தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாலுவின் டயரி - சாப்ளினின் நமக்கு நாமே திட்டம்

மாலுவின் டயரி - சாப்ளினின் நமக்கு நாமே திட்டம்

மாலுவின் டயரி - சாப்ளினின் நமக்கு நாமே திட்டம்


PUBLISHED ON : பிப் 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலுவும் வாலுவும் சென்னையில் புதிதாகத் திறந்திருக்கிற ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு (Multiplex theatre) போய் வந்த கதையை விடிய விடிய சொல்லிக்கொண்டே இருந்தார்கள். படம் எப்படி என்று சொல்லவே இல்லை. தியேட்டர் எப்படியெல்லாம் இருக்கிறது என்றுதான் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ரோமுக்கோ இத்தாலிக்கோ போய்விட்டு வந்த மாதிரி இருக்கிறது என்றது வாலு.

ரோம் இத்தாலியின் தலைநகர். அங்கேதான் ஐரோப்பாவின் மிகப் பெரிய சினிமா ஸ்டூடியோ (Cinema studio) இருக்கிறது என்று பாலு சொன்னான். எனக்கும் தெரியும். அதன் பெயர் சினிமா சிட்டா. இத்தாலியில் சிட்டா என்றால் சிட்டி. அங்கேதான் பென் ஹர், க்ளியோபாட்ரா மாதிரி படங்கள் எல்லாம் எடுத்தார்கள். அந்த சினிமா சிட்டியை ஆரம்பித்தவர் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி என்று அவனுக்குச் சொன்னேன். முசோலினி என்றதும் வாலு முஸ்லியா, அது சாப்பிடற ஐட்டம் இல்லையா என்றது! முஸ்லி என்பது ஓட்ஸ் தானியத்தோடு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் எல்லாம் கலந்து தயாரிக்கும் உணவு. அதை முதன்முதலில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் பென்னர் என்ற ஒரு மருத்துவர் தன் நோயாளிகளுக்கு சத்துணவாகக் கொடுப்பதற்காக உருவாக்கினார். முசோலினி ஹிட்லர் காலத்திலே இருந்த இன்னொரு சர்வாதிகாரி என்றேன்.

தனக்கு ஆதரவாக மக்கள் மனதை மாற்றுவதற்கு சினிமாதான் சிறந்த வழி என்று முசோலினி நினைத்தார். அதற்காக தன்னை ஆதரித்து நிறைய படங்கள் எடுக்க வைத்தார். இந்த ஐடியா அவருக்கு ஹிட்லரிடமிருந்துதான் கிடைத்தது. “இப்படி தன்னைப் புகழணும்னு படம் எடுத்த சர்வாதிகாரிகளைப் பத்தியே ஒருத்தர் ஒரு படம் எடுத்து அவங்களைக் கலங்க அடிச்சிருக்கார் தெரியுமா?” என்று ஞாநி மாமா கேட்டார். அவர் சார்லி சாப்ளின்!

ஹிட்லருக்கு சாப்ளின் படம் பிடிக்கும். ஆனால், ஹிட்லருடைய கட்சி வெளியிட்ட கொல்லப்படவேண்டியவர்கள் பட்டியலில் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் முதல் சாப்ளின் வரைக்கும் பல முக்கியமான பெயர்கள் இருந்தன. இந்தப் பட்டியலைப் பார்த்த பிறகுதான் சாப்ளின், ஹிட்லரைக் கிண்டல் செய்யும் கிரேட் டிக்டேட்டர் (Great dictator) என்ற படத்தை எடுத்தார்.

மாமாவிடம் இருந்த டிக்டேட்டர் டி.வி.டி.யைப் போட்டுப் பார்த்தோம். சாப்ளின் ஒரே ரகளைதான். எனக்கு ஒரு சந்தேகம். அதை மாமாவிடம் கேட்டேன். “சாப்ளின் இவ்வளவு காமெடி கலாட்டா செய்கிறாரே. சின்ன வயதில் சமர்த்தாக இருந்திருப்பாரா ?”

