தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டைரி (17) - நான் என்ன ஆகப் போகிறேன்?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (17) - நான் என்ன ஆகப் போகிறேன்?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (17) - நான் என்ன ஆகப் போகிறேன்?


PUBLISHED ON : மே 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''உலகத்தின் ஏழாவது அதிசயம் என்ன தெரியுமா?'' என்று பாலு கேட்டான்.

உடனே வாலு 'இந்த ஏழு அதிசயப் பட்டியலே ஏழு விதமாக இருக்கிறது. கிரேக்கர்கள் காலத்தில் போட்ட ஏழு அதிசயப் பட்டியலில் தொடங்கி நவீன காலத்தில் வெவ்வேறு அமைப்புகள் போடும் ஏழு அதிசயப் பட்டியல்வரை ஏழுக்கும் மேலேயே இருக்கின்றன' என்றது வாலு.

“நான் கேட்டது நவீன உலகத்தின் ஏழாவது அதிசயம் பற்றித்தான். அதை இதே மே மாதத்தில்தான் 22 வருடம் முன்னால் கட்டி முடித்தார்கள்” என்றான் பாலு.

அவன் குறிப்பிட்டது பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே கடலுக்கு அடியில் கட்டிய சுரங்கப்பாதையை. 'சனல்' (chunnel) என்று அதை அழைக்கிறார்கள். உலகத்திலேயே கடலுக்கடியில் இருக்கும் மிக நீளமான சுரங்கப்பாதை இதுதான். 150 அடி ஆழத்தில் 23 மைல் நீளத்துக்கு இருக்கிறது.

'அதில் பஸ், கார், லாரி, ரயில் எல்லாம் போக முடியுமா?' என்று கேட்டேன்.

உடனே ஞாநி மாமா, “எல்லாமே போகலாம். ஆனால் எல்லாவற்றையும் ரயிலில்தான் எடுத்துச் செல்ல முடியும். அந்த சுரங்கப்பாதையில் ரயில் மட்டும்தான் ஓடுகிறது. ஆனால், அந்த ரயிலிலேயே பயணிகள் தவிர, கார், லாரி, பஸ் எல்லாவற்றையும்கூட ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் ஏற்றிக் கொண்டு போவார்கள்” என்றார். மாமா அந்த ரயிலில் போயிருக்கிறாராம். 'கடலுக்கடியில் போவது பயமாக இருந்ததா?' என்று கேட்டேன்.

“சுற்றிக் கடல் இருப்பதே நமக்குத் தெரியாது. மூடின சுரங்கப் பாதைக்குள் ரயில் போய்க் கொண்டிருக்கும். வெளியே வேடிக்கை பார்க்க எதுவும் இருக்காது. சுரங்கப் பாதையில் இருக்கும் லைட் வெளிச்சம் மட்டும்தான் அவ்வப்போது தெரியும். 35 நிமிடப் பயணமும் அப்படித்தான்” என்றார் மாமா.

அந்தச் சுரங்கப் பாதையில் ரயில் தவிர இரண்டே இரண்டு வண்டிகள் ஓடியிருக்கிறதாம். கார் ரேஸ் சாம்பியன் 'ஜான் சர்ட்டீஸ்' ஒரு தொண்டு நிறுவன நிதி வசூலுக்காக அதில் கார் ஓட்டிக் காட்டியிருக்கிறார். இதே போல இன்னொரு சேம்பியன் 'கிறிஸ் புர்'ரும் அதில் சைக்கிள் ஓட்டியிருக்கிறார்.

அந்தச் சுரங்கப் பாதையில் தினசரி 30 ஆயிரம் பயணிகள் தவிர 6000 கார்கள், 2500 லாரிகள் போய் வருகின்றன. இப்படி இந்தக் கடலுக்குக் கீழே சுரங்கப்பாதை கட்டலாம் என்ற யோசனை 210 வருடங்களுக்கு முன்னால் நெப்போலியன் காலத்திலேயே வந்திருக்கிறது. 130 வருடங்களுக்கு முன்னால் ஒருத்தர் அதில் ஒரு மைல் வரை சுரங்கப்பாதை குடைந்து பார்த்துவிட்டு அத்துடன் திட்டத்தை விட்டுவிட்டார். கடைசியாக 1988ல் கட்டத் தொடங்கி 1994 மே மாதம் முடித்துவிட்டார்கள்.

“இதே மாதிரி நாம்கூட தமிழ்நாட்டில் இருந்து பத்து மைல் தூரத்தில் இருக்கிற இலங்கைக்குக் கடலில் சுரங்கப் பாலம் கட்டலாமே” என்றான் பாலு. “அதற்கு சுரங்கம் தேவையில்லை. வேண்டுமானால் மேம்பாலமே கட்டிவிட முடியும். மும்பையில் பாந்த்ராவிலிருந்து ஒர்லிக்கு போவதற்கு கடல் மேலேயே சுமார் நான்கு மைல் நீளப் பாலம் கட்டியிருக்கிறோம். அதை வடிவமைத்தவர் தமிழ்நாட்டுப் பொறியாளர்தான்” என்றார் மாமா.

