ஞாநி எழுதும் மாலுவின் டயரி (13) - நடுவுல கொஞ்சம்...
ஞாநி எழுதும் மாலுவின் டயரி (13) - நடுவுல கொஞ்சம்...
PUBLISHED ON : ஏப் 11, 2016

கடற்கரையில் விதவிதமான மணல் வீடுகள் கட்டி விளையாடினோம். சென்னையில் மட்டும் பீச் இல்லாமற்போயிருந்தால், நகரத்தில் பாதி பேருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று ஓர் எழுத்தாளர் எழுதியிருப்பதாக ஞாநி மாமா அடிக்கடி சொல்வார்.
திருவல்லிக்கேணியில் இப்போது கண்ணகி சிலை இருக்கும் கடற்கரையருகே போகும்போதெல்லாம் எனக்கு பாரதியார் ஞாபகம் வரும். அவர் வீடு அருகேதானே இருந்தது! குழந்தைகள் சகுந்தலாவையும் தங்கத்தையும் இங்கே அழைத்து வந்து மணலில் விளையாடியிருப்பாரா என்றெல்லாம் கற்பனை செய்வேன்.
மணலில் நாங்கள் விதவிதமான விளையாட்டுகள் விளையாடுவோம். அங்கே கிரிக்கெட், வாலிபால் மாதிரி ஆட்டங்களை ஆடுவது மட்டும்தான் எனக்குப் பிடிக்காது. அவை கடற்கரைக்கு அமைதி தேடி வருபவர்களுக்குத் தொல்லையாக இருக்கும். பொது இடத்தில் இன்னொருத்தருக்கு தொல்லையாக நாம் எதுவும் செய்யக் கூடாது என்ற அடிப்படைப் பண்பே நம்மில் பல பேருக்குக் கிடையாது. அது ஏன் அப்படி? மாமாவிடம் கேட்டேன்.
“ஜெஃபர்சன் சொன்ன ஐந்து சொற்கள் அவர்கள் மண்டைக்குள் உறைக்கவில்லை. அதுதான் காரணம்” என்றார். “அவர் சொல்லி முந்நூறு வருடம் கூட ஆகவில்லை. ஆனால் 2300 வருடம் முன்னால் சொல்லப்பட்டதுதான் எல்லார் தலைக்குள்ளேயும் இன்னும் உட்கார்ந்திருக்கிறது” என்றார் மாமா. அவர் இப்படித்தான் புதிர் புதிராக ஏதாவது சொல்லுவார். அப்புறம் அவரே விவரிப்பார்.
“எந்த ஜெஃபர்சன்? என்ன அஞ்சு வார்த்தை?” என்று கேட்டான் பாலு.
மாமா ஜெஃபர்சனைப் பற்றி விவரித்தார். நானும் அந்த ஜெஃபர்சன் பற்றிப் படித்திருக்கிறேன். அமெரிக்க சுதந்திர வரலாறு பற்றிய பாடத்தில் வெறுமே ஓரிரு வரிகள் அவரைப் பற்றி இருக்கும். இன்று மாமா நிறைய சொன்னார்.
தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி. அமெரிக்கா சுதந்திரம் அடைந்தபோது அந்த விடுதலைப் பிரகடனத்தை எழுதியவர்களில் அவர் முக்கியமானவர். அந்தப் பிரகடனத்தில்தான் 'எல்லா மனிதர்களும் சமமானவர்களாகவே படைக்கப் பட்டிருக்கிறார்கள். (all men are created equal)' என்ற முக்கியமான ஐந்து சொற்களை அவர் எழுதியிருக்கிறார். இதே கருத்தைத்தான் பின்னால் உலகத்தில் பல நாடுகளின் அரசியல் சட்டங்களில் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.
அதற்கு முன்னால் என்ன இருந்தது? அதுதான் 2300 வருடம் முன்னால் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் சொன்னது என்றார் மாமா. 'பிறக்கும்போதே சிலர் ஆள்வதற்கென்றும் வேறு சில பேர் அவர்களால் ஆளப்படுவதற்கென்றும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது' என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறாராம். 'பொது இடங்களில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொல்லை செய்கிறவர்கள் அந்த நினைப்பு உடையவர்கள்தான்' என்றார் மாமா.