“இல்லை மாலு. சாப்ளினுக்கு சின்ன வயதில் சாப்பாட்டுக்கே சிரமம். பெற்றோர் இருவருமே ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சிகளில் ஆடுபவர்களாக இருந்தார்கள். அப்பா குடிகாரர். வீட்டை கவனிக்கவில்லை. அம்மா தையல்வேலை செய்து பிழைத்தார். சாப்ளினை அனாதை விடுதியில் சேர்த்தார்கள். அங்கே சிறுவர்கள் வேலை செய்யவேண்டும். தங்குவதற்கு இடமும் சாப்பிட உணவும் கிடைக்கும்.”

“அந்த மாதிரி நிலைமையில் எப்படி சாப்ளினுக்கு ஆடல் பாடல் காமெடி எல்லாம் கற்க முடிந்தது?” என்று கேட்டான் பாலு.

“சாப்ளின் நிறைய நாடகங்கள் பார்த்தார். கதைகள் படிப்பார். அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களில் தனக்குப் பிடித்த கேரக்டராக தன்னையே கற்பனை செய்து கொள்வார். அந்தப் பாத்திரம் மாதிரியே பேசுவது, பாவனை செய்வது என்று தனக்குத்தானே விளையாட்டு காட்டிக்கொண்டே அவர் வளர்ந்தார்.”

“அப்படி சாப்ளின் என்ன மாதிரி கேரக்டர்களை ரசித்தார் ?”

“சாப்ளினுக்கு ஒரு நூறு வருடம் முன்னால் பிறந்த ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ். அவருடைய பாத்திரங்கள் தான் சாப்ளினுக்குப் பிடித்தவை.”

உடனே வாலு, “டிக்கன்ஸ் பிறந்த நாள் இந்த வாரம் வருகிறது. பிப்ரவரி 7” என்றது.

“நான் டிக்கன்ஸுடைய மூன்று புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆலிவர் ட்விஸ்ட், டேல் ஆஃப் டூ சிட்டீஸ், டேவிட் காப்பர்ஃபீல்ட்” என்றேன். உடனே பாலு “டூப்” என்றான். “எல்லா புக்குமே சுருக்கி எழுதின வெர்ஷன் வந்திருக்கு. அதைத்தான் படிச்சேன். பெரியவளானதும் ஒரிஜினலைப் படிப்பேன். ஆலிவர் ட்விஸ்ட்டை ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் நிச்சயம் படிக்க வேண்டும். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒருத்தர் மேலே வரமுடியும் என்பது புரியும்.” என்றேன்.

“டிக்கன்ஸும் சாப்ளின் மாதிரிதான். சின்ன வயதில் மிகவும் ஏழ்மை. கடனைக் கட்டவில்லை என்பதால் டிக்கன்ஸுடைய அப்பாவை சிறையில் போட்டுவிட்டார்கள். டிக்கன்ஸை அனாதை விடுதியில் சேர்த்தார்கள். அவர் தினமும் பத்து மணி நேரம் ஒரு ஷூ பாலீஷ் தொழிற்சாலையில் பாலீஷ் மை சட்டிகளுக்கு சீல் வைத்து மூடி லேபிள் ஒட்டும் வேலையை செய்ய வேண்டியிருந்தது. டிக்கன்ஸும் சாப்ளின் போலவே தான் படித்த, கேட்ட கதைகளில் வரும் கேரக்டர்களாக தன்னைக் கற்பனை செய்துகொண்டு விளையாடித்தான் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டார்” என்றார் மாமா.