உடனே பாலு “நான் கூட என்ஜினியராகி அந்த மாதிரி ஏதாவது பெரிதாகக் கட்டப் போகிறேன்” என்றான். “போன வாரம்தான் டாக்டராகப் போகிறேன் என்றாய். இந்த வாரம் என்ஜினியர். அடுத்த வாரம் என்னவோ?” என்று சிரித்தார் மாமா. “அதை அடுத்த வாரம்தான் முடிவு செய்வேன்” என்றான் பாலு.

உடனே மாமா சொன்னார். “நம்மைச் சுற்றி எல்லாத் துறையிலும் விதவிதமான அதிசயங்கள் எப்போதும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒன்றுக்குள் நுழைந்து பார்த்தால் அது பிரமிப்பாக இருக்கும். அடுத்ததைப் போய்ப் பார்த்தால் அதுவும் பிரமிப்பாகத்தான் தெரியும். எதில் போய் என்ன செய்யவேண்டுமென்று நாம் நிதானமாக யோசித்து முடிவு செய்யவேண்டும். எதைச் செய்வது நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதுதான் முக்கியம்”

அப்போது, தான் பார்த்த ஒரு போர்க் கப்பலைப் பற்றிச் சொன்னார் மாமா. அதன் பெயர் ஐ.என்.எஸ்.விக்ராந்த். இந்தியாவின் மிக முக்கியமான போர்க் கப்பலாக இருந்தது. கடலுக்குள் போய்ப் போர்ப் பயிற்சிகள் செய்தபோது அதைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் மாமாவும் இருந்தாராம். அப்போது அவருக்கு 25 வயதுதான். அந்தக் கப்பலில், அடிப்பகுதியில் போர் விமானங்கள், பீரங்கிகள் எல்லாம் வைத்திருக்கும். கப்பலில் மேல் தளத்தில் லிஃப்ட் மாதிரி விமானம் மேலே கொண்டு வரப்பட்டதும், அப்படியே மேலே ஏறிப் பறக்கும். பீரங்கி தாங்கிய ஜீப்கள் எல்லாம் கப்பலின் மேல் தளத்தில் இருக்கும். 1971ல் பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய யுத்தத்தில் இந்தக் கப்பல்தான் முக்கியமான பல தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

“அந்தக் கப்பலில் மேல் தளத்தில் இருந்து அந்தப் பயிற்சிகளை எல்லாம் பார்க்கும்போது, ஒரே பிரமிப்பு. எனக்கும் அந்த வேலைக்குப் போகலாமா என்று ஆசையாகத்தான் இருந்தது. இந்த மாதிரி, பார்த்து பிரமிக்கிற எல்லாவற்றிலும் நாமே போய் ஈடுபட முடியாது. ஏதாவது ஒன்றைத்தான் முடிவு செய்யவேண்டும். அதற்கு உங்களுக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது” என்றார் மாமா.

“அந்தக் கப்பல் இன்னும் இருக்கிறதா?” என்று கேட்டான் பாலு.

“இல்லை. கொஞ்ச காலம் அதை மியூசியமாக வைத்திருந்தார்கள். அப்புறம் உடைத்து எடைக்குப் போட 60 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டுவிட்டார்கள். இந்த வாரம் அந்தக் கப்பலில் உடைத்து எடுத்த இரும்பிலிருந்து தயாரித்த டூ வீலர் பைக்குகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன” என்றார் மாமா.

எனக்கு சட்டென்று ஒரு விஷயம் புரிந்தது. 'எவ்வளவு பிரமிப்புக்குரிய விஷயமாயிருந்தாலும், அதன் காலம் முடிந்து விட்டால், அது இன்னொரு சாதாரண விஷயமாகிவிடும். அவ்வளவுதான். அப்படித்தானே மாமா' என்று கேட்டேன்.

மாமா சிரித்தார். “சாதாரண விஷயமே இன்னொரு சந்தர்ப்பத்தில் பெரிய விஷயமாகிவிடும். பிரமாண்டமான விஷயம் எல்லாம் சாதாரணமாகத் தோன்றும். இதெல்லாம் மாறி மாறி வரும். அதுதான் வாழ்க்கையின் சுவாரசியம்” என்றார்.

“இந்த மாதிரிப் பேசுவதுதானே பிலாசபி? இப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கும். எனவே நான் பெரியவன் ஆனதும் பிலாசபிதான் படிக்கப் போகிறேன்” என்றான் பாலு.

நாங்கள் எல்லாரும் சிரித்தோம்.

வாலுபீடியா 1: நவீன ஏழு அதிசயங்கள்:

1. எம்பையர் ஸ்டேட் பில்டிங் நியூயார்க், 2. பிரேசில் இட்டய்பூ அணைக்கட்டு, 3. டொரன்டோ சி.என்.டவர், 4. பனாமா கால்வாய், 5. நெதர்லாந்து வடக்குக் கடல் அணைகள், 6. சான் பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பாலம், 7. பிரிட்டிஷ் 'சனல்'.

வாலுபீடியா 2: கடலுக்கு அடியில் பிரான்ஸிலிருந்து பிரிட்டன் செல்லும்போது போனில் பேச வசதியாக இப்போது 'சனல்' பகுதியில் செல்போன் அலைவீச்சு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us