ஜெஃபர்சன் காலத்தில் அடிமை முறை இருந்தது. அவரிடமே நிறைய அடிமைகள் வேலைக்கு இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஜெஃபர்சன் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். அவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அமெரிக்க விடுதலைப் பிரகடனம் மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டில் புரட்சி நடந்து முடிந்ததும் அங்கே எழுதிய விடுதலைப் பிரகடனத்தை எழுதுவதிலும் அவர் பங்களித்திருக்கிறார்.
அவர் வெறும் அரசியல்வாதி இல்லை. விஞ்ஞானி; விவசாயி; பொருளாதார அறிஞர்; கட்டட வடிவமைப்பு நிபுணர். புகையிலை பயிரிடுவதை விட கோதுமை பயிரிடுவதுதான் லாபகரமானது என்று ஆராய்ந்து செயல்படுத்தியிருக்கிறார். நிலத்தை உழுவதற்கான கலப்பையை அவர் நவீனமாக்கியிருக்கிறார். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி சுழல்வதற்கான சுழல் நாற்காலி, மடக்கும் நாற்காலி, பொய் சொல்லும்போது நம் உடலில் ஏற்படும் இதயத்துடிப்பு, வியர்வை மாற்றங்களை அளக்கும் கருவியான 'பாலிகிராஃப்' என்று பலவற்றை அவர் கண்டுபிடித்திருக்கிறார். எந்தக் கண்டுபிடிப்புக்கும் அவர் வணிக உரிமை கோர மாட்டாராம். மனிதன் கண்டுபிடிப்பது எல்லாம் சக மனிதன் பயன்படுத்துவதற்குத்தான் என்பது அவர் கொள்கை.
“தோண்டத் தோண்ட ஒருத்தரைப் பத்தி நிறைய விஷயம் தெரியவருதே..” என்றது வாலு கடற்கரை மணலைத் தோண்டிக் கொண்டே.
“எப்படித் தோண்ட வேண்டும் என்று கூட ஜெஃபர்சன் சொல்லியிருக்கிறார். புதை பொருள் அகழ்வாராய்ச்சி செய்யும்போது எப்படி அகழ ஆரம்பிக்க வேண்டும் என்று இப்போதும் நாம் அவர் உருவாக்கிய விதிமுறைகளைத்தான் பின்பற்றுகிறோம். அவர் ஓய்வு பெற்ற பின்னர்கூட சும்மா இருக்கவில்லை. என்ன செய்தார் தெரியுமா?” என்றார் மாமா.
“ஓய்வு பெற்றாரா? கடைசி வரை அவரேதான் பதவியில் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லையா? அதுவே வித்தியாசமாக இருக்கிறதே!”
ஜெஃபர்சன் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு 66 வயதுதானாம். அப்புறம் 17 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.
“ஒரு யூனிவர்சிட்டியையே கட்டி முடித்துவிட்டார்!” என்று மாமா சொன்னதும் பாலு துள்ளி குதித்தான். “எங்க ஊர் எம்.எல்.ஏ. கூட காலேஜ் கட்டியிருக்கிறார்.”
மாமா சிரித்தார். “உங்க எம்.எல்.ஏ. காலேஜ் கட்டி, பணம் வசூல் செய்கிறார். ஜெஃபர்சன் யூனிவர்சிட்டி கட்டி, தன் பணத்தையெல்லாம் இழந்து கடனாளியானார்” என்றார் மாமா.
