ஞாநி எழுதும் மாலுவின் டயரி (16) - ஏன் எனக்கு ஹாஸ்பிடல் பிடிக்கும்?
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (16) - ஏன் எனக்கு ஹாஸ்பிடல் பிடிக்கும்?
PUBLISHED ON : மே 02, 2016

எனக்குப் பிடிச்ச இடம் ஹாஸ்பிடல் அப்படினு சொன்னா எல்லாரும் ஆச்சரியப்படுவாங்க. ஆனா, அதான் நிஜம். அடிக்கடி ஏதாவது ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்குப் போய் அங்க நடக்கிறதை எல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருக்க எனக்குப் பிடிக்கும். 'அங்க என்ன வேடிக்கை' அப்படினு கேட்பீங்க?
எத்தனை விதமான ஜனங்க வர்றாங்க, ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு விதமான நோய், அத்தனை நோய்க்கும் எவ்வளவு விதமான சிகிச்சை, எவ்வளவு பேர் வேலை பாக்குறாங்க...
மெடிசின் படிப்புன்னாலே நாம, டாக்டர் படிப்பைப் பத்தி மட்டுந்தான் நினைக்கிறோம். ஆனா, ஒரு ஆஸ்பத்திரியில போய்ப் பார்த்தா, ஒரு டாக்டர் வேலை செய்யறதுக்குப் பின்னால நிறைய நர்ஸ், அஸிஸ்டன்ட், டெக்னிஷியன், அப்படினு விதவிதமா நிறையப் பேர் வேலை பார்க்க வேண்டியிருக்கு.
ஞாநி மாமா எப்ப ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனாலும், நானும் பாலுவும், வாலுவும் தவறாம போய்ப் பார்ப்போம். அப்படிப் போறப்ப மாமா எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல்ல டாக்டரைத் தவிர இன்னும் எத்தனை விதமான வேலைகள் இருக்குனு கவனிக்கக் கத்துக்கொடுத்தாரு. இந்த வாரம், மாமா திரும்ப ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனதும் மூணு பேரும் போனோம். மாமா கழுத்துல, இரட்டைக் குழாய் வச்சு இருக்கு. 'என்ன இது'ன்னு கேட்டேன். 'எனக்கு டயாலிஸிஸ் தேவைப்படாதுன்னு நான் திமிரா இருந்ததுக்கு பனிஷ்மென்ட்' அப்படின்னாரு மாமா. 'உங்க உணவுக் கட்டுப்பாடுதான் பேமஸ் ஆச்சே?' என்று பாலு கேட்டதற்கு, 'அது ரெண்டரை வருஷம் டயாலிஸிஸை தள்ளிப்போட உதவியிருக்கு. ஆனா, எனக்கு என்னைக்குமே டயாலிஸிஸ் தேவைப்படாதுன்னு நினைச்சது தப்பு. இப்ப, அவசரமா டயாலிஸிஸ் செய்ய கழுத்துல ஓட்டை போட வேண்டியிருக்கு' என்றார் மாமா.
'வழக்கமா கையிலதானே செய்வாங்க?' என்று கேட்டேன். 'ஆமா, அதுக்கு கையில தமனியையும், சிரையையும் நிரந்தரமா இணைக்க, ஒரு சின்ன ஆப்பரேஷன் செஞ்சு வைச்சிருக்கணும், அதுக்குப்பேர் ஃபிஸ்டுளா. உலகத்துல இந்த முறையைக் கண்டுபிடிச்சு ஐம்பது வருஷம் ஆகுது. இது பொன்விழா ஆண்டு. இதைக் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி, எல்லாருக்குமே கழுத்து வழியாத்தான் டயாலிஸிஸ் பண்ணினாங்க' என்றார் மாமா.
'சரி, டயாலிஸிஸ் எப்ப கண்டுபிடிச்சாங்க? அதை ஏன் செய்யிறாங்க? என்று பாலு கேட்டதற்கு, 'சிறுநீரகம் கெட்டுப் போயிட்டா, வெளியிலிருந்து மெஷின் வழியா ரத்தத்தைச் சுத்தப்படுத்துற முறைதான் டயாலிஸிஸ்' என்றது வாலு.
'இரண்டாவது உலக யுத்தத்தின் போது இந்த முறையைக் கண்டுபிடிச்சாங்க. யுத்தத்துல பாதிக்கப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை கொடுக்க அஞ்சு டயாலிஸிஸ் மிஷின்களை ஜெர்மனியில் உருவாக்கினாங்க. யுத்தம் முடிஞ்ச பிறகு, இந்த அஞ்சு மிஷினையும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பினாங்க. இப்படித்தான் டயாலிஸிஸ் ஆரம்பமாச்சு' என்றார் ஞாநி மாமா.
