PUBLISHED ON : செப் 26, 2016

'இந்த வாலு செய்யற விஷமத்தைப் பார்த்தாய்? உன்னையும் என்னையும் காமிக் கேரக்டர்ஸ் மாதிரி வரைஞ்சு வெச்சிருக்கு' என்றான் பாலு.
'இது விஷமமே இல்லை பாலு. பாராட்டு. காமிக் புக் கேரக்டரா இருக்கறது விளையாட்டு இல்ல. பெரிய கௌரவம். ஆஸ்ட்ரிக்ஸ், டின் டின், டெனிஸ், பாப் ஐ, ஸ்னூப்பி, சிம்ப்சன்ஸ் எல்லாம் எவ்வளவு பிரபலமா இருக்காங்க தெரியும் இல்ல?' என்றேன். 'தமிழ்ல அந்த மாதிரி கேரக்டர்ஸ் இல்லைங்கறதுனாலதான் உங்களை அப்பிடி வரைஞ்சு பார்த்தேன்' என்றது வாலு.
உடனே ஞாநி மாமா, 'தமிழில் இல்லாம இல்ல. 1940லருந்தே பல பத்திரிகைகள்ல அப்பப்ப முயற்சி பண்ணிப் பார்த்திருக்காங்க. துப்பறியும் சாம்பு, அப்புசாமி, குண்டு பூபதின்னு பல காமிக் ஸ்ட்ரிப் கேரக்டர்கள் இருந்திருக்காங்க. கார்ட்டூனிஸ்ட் மதன்தான் நிறைய கேரக்டர்களை உருவாக்கினவர். அவரோட சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டை வால் ரெங்குடு, புரோக்கர் புண்ணியகோட்டி, முன்ஜாக்கரதை முத்தண்ணா எல்லாம் ஒரு பத்து வருஷம் அச்சுல வந்திருக்காங்க. ஆனா மேலை நாடுகளோட ஒப்பிடும்போது இங்கே ரொம்ப ரொம்பக் குறைவுதான்' என்றார்.
'அங்கே ஏன் அதிகமா இருக்கு?' என்று கேட்டேன்.
'அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. முதல் காரணம் ஒரு காமிக் கேரக்டர் ஒரே ஒரு பேப்பர்ல வெளியாகறது இல்ல. ஒரே சமயத்துல நாட்டோட வெவ்வேற பத்திரிகைகள்ல வெளியாகற மாதிரி அதை வினியோகிக்க சிண்டிகேட் அமைப்புகள் இருக்கு. நிறைய இடங்கள்ல வெளியாகறதுனால, கதை எழுதின எழுத்தாளர், படம் வரைஞ்ச ஓவியர் ரெண்டு பேருக்கும் நல்ல சம்பளம் கொடுக்க முடியும். இங்கே அந்த மாதிரி சூழ்நிலை இல்ல. தவிர படக்கதைக்கும் காமிக் ஸ்ட்ரிப்புக்கும் அதிகமா உழைக்கணும். அதுக்கேத்த சன்மானம் நம்ம ஊர்ல குடுக்கற நிலைமை இல்ல' என்றார் மாமா.
'தமிழ்லதானே அப்படி இங்கேயே இங்கிலீஷ் பேபபர்லாம் இருக்கே. அதுலயும் வெளிநாட்டு காமிக்ஸ்தானே வாங்கிப் போடறாங்க. நம்ம ஊர் ஓவியர்கள் இல்லியே?' என்றேன். 'இங்கேயும் சில பேர் இருக்காங்க. மேரியோ மிராண்டா, அஜித் நைனன், பொன்னப்பா எல்லாம் முக்கியமானவங்க. பொன்னப்பா யூ அண்ட் ஐ-ங்கிற தலைப்பு, கண் பார்வையில்லாத ஒருத்தரை நம்ம சமூகம் எப்பிடி நடத்துதுங்கறதை தொடர்ந்து காமிக் ஸ்ட்ரிப்பா வரைஞ்சுகிட்டிருக்காரு' என்றார் மாமா.
'காமிக் வரையற பெண் ஓவியர்கள் யாரும் இல்லையா மாமா' என்று கேட்டேன். 'ஓ, இருக்காங்களே. எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒருத்தர்தான் இருக்காங்க. மஞ்சுளா பத்மநாபன்னு பேர். அவங்க எழுத்தாளர், நாடகாசிரியர், ஓவியர். அவங்க சுகின்னு ஒரு கேரக்டரை வெச்சு ஒன்பது வருஷம் ஆங்கில தினசரிகள்ல வரைஞ்சுகிட்டிருந்தாங்க. அப்புறம் 19 வருஷம் சுகி அச்சுல வரவே இல்லை. இப்ப திரும்பவும் ஹிண்டு பிசினஸ் லைன் பேப்பர்ல சுகி வர ஆரம்பிச்சிருக்கா' என்றார் மாமா.
'எவ்வளவு வருஷமா உலகத்துல படக் கதை, காமிக் ஸ்ட்ரிப்லாம் இருக்கு?' என்று கேட்டான் பாலு.
