sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (19) - பத்திரமாக தொலைந்து போவது எப்படி?

/

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (19) - பத்திரமாக தொலைந்து போவது எப்படி?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (19) - பத்திரமாக தொலைந்து போவது எப்படி?

ஞாநி எழுதும் மாலுவின் டைரி (19) - பத்திரமாக தொலைந்து போவது எப்படி?


PUBLISHED ON : மே 23, 2016

Google News

PUBLISHED ON : மே 23, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“நான் காணாமப் போயிட்டேன். கண்டுபிடிங்க” என்று குரல் கொடுத்துவிட்டு பாலு ஒளிந்துகொண்டான். நானும் வாலுவும் அவனைத் தேட ஆரம்பித்தோம். இது எப்போதாவது நாங்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

பாலு சொன்னதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்த ஞாநி மாமா கோபமாக, “ என்ன விளையாட்டு இது. யாரும் காணாம போகக் கூடாது. அதுவும் குழந்தைகள் விளையாட்டாக்கூட காணாமப் போகக் கூடாது” என்று சத்தம் போட்டார். விளையாட்டை நிறுத்திவிட்டு அவர் சொல்வதைக் கேட்க உட்கார்ந்தோம்.

“நிஜமாகவே பாலு காணாம போனா எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றார் மாமா. என் வீடு, பாலு வீடு, எங்கள் சிநேகிதர்கள் எல்லாரும் படு துக்கத்தில் மூழ்கியிருப்போம் என்பது புரிந்தது. பாலு எங்கே இருக்கிறானோ என்ன ஆனானோ என்ற பதற்றம் வேறு இருக்கும்.

“உலகம் முழுக்க லட்சக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் காணாமல் போகிறார்கள். அதில் பாதி பேரைத்தான் மீட்கிறோம். மீதி பேர் கதி என்ன ஆயிற்று என்பதே தெரிவதில்லை” என்றார் மாமா. இப்படிக் காணாமல் போனதாகச் சொல்லப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அயோக்கியர்களால் கடத்தப்படுகின்றனர். அவர்களைப் பலவிதமான தப்புக் காரியங்களில் ஈடுபடுத்துகிறார்கள். இப்படிச் செய்து போலிஸிடம் மாட்டும் கும்பல்கள் இன்னமும் குறைவுதான். எனவே நாம்தான் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். நன்கு பரிச்சயமானவராக இருந்தால் கூட, எங்கே, ஏன் அழைத்துப் போகிறார்கள் என்று துருவித் துருவிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவர் மீது சந்தேகம்வந்தால் நழுவிவிடவேண்டும்.

“வழக்கமான உத்தி, உன் அம்மா கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார் என்று பள்ளி வாசலிலேயே வந்து ஏமாற்றுவார்கள்” என்றார் மாமா.

நான் உடனே, 'பாஸ்வேர்ட் என்ன' என்று கேட்பேன் என்றேன். எனக்கும் அம்மாவுக்கும் இடையில் அப்படி ஒரு பாஸ்வேர்ட் ரகசியமாக வைத்திருக்கிறோம். அதைச் சொல்லி அனுப்பினாலொழிய, எந்த ஆளும் அம்மா அனுப்பிய ஆளாக இருக்க முடியாது.

“ஸ்மார்ட் கிட் ஆக இருந்தால்தான் இந்த உலகத்தில் தாக்குப் பிடிக்க முடியும். குட்” என்ற மாமா அடுத்து ஒரு கேள்வி கேட்டார். “சரி இப்படிக் காணாமல் போய் ஒளிந்துகொள்வது அவரைக் கண்டுபிடிப்பது என்று ஒரு விளையாட்டு விளையாடுகிறீர்களே, அதில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கிறது சொல்லுங்கள்”

“நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா விஷயங்களிலிருந்தும் விலகிப் போய் நமக்கே நமக்கான ஒரு தனி இடமாக ஒன்றில் உட்கார்ந்துகொள்வது சுவாரசியமாக இருக்கிறது” என்றேன்.

