தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஞாநி எழுதும் மாலுவின் டயரி (30) - எதுவும் கடந்து போகும்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (30) - எதுவும் கடந்து போகும்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (30) - எதுவும் கடந்து போகும்


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பாலு, என்ன கையை உடைச்சுகிட்டியாமே, இப்ப எப்பிடி இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் ஞாநி மாமா. வாலு டி.வி. ஒலியைத் தணித்தது.

“அது பரவாயில்லை மாமா. ஒரு மயிர் இழை விரிசல்தானாம். நல்லவேளை இடது கையில. நான் சொன்னபடி டயரி எழுத ஆரம்பிச்சுட்டேன் தெரியுமா? வலது கையில அடிபட்டிருந்தா டயரி ஆரம்பத்துலயே நின்னு போயிருக்கும்” என்றான் பாலு. “அதெல்லாம் நிக்க வேண்டியதில்ல. பிரபலமான ஓவியர் கோபுலுவுக்கு முதுமையில பக்கவாதம் வந்தபோது வலது கை செயலிழந்து போச்சு. ஆனா அவர் பிடிவாதமா இடக்கையால ஓவியம் தீட்ட முயற்சித்து வெற்றிகரமா தீட்டினார், தெரியுமா?” என்றார் மாமா.

“மாலு டயரியை வெளியிடற மாதிரி என் டயரியையும் வெளியிடப் போறேன் மாமா. ஆனா பாலு டயரின்னு பேர் வைக்க மாட்டேன். ஏதாவது ஒரு நல்ல பொண்ணோட பேரு சொல்லுங்க” என்றான் பாலு. “ஏன் அப்படி?”என்றேன்.

“எங்கப்பாதான் சொன்னார். ஆண் எழுத்தாளர்கள் எல்லாம் பெண் பெயரை வெச்சுப்பாங்களாம். ரங்கராஜன் சுஜாதா ஆனமாதிரி” என்றான் பாலு.

“அதுக்கெல்லாம் வெவ்வேற காரணம் இருந்திருக்கு. அது கிடக்கட்டும். ஒரு பொண்ணு தன் பெயர்ல எழுத முடியாம, ஆண் பெயரை புனைபெயரா வெச்சுகிட்டு எழுதின கதை சொல்லட்டுமா?” என்றார் மாமா.

“ஜேன்அயர் ஆங்கில நாவல் தெரியுமா?” என்றார். “தெரியுமே. ஸ்கூல் டெக்ஸ்ட்ல கூட சுருக்கி வெச்சிருக்காங்க. அதை எழுதினது ஷார்லெட் ப்ராண்ட்டேதானே? அது பெண் பெயர் இல்லையா?” என்றேன்.

“அந்தப் பெயர் இப்ப எல்லாருக்கும் தெரியும். ஆனா 1847ல தன்னோட 31ஆவது வயசுல ஷார்லெட் ஒரு ஆகஸ்ட் மாசம் அதை தபால்ல பதிப்பாளருக்கு அனுப்பினப்ப தன் பெயரை கரர் பெல்ன்னு ஆண் பெயர வெச்சுதான் அனுப்பினாங்க. அதுக்கு முன்ன ஷார்லெட், அவரோட ரெண்டு தங்கைகள் எல்லாருமே கவிதை எழுத ஆரம்பிச்சு, சொந்தமா ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தாங்க. அதுல மூணு பேருக்குமே பெல்ன்னு முடியற மாதிரி ஆம்பளைப் பெயர்தான். அப்பறம் மூணு பேருமே நாவல் எழுத ஆரம்பிச்சாங்க. ரொம்ப பிரபலமானது ஷார்லெட்தான். ஆனா ஷார்லெட்டோட முதல் நாவலை பதிப்பாளர்கள் நிராகரிச்சுட்டாங்க. ரெண்டாவது நாவல்தான் ஜேன் அயர்.”

“ஏன் அவங்க அதை ஆண் புனைபெயர்ல எழுதினாங்க?”

“அவங்க வாழ்ந்த காலச் சூழ்நிலை அப்படி. இப்ப இருக்கற அளவு கூட அப்ப பெண்களுக்கு மதிப்போ சம உரிமையோ அப்ப இல்ல. ஜேன் அயர் கதையே ஒரு சாதாரணக் குடும்பப் பெண் தன் வாழ்க்கையைப் பற்றி அதுல வெவ்வேற ஆண்கள் செலுத்தற ஆதிக்கத்தைப் பத்தி எல்லாம் உள்ளுக்குள்ள என்ன நினைக்கறா, தன்னால முடிந்த வரைக்கும் எப்படி அதைச் சமாளிக்கிறா என்பதைப் பத்திதான்” என்றார் மாமா.

“இப்ப பெண்கள் விரும்பினபடி எழுதற நிலை வந்தாச்சா மாமா?” என்றேன். “ இல்லை. என்ன, 19ஆம் நூற்றாண்டை விட இப்பக் கொஞ்சம் பரவாயில்லை , அவ்வளவுதான்' என்ற மாமா, “சரி பாலு உனக்கு எப்படி அடிபட்டுது?” என்று கேட்டார்.

“கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்துட்டேன். அடுத்த பத்தாவது நிமிஷம் ஹாஸ்பிடலுக்குப் போய்ட்டேன். எக்ஸ் ரே எடுத்துட்டு கட்டு போட்டுட்டாங்க” என்றான் பாலு.

