங்கள் கனவுகளை நனவாக்க உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று சொன்னவர், சாதாரண ஆள் அல்ல! அவர்தான், வெறும் 50,000 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பித்து, மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு உலகின் முன்னணி பணக்காரராக உயர்ந்த திருபாய் அம்பானி என்று அழைக்கப்படும் தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி!
ஆரம்பத்தில், ஒற்றை அறை மாத்திரமே இருந்த சிறிய வீட்டில் குடியிருந்தார் திருபாய். இன்றைக்கு அவருடைய மகன் முகேஷ் அம்பானி மும்பையில் கட்டி இருக்கும் 'ஆன்டிலியா' வீட்டின் மதிப்பு சுமார் ரூ.9000 கோடி. நான்கு லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட இந்த வீடுதான் உலகக் கோடீஸ்வரர்கள் வைத்திருக்கும் வீடுகளிலேயே ஆடம்பரமான வீடு. இந்த வீட்டில் 6 வாகன நிறுத்துமிடங்களும், 3 ஹெலிகாப்டர் நிறுத்துமிடங்களும் உள்ளன. இந்த வீட்டைப் பராமரிப்பதற்கு 600 ஊழியர்கள் தினமும் தேவைப்படுகிறார்கள்! இந்த அசாத்தியங்களை எல்லாம் சாத்தியமாக்கியது அம்பானியின் கனவு!
குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. கையில் காசு புரளாத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். தனது 16 வயதில் ஏமன் நாட்டில் பெட்ரோல் நிரப்புமிடத்தில் வேலை செய்து, அங்கேயே நிர்வாகம் பார்க்குமளவுக்கு முன்னேறினார். பின்னர், இந்தியா திரும்பி, சொந்தத் தொழில் தொடங்கி 'ரிலையன்ஸ்' நிறுவனத்தை 1966ல் உருவாக்கிய பிறகுதான், இந்திய வர்த்தக உலக ஜாம்பவானை இந்த உலகம் அடையாளம் கண்டது!
'இயலாமை' என்ற வார்த்தைக்கு இவருடைய அகராதியில் அர்த்தமில்லை. தான் மட்டும் முன்னேற வேண்டும் என்று நினைக்காமல், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பங்குதாரர்கள் என எல்லாருக்கும் வளர்ச்சிப் பாதையைக் காட்டினார்.
இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியந்து பார்க்கிற வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் உலக வணிக சந்தையில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு, திருபாய் அம்பானி என்னும் ஒற்றை மனிதனின் விடாமுயற்சிதான் காரணம்!
1996, 1998, 2000- ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்' பட்டியலில் இடம்.
2000 - நூற்றாண்டில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராகத் தேர்வு.
2001 - 'வாழ்நாள் சாதனையாளர்' விருது.
2016 - 'பத்ம விபூஷண்' விருது.