“அதற்கு இதை விடச் சிறப்பான விளையாட்டு ஒன்று இருக்கிறது. அதில் நீ ஈடுபட ஆரம்பித்தால், இருக்கிற இடத்திலேயேதான் இருப்பாய். ஆனால், எங்கே இருக்கிறாய் என்பதே உனக்கு மறந்துவிடும்.உன்னைச் சுற்றி இருக்கும் பல விஷயங்கள் உன் கண்ணிலேயே படாது. ஆனால், உன் கண்ணில் படும் விஷயங்களோ உன்னை ஒரு புதிய உலகத்துக்கே கொண்டு போய் விடும். அந்த மாதிரி விளையாட்டு அது” என்றார் மாமா.

அன்று இரவு மாமா எங்களை மொட்டை மாடிக்கு அழைத்துப் போனார். “சுற்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். வானத்தை மட்டும் பாருங்கள்” என்றார். மூன்று பேரும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கங்கே ஒரு நட்சத்திரம் தெரிய ஆரம்பித்தது. எது என்ன நட்சத்திரம் என்று மாமா சொல்லிக் கொண்டே இருந்தார். அப்புறம் எங்களுக்கு பரிசாகக் கொண்டு வந்திருந்த குட்டி டெலஸ்கோப்புகளைப் பொருத்தி அதில் பார்க்கச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது. அதில் பார்த்துக் கொண்டே இருந்தால் நாம் எங்கிருக்கிறோம் என்பதெல்லாம் மறந்தேபோய் விடுகிறது. வானத்தின் ரகசியங்களையெல்லாம் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.

“அப்படி வானத்தை தினசரி உட்கார்ந்து பார்த்துப் பார்த்துதான் விஞ்ஞானிகள் பல உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். சுமார் 500 வருடம் முன்னால் நிகோலஸ் கோபர்னிகஸ் சூரியனைத்தான் பூமி உட்பட மீதி எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்று கண்டுபிடித்தார். அதுவரை பூமியைத்தான் மீதி கிரகங்கள் சுற்றுவதாகத் தப்பாக நம்பிக் கொண்டிருந்தோம்” என்றார் மாமா.

இந்த கோபர்னிகஸுக்கு வேறு வேலை இல்லையா? எப்போதும் வான ஆராய்ச்சியே செய்துகொண்டிருந்தாரா?

“அவர் பல துறை அறிஞர். வான ஆராய்ச்சி தவிர மருத்துவம் படித்தார். மொழி அறிஞராக இருந்தார். பொருளாதாரத்திலும் மேதை. கெட்ட பணம் எப்போதும் நல்ல பணத்தைத் துரத்திவிடும் என்ற கோட்பாட்டையே அவர்தான் உருவாக்கினார்” என்றார் மாமா.

நானும் பாலுவும் வாலுவும் இப்போதெல்லாம் வானத்தைப் பார்க்க ஆரம்பித்தால் நிஜமாகவே தொலைந்து போய்விடுகிறோம். வேறு எதுவும் தெரிவதில்லை. பல வருடம் முன்னால் புறப்பட்டு வந்த நட்சத்திர ஒளியை இப்போது நான் பார்ப்பதை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நான் யார் என்று யோசித்தால் ஒரே ஒரு பதில்தான் தோன்றியது. நான் ஒரு தூசு. அவ்வளவுதான்!

இதை மாமாவிடம் சொன்னேன்.

உடனே மாமா சொன்னார். “ஆம். நாம் ஒவ்வொருத்தரும் ஒரு தூசுதான். ஆனால், விலைமதிப்பில்லாத தூசு. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் எவ்வளவு முக்கியம். அதையும் மறந்துவிடக் கூடாது”

வெறும் தூசாகவும் உணரமுடிகிறது. அந்த தூசே எவ்வளவு மதிப்புடையது என்றும் உணர முடிகிறது. வானம் நிஜமாகவே மாமா சொன்னது மாதிரி இன்னொரு பிரமாண்டமான பள்ளிக் கூடம்தான்!

வாலுபீடியா 1: பல துறை அறிஞரான நிக்கோலஸ் கோபர்னிகஸ் (19.2.1473 -- 24.5.1543) போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.

வாலுபீடியா 2: மே 25ஐ காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினமாக அறிவித்தவர் அமெரிக்க அதிபராக இருந்த நடிகர் ரொனால்ட் ரீகன்.






      Dinamalar
      Follow us