'ஒரு விதத்துல நம்ம ஊர் கோயில்கள்ல வெளிப்பக்கம் புராணக் கதை சொல்ற சிற்பங்கள் இரு்கு இல்ல, அதுவே ஒரு படக்கதை வடிவம்தான். அதனால் இந்த படக்கதை வடிவம்கறது உலகத்துல ஆயிரக்கணக்கான வருஷமா இருக்குன்னு சொல்லலாம். அச்சு இயந்திரம் கண்டுபிடிச்சு செய்தித்தாள் வெளியிட ஆரம்பிச்சதுலருந்து பார்த்தா சுமார் 150 வருஷமா இருக்கு. அமெரிக்கால ரெண்டு பெரிய பத்திரிகை அதிபரகள் இருந்தாங்க. ஒருத்தர் வில்லிய் ஹெர்ஸ்ட். இன்னொருத்தர் புலிட்சர். ரெண்டு பேரும் போட்டிப் போட்டுக்கிட்ட தங்கள் பேப்பர்கள்ல காமிக் ஸ்ட்ரிப்களை அதிகமா வெளியிட்டாங்க. அமெரிக்காவை விட அதிகமா ஐரோப்பால படக்கதைக்கு மவுசு இருந்தது. காமிக் கேரக்டர்களான டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ்க்கு எல்லாம் பெல்ஜியத்துல தனித்தனி மியூசியமே இருக்கு. டின் டின் மியூசியத்தை நான் சுத்திப் பார்த்திருக்கேன்' என்றார் மாமா.
'அந்த மியூசியத்துல என்ன இருக்கும்?'
'முதன் முதல்ல டின் டின் கேரக்டரை ஓவியர் எப்படி வரைஞ்சாருங்கறதுல ஆரம்பிச்சு, ஒவ்வொரு வருஷமும் அது எப்படியெல்லாம் மாறிகிட்ட வந்திருக்கு. கதையில காலத்துக்கேற்ற மாதிரி என்ன மாற்றங்கள் எல்லாம் செஞ்சாங்க. இந்த மாதிரி எல்லா விவரமும் இருக்கும். டின் டின் கிட்டத்தட்ட 50 வருஷம் தொடர்ந்து வந்திருக்கு' என்றார் மாமா.
'இந்த மாதிரி நம்ம நாட்டு கேரக்டர்களுக்கும் மியூசியம் வெக்கலாம் இல்ல?' என்றான் பாலு. 'மியூசியம் இருக்கட்டும் முதல்ல ஒரு நல்ல புத்தகம் கூட நம்ம நாட்டு ஓவியர்களைப் பற்றியோ காமிக்ஸ் பற்றியோ இன்னும் வரல. இந்த புக்கைப் பார். பிரான்ஸ்ல ஒரு கேலரியில இதை வாங்கினேன்' என்று மாமா ஒர புத்தகத்தை நீட்டினார்.
'13 artists children should know' என்ற அந்தப் புத்தகம் வழவழப்பான கெட்டித்தாளில் எல்லா பக்கமும் கலரில் அச்சிடப்பட்டிருந்தது. லியனர்டோ டாவின்சி, மொனே, ரூசோ, வான்கா, வாரால், பிரைடா காலொ, பிகாசோ என்று முக்கிய 13 பேரைப் பற்றியும், அவர்களுடைய ஓவியங்களுடன் தகவல் களஞ்சியமாக அந்த சின்ன புத்தகம் இருந்தது.
'இந்த மாதிரி போட நம்ம ஊர்ல 13 பேர் இருக்காங்களா?' என்று கேட்டேன். 'தமிழ்லயே 30, 40 பேர் இருக்காங்க. இந்தியா முழுக்க எடுத்தா 100 பேர் இருப்பாங்க' என்றார் மாமா. 'எங்கே பேர் சொல்லுங்க பார்ப்போம்' என்றான் பாலு. மாமா அடுக்கிக் கொண்டே போனார்.
'பத்திரிகைல ஓவியம் வரைஞ்ச மேதைகள்னு எடுத்துக்கிட்டாலே மாலி, றாலி, கோபுலு, மணியம், ஸிம்ஹா, ஜெயராஜ், மாருதி, ராமு, எஸ். பாலு, சங்கர், மணியம் செல்வன், அரஸ், ஷ்யாம், கார்ட்டூனிஸ்ட்டுகள் தாணு, ஸ்ரீதர், மதன், உதயன், மதி, கேசவ், பொர்ட்ரெய்ட் ஓவியர் மாதவன், சிற்பி தனபால், கலைஞர்கள் ஆர்.பி. பாஸ்கரன், சந்தானராஜ், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, விஸ்வம், டிராட்ஸ்கி மருது, வீர சந்தானம், செழியன்... இப்பிடி நிறைய பேர் இன்னும் இருக்காங்க'
'இவங்க எல்லார் படைப்பையும் ஒரே இடத்துல மியூசியம் மாதிரி வெச்சுப் பார்த்தா நல்லாதான் இருக்கும் இல்ல?' என்றேன். 'முதல்ல இவங்களைப் பத்திலாம் இந்த மாதிரி ஒரு புக் வந்தாலே போதுமே' என்றார் மாமா.
பாலு ஏதோ சொல்ல வாயைத் திறந்தான். 'என்ன பாலு நீ பெரியவனான உடனே அந்த மாதிரி ஒரு புக் தயாரிக்கப் போறே இல்லியா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
'இல்லையில்ல. அதை நீ செய். நான் ஒரு பாபுலர் காமிக் கேரக்டராயிடப் போறேன். எனக்கே ஒரு மியூசியம் வெப்பாங்க பாரு' என்றான் பாலு.
'எது என் கையிலதான் இருக்கு' என்றது வாலு.
வாலுபீடியா 1: டின் டின் காமிக்ஸ் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 20 கோடி பிரதிகள் வரை விற்றிருக்கிறது.
வாலுபீடியா 2: புகழ் பெற்ற காமிக் கேரக்டர்களான டின் டின், ஆஸ்ட்ரிக்ஸ், தி ஃபிளின்ட்ஸ்டோன்ஸ் கதைகள் எல்லாமே ஹாலிவுட்டில் சினிமாவாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