எவ்வளவு சாதாரண நிலையிலிருந்து எவ்வளவு உச்சத்தை எட்டியிருக்கிறார்கள்! சாப்ளினுக்கு ஒரு முறை ஒரே நாளில் 73 ஆயிரம் ரசிகர் கடிதங்கள் வந்ததாம். அவ்வளவு பாப்புலர் அவர். டிக்கன்ஸுடைய நாவல்கள் உலகத்திலேயே மிக அதிகம் விற்பனையான நாவல்கள். டேல் ஆஃப் டூ சிட்டிஸ் மட்டுமே 20 கோடி பிரதிகள் விற்றிருக்கின்றன. டிக்கன்ஸுடைய கதைகளை வைத்து இது வரை 200க்கு மேற்பட்ட திரைப்படங்கள், டி.வி. தொடர்கள் வந்துள்ளன. இன்றும் நிறைய பேருக்கு அவர் கதைகள் சோறு போடுகின்றன. ஒரு காலத்தில் அவரே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்தவர்!

“சோறு சமைக்க முடியாமல் இன்னும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடுக்க கொஞ்சம் மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் வந்திருக்கின்றன. போய் கொடுத்துவிட்டு வருவோமா?” என்றார் மாமா. “யாருக்கு ? எங்கே?” என்று கேட்டேன்.

“வெள்ளத்தில் குடிசைகள் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர்” என்றார் மாமா. எல்லாரும் போனோம்.

நான் இதற்கு முன்னால் இந்த மாதிரி இடத்துக்குப் போனதே இல்லை. இதுதான் முதல் தடவை. தெருவிலிருந்து பார்த்தால் குடிசைமயமாகவே தெரியும்.

அவ்வளவுதான். உள்ளே நுழைந்தால், சந்துக்குள் சந்து, அதற்குள் ஒரு பொந்து என்று போய்க் கொண்டே இருக்கிறது. இத்தனூண்டு இடத்தில் இத்தனை பேர் எப்படி இருக்கிறார்கள்! ஒரு வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். வீடு மொத்தமே அஞ்சடிக்கு அஞ்சடிதான். அதிலே ஆறு பேர். வீட்டுப் பின்பக்கம் காலை வைத்தால் இப்போதும் கூவம் ஓடிக்…. இல்லையில்லை தேங்கி இருக்கிறது. மழை, வெள்ளம் எதுவும் வராமல் நல்ல வெயில் அடித்தால் கூட, இந்த இடம் மனிதர்கள் குடியிருப்பதற்கான இடம் இல்லை.

ஏன் டிக்கன்ஸும் சாப்ளினும் லண்டன் அனாதை விடுதிகள் பற்றி கதையும் படமும் செய்த மாதிரி, நம் ஊரில் யாரும் இந்த குடிசை வாழ்க்கை பற்றி உருப்படியாக எதுவும் செய்யவே இல்லை? இங்கேயிருந்தே ஒரு டிக்கன்ஸும் சாப்ளினும் என்றைக்காவது வருவார்களா என்று யோசித்தேன்.

என்னைப் போல, பாலுவைப் போல நிறைய குட்டிப் பசங்களை அங்கே பார்த்தேன். அவர்களெல்லாம் தங்களை எந்த மாதிரி கேரக்டர்களாக நினைத்துக் கொண்டு விளையாடுவார்கள்?

வாலுபீடியா

1. சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 30% பேர் குடிசைகளில் இருக்கிறார்கள். மும்பையில் 40%. கொல்கத்தாவில் 30%. டெல்லியில் 15%. பெங்களூருவில் 9%.

2. டிக்கன்ஸ் தன் நாவல்கள் எல்லாவற்றையும் தொடர்கதைகளாகவே எழுதினார். மாதாமாதம் ஓரிரு அத்தியாயங்கள் வீதம் இவை தனிப் புத்தகங்களாக வந்தன.

3. சாப்ளின் நடிகர் மட்டுமல்ல. பியானோ, செல்லோ, வயலின் இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர். சிறந்த இசையமைப்புக்காக ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறார். ( படம்: லைம்லைட்.1973)



- ஞாநி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us