'சரி, உடம்புல இருக்குற எல்லா ரத்ததையும் மிஷினுக்கு அனுப்பி, சுத்தப்படுத்தி, திரும்ப உடம்புக்கு அனுப்ப எவ்வளவு நேரமாகும்?' என்று அடுத்த கேள்வியைக் கேட்டான் பாலு. 'சுமார் 2 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரம் வரைக்கும் ஆகும்' என்று மாமா பதில் சொல்லி முடிப்பதற்குள், 'அதை யார் செய்வாங்க?' என்று அடுத்த கேள்வி. சளைக்காமல் பதில் வந்தது மாமாவிடம் இருந்து. 'என்ன செய்யணும்ன்னு டாக்டர் சொல்வாரு, டெக்னிஷியன்தான் அந்த மெஷினை அஞ்சு மணி நேரமும் இயக்குவாரு.'
'அதுக்கு ஏதாச்சும் படிப்பு இருக்கா?' என்று திரும்ப பாலு கேட்க, 'இதுக்கு மட்டுமே தனியா ஒரு வருஷம் படிக்கணும். இந்த மாதிரி ஆஸ்பத்திரியில இருக்குற நிறைய வேலைகளுக்காகக் குட்டிக் குட்டி படிப்புகள் நிறைய இருக்கு. ப்ளஸ் 2ல, கட் ஆஃப் மார்க் வாங்கறவங்கதான் டாக்டருக்குப் படிப்பாங்க. மார்க் கொஞ்சம் குறைவாயிட்டா, ஆயிரக்கணக்கான மெடிக்கல் டெக்னிஷியன் படிப்புல, ஏதாவது ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிச்சுட்டு வேலைக்குப் போகலாம். அவங்க இல்லாட்டி ஒரு ஹாஸ்பிடல் நடக்காது' என்றார் மாமா.
உடனே பாலுவும்,'அப்ப எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காட்டிக்கூட, செய்யிறதுக்கு நிறைய வேலை அதே ஃபீல்டுல இருக்கு. இல்லையா?' என்றான். உடனே மாமா, 'ஆமா பாலு, அந்த மாதிரி துணை மருத்துவப் படிப்புக்கு 'Para medical' னு பேரு. லட்சக்கணக்கான பேரு இன்னிக்கு அதுல வேலை பார்க்கறாங்க. எக்ஸ்ரே எடுக்குறவங்க, பிளட் டெஸ்ட் எடுக்குறவங்கன்னு சுத்தி கவனிச்சா இங்க விதவிதமான வேலை இருக்கிறது தெரியும்' என்றார் மாமா.
எனக்கு ஹாஸ்பிடல் பிடிச்ச இடமா இருக்கிறதுக்குக் காரணமே இதான். ஒருத்தருக்கு வலி இல்லாம சரியாகறதுக்கு இவ்வளவு பேர் இங்க வேலை பார்க்கறாங்க. எல்லாருக்கும், ஒரே நோக்கம்தான். அந்த ஒருத்தருக்கு வலியில்லாம சரி செஞ்சு அனுப்பி வைக்கணும்.
மாமா அடிக்கடி கேட்பார், 'எதுக்காக மெடிசின் படிக்க ஆசைப்படற மாலு?' முதல்ல என் கிளாஸ்மேட்ஸ் நாலு பேரும் ஒண்ணா டாக்டர் ஆகணும்ன்னு நினைச்சோம். அதைத் தவிர அப்ப காரணம் எதுவும் தெரியல. ஆனா, ஒவ்வொரு தடவையும் ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்த்துட்டு வரும்போது, ஏன் டாக்டர் ஆகணும்ங்கிற காரணம் தெளிவாப் புரியுது. இன்னொருத்தர் வலியை சரி பண்றது எவ்வளவு பெரிய சந்தோஷம்... அதுக்காகத்தான்.
வாலுபீடியா 1: உடலின் மீதி உறுப்புகள் எல்லாம், பழுதானால் ஓரளவு மீண்டும் தம்மைப் புதுப்பித்துக்கொள்ளக் கூடியவை. ஆனால், சிறுநீரகத்தால் அப்படிப் புதுப்பித்துக்கொள்ள முடியாது.
வாலுபீடியா 2: ஒரு நோயாளியின் பொன்மொழி: “அலோபதியா, ஹோமியோபதியா, ஆயுர்வேதமா, சித்த மருத்துவமா, அக்குபஞ்சரா என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி பண்ணிக் கொள்ளுங்கள். எனக்குத் தேவை நோயிலிருந்து விடுதலை. அது எதில் கிடைத்தாலும் வரவேற்பேன்.”