“அதுதான் நமக்கு நகரத்துல இருக்கற வசதி. எப்பிடியும் ஒரு கிலோமீட்டருக்குள்ள முதல் உதவிக்கு ஒரு ஹாஸ்பிடலாவது கிடைச்சுடும். இன்னிக்கு என் நண்பரோட அப்பா கிராமத்துல மரம் ஏறி நாவல் பழம் பறிச்சுகிட்டிருந்தப்ப தவறி விழுந்திருக்காரு. விழுந்த இடம் மலைப்பாங்கான இடம். அங்க ஆம்புலன்ஸ் வர முடியாது. ரெண்டு கிலோமீட்டர் தூரம் வரை அவரை ஒரு துணியில கட்டித் தூக்கிட்டுப் போய்தான் ஆம்புலன்ஸ்லயே ஏத்தியிருக்காங்க. இந்த மாதிரி நிறைய பிரச்னைகள் கிராமப் புறங்கள்ல இன்னும் இருக்கு” என்றார் மாமா.

“அந்த சமயத்துல ஏதாவது முதல் உதவிகூட செய்யமுடியாதா?” என்றான் பாலு.

“என்ன செய்யணும்கறதை விட, என்ன செய்யக் கூடாதுங்கறது அப்ப கூட இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். எலும்பு முறிஞ்சிருந்தா, அவங்களை எழுப்பி உட்காரவைக்க முயற்சிக்ககூடாது. இந்த மாதிரி ஃபர்ஸ்ட் எய்ட்லயும், 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' ஒவ்வொரு நிலைமைக்கு ஏத்தபடி இருக்கு” என்றார் மாமா.

“ஏன் மாமா, இதையெல்லாம் எங்களுக்கு ஸ்கூல்லயே சொல்லித்தரக் கூடாது?” என்று கேட்டேன்.

“நிச்சயமா சொல்லித் தரணும். நானெல்லாம் 1960கள்ல பள்ளிக்கூடத்துல படிச்சப்ப எங்களுக்கு இப்படி நிறைய விஷயம் பாடம் தவிர சொல்லிக் கொடுப்பாங்க. சின்னதா பிளேடு கட் பண்ணிட்டா கூட உடனே அந்த இடத்தை இன்னொரு கை விரலால அழுத்தி மூடிகிட்டு ஒரு பத்து நிமிஷம் இருந்தா ரத்தம் கசியறது நின்னுடும். சின்னதா தீக்காயம் ஏற்பட்டா, அது மேல குளிர்ந்த தண்ணி ஓடிகிட்டிருக்கற மாதிரி குழாயைத் திறந்து விடணும். அப்ப கொப்புளம் ஆகாம தப்பிக்கும். இப்படி குட்டி குட்டியா நிறைய இருக்கு.”

அப்போது வாலு திடீரென டி.வி. ரிமோட்டில் சத்தத்தை அதிகரித்தது. “இந்த வாரம் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் அமெரிக்கா அணுகுண்டு வீசின நினைவு வாரம் இல்லையா? அதைப் பத்தி டாக்குமென்ட்டரி போடறாங்க” என்றார் மாமா. “ மொத்தமா, சுமார் ரெண்டரை லட்சம் பேர் அதுல கொல்லப்பட்டாங்க” என்றது வாலு.

“குண்டு போட்டுக் கொல்றது வேற. மின்சாரம் தயாரிக்கறதுக்காக கட்டின அணு உலை விபத்துகளே கூட பெருமளவுல மக்களை பாதிச்சிருக்கு. ரஷ்யால செர்னோபில் விபத்துனால அடுத்த பத்து வருஷத்துல ரெண்டு லட்சம் பேருக்கு மேல புற்று நோய்ல செத்திருக்காங்க. ஜப்பான் புகோஷிமா அணு உலை விபத்துனால எவ்வளவு பாதிப்புங்கற கணக்கெடுப்பே இன்னும் முடியல” என்றார் மாமா.

“இப்படி பக்கத்துல ஒரு விபத்து நடக்கறப்ப நாம என்ன செஞ்சு, எப்படி நம்மளைக் காப்பாத்திக்கணும்னு முன்னாடியே சொல்லித்தரலாம் இல்ல?” என்றேன். “நிச்சயமா சொல்லித்தரணும். ஜப்பான்ல பூகம்பம் வந்தா என்ன செய்யணும்னு பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கெல்லாம் தெரியும். நாம இன்னும் எலும்பு முறிவுக்கே ஃபர்ஸ்ட் எய்ட் சொல்லிக் குடுக்கறதைப் பத்தி பேசிகிட்டிருக்கோம்” என்றார் மாமா.

“நான் ஒவ்வொரு பள்ளிக் கூடத்துலயும் பாடம் தவிர என்னல்லாம் சொல்லித்தரணும்னு ஒரு லிஸ்ட் தயாரிக்கப் போறேன். இனிமே கொஞ்ச நாளைக்கு டயரி எழுதப் போறதில்ல” என்றேன். “ஏன் கண்ணு?” என்று அதிர்ச்சியாகக் கேட்டார் மாமா. “பாலு எழுத ஆரம்பிச்சுட்டான் இல்ல, அவன் எப்படி என்ன எழுதப் போறான்னு பார்க்கப் போறேன். அதுக்கப்புறம் நான் வேற மாதிரி எழுதுவேன்” என்றேன்.

“சரி. All good things must come to an end” என்றார் மாமா.

“அதெப்படி? bad thingsதானே endக்கு வரணும்?” என்றேன். “நீ சொல்றது சரி. பழமொழி அப்பிடிதான் இருக்கு” என்றார் மாமா.

“எதுவும் கடந்து போகும்” என்று தத்துவமாக சொல்லிற்று வாலு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us