1819ல் சுமார் 1500 ஏக்கர் நிலத்தில் ஜெஃபர்சன் ஆரம்பித்த யூனிவர்சிட்டி ஆஃப் வர்ஜீனியா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வர்ஜீனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சென்ற வருடம் உயிரியல் உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய ஒரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள். இதனால் மருத்துவப் பாடப் புத்தகத்தையே இனி திருத்தி எழுதவேண்டி வந்துள்ளது. நம் மூளைக்கும் உடலில் இருக்கும் நிண நீர் நாளங்களுக்கும் இடையே இதுவரை அறியப்படாத புதிய நாள இணைப்புகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்திக்கும் மூளைக்கும் இருக்கும் உறவு பற்றி இதன் மூலம் இன்னும் புதிய விஷயங்கள் தெரியவரும் என்றும் பல நோய்களுக்குத் தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெஃபர்சன் இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியபோது மிக முக்கியமான ஒரு மாற்றத்தைச் செய்தார். அது வரை அமெரிக்காவில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எல்லாம் மையமாக ஒரு தேவாலயம் இருக்கும். அதைச் சுற்றித்தான் வகுப்பறைகள், விடுதிகள், மைதானங்கள் எல்லாம் கட்டுவார்களாம். ஆனால் ஜெஃபர்சன், 'பல்கலைக்கழகத்தில் மதத்துக்கு இடமில்லை' என்று சொல்லிவிட்டார். தேவாலயத்துக்கு பதில் மையமாக அவர் வைத்தது ஒரு பிரமாண்டமான நூலகம்! கிரேக்க, ரோமானிய பாணியில் அவர் வடிவமைத்த இந்தப் பல்கலைக்கழகத்தை இன்று யுனெஸ்கோ நிறுவனம் உலகத்தின் முக்கியமான வரலாற்று சின்னமாக அறிவித்திருக்கிறது.
மாமா சொன்ன இன்னொரு விஷயம்தான் எனக்கு மிக மிக மிகப் பிடித்திருந்தது. வர்ஜீனியா பல்கலையில் மாணவர்களுக்கான நடத்தை விதிகளை மாணவர்களே உருவாக்கிச் செயல்படுத்தவேண்டும் என்பது ஜெஃபர்சனின் உத்தரவு. “பொய் சொல்லாதே. ஏமாற்றாதே. திருடாதே. இந்த மூன்று ஒழுக்கவிதிகள் போதும்” என்பதுதான் ஜெஃபர்சன் கொள்கை. அதன்படி எந்த மாணவர் மீதாவது புகார் வந்தால், அதை இதர மாணவர்களேதான் விசாரிக்க வேண்டுமாம். அவர் சார்பாகவோ எதிராகவோ இதர மாணவர்கள் வாதாடலாம். தீர்ப்பு சொல்லும் நடுவர்களும் மாணவர்களே. இதில் ஆசிரியர்களோ, அதிகாரிகளோ கிடையாது.
''இந்த மாதிரி ஐடியாவை எல்லாம் ஏன் யாரும் இறக்குமதி செய்யவே மாட்டேன் என்கிறார்கள்'' என்று கேட்டது வாலு.
“கவலைப்படாதே, பில்டிங் ரெடி” என்றான் பாலு. “என்ன பில்டிங்?” என்றார் மாமா. “ நான் கட்டப் போகும் யூனிவர்சிட்டிக்கான மாடல் இதோ” என்று மணலில் கட்டி முடித்த கோட்டையைக் காட்டினான் பாலு.
“நடுவிலே என்ன வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார் மாமா.
“நடுவுல கொஞ்சம் இடம் காலி” என்றான் பாலு. அவனுக்குத்தான் படிக்கிற வழக்கமே கிடையாதே. “பரவாயில்லை. ஒரு டிஜிட்டல் லைப்ரரிக்கு அது போதும்” என்றது வாலு.
வாலுபீடியா 1: ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் வல்லவரான தாமஸ் ஜெஃபர்சன் (13-4-1743 - 4-7-1826) சாகும்போது, ஒரு லட்சம் டாலர் கடனாளியாக இருந்தார். அவரது சொத்துகளை விற்று இந்தக் கடன் அடைக்கப்பட்டது.
வாலுபீடியா 2: ஜெஃபர்சன் இறந்தபோது கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி அணிந்திருந்தார். அதில் இருந்த லாக்கெட்டில் 44 வருடம் முன்னால் காலமான அவர் மனைவி மார்த்தாவின் தலைமுடியை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
