sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - யார் நல்ல அப்பா? நல்ல அம்மா?

/

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - யார் நல்ல அப்பா? நல்ல அம்மா?

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - யார் நல்ல அப்பா? நல்ல அம்மா?

ஞாநி எழுதும் மாலுவின் டயரி - யார் நல்ல அப்பா? நல்ல அம்மா?


PUBLISHED ON : மே 30, 2016

Google News

PUBLISHED ON : மே 30, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“அப்பா, அம்மா உங்க ரெண்டு பேரையும் நான் ஒரு நேர்காணல் செய்யணுமே” என்றேன்.

அம்மா சிரித்தார். “இந்தப் பொண்ணுக்கு எப்பப் பார்த்தாலும் இப்படி ஏதாவது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுக்கிட்டே இருக்கணும்.” என்றார்.

அப்பா கேட்டார், “எதுக்கும்மா எங்க கூட நேர்காணல்?”

“சர்வதேச பெற்றோர் தினம் ஜூன் 1ஆம் தேதி கொண்டாடறாங்க. அதையொட்டிதான் நான் உங்களை நேர்காணல் செய்யணும்”

“ஏம்மா, பெற்றோர் தினத்தைக் கொண்டாடணும்னா, எங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடு. ஒரு வாழ்த்து அட்டை எழுதிக் கொடு. இந்த நேர்காணல் என்ன மாதிரி கொண்டாட்டம்னே புரியலையே. எதுக்காக அது?” என்றார் அப்பா.

“பெற்றோரா இருக்கறதுன்னா என்னன்னு புரிஞ்சுகிட்டாதான் அதைக் கொண்டாடவே முடியும். அதைப் புரிஞ்சுக்கதான் உங்ககிட்ட பேட்டி கேக்கறேன்”

“சரி... சரி... ஆனா இந்த நேர்காணல் டிவில வர்ற அக்னிப் பரீட்சை, கேள்விக்கென்ன பதில் மாதிரியெல்லாம் இருக்காது இல்ல?” என்றார் அப்பா.

“நிச்சயம் இருக்காது. எனக்குச் சில சந்தேகம் இருக்கு. அதெல்லாம் தீர்த்துக்கதான் உங்களைக் கேள்வி கேட்கப் போறேன்.”

“என்ன சந்தேகம்டி உனக்கு?” என்றார் அம்மா.

“நான் டாக்டராகணும்னு விருப்பப்படறேன். அப்படின்னா இப்பவே பயாலஜி எடுத்துப் படிச்சாதான் பின்னால மெடிசினுக்கு அப்ளை பண்ண முடியும். இப்படி முன்கூட்டி ப்ளான் பண்ணாதானே டாக்டர், என்ஜினியர், ஆடிட்டர், எல்லாம் ஆக முடியும்? அந்த மாதிரி நீங்க 'நான் எதிர்காலத்துல பெற்றோர் ஆகப் போறேன். அதுக்கு என்னை இப்பவே இப்படி தயார் செய்துக்கணும்னு' ஏதாவது யோசிச்சு செஞ்சிருக்கீங்களா? இதாம்ப்பா என் சந்தேகம்” என்றேன்.

அப்பா அப்படியே அதிர்ந்து போய் என்னைப் பார்த்தார். “எனக்கே சமயத்துல வர்ற சந்தேகத்தையே நீயும் கேட்கறே” என்றார். அப்புறம் அப்பா கொஞ்ச நேரம் விரிவாகப் பேசினார்.

“மாலு... நீ பிறக்கற வரைக்கும், அதுக்கு முன்னால எல்லாம், நானோ அம்மாவோ, நல்ல அப்பாவா நல்ல அம்மாவா இருக்கறதுன்னா என்னன்னு யோசிச்செல்லாம் பார்த்ததே கிடையாது. ஆனா, நீ பிறந்த பிறகு ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நாளும் நான் மாலுக் குட்டிக்கு நல்ல அப்பாவா இருக்கேனா இல்லையான்னு அப்பப்ப யோசிப்பேன்”

“நல்ல அப்பாவா இருக்கறதுன்னா என்னப்பா?”

“உனக்கு எப்பப்ப என்னென்ன தேவைன்னு கவனிச்சுகிட்டே இருக்கணும். அதை எந்த அளவுக்கு முடியுமோ எங்களால உனக்குக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்”

“சரி. நான் ஏதாவது தப்பு பண்ணா, என்ன செய்யறதுன்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்தீங்களா?”

“அதெல்லாம் தப்பைப் பொறுத்தது. சின்னத் தப்பா இருந்தா, அதைக் கண்டுக்கவே மாட்டோம். ஆனா அது எங்களுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு உனக்குத் தெரியிற மாதிரிச் செஞ்சிடுவோம். ஆனா அதைப் பத்தி உன்கிட்ட பேசவே மாட்டோம்.”

“அப்ப, எனக்கே அது உறுத்தலாகி அடுத்த தடவை அப்படி செய்யமாட்டேன், இல்லியா?”

“ஆமா” என்றார் அம்மா. “பெரிய தப்பா இருந்தா அப்பாவோ நானோ உன்னைக் கூப்பிட்டு உட்காரவச்சு நிதானமா அதைப் பத்திப் பேசுவோம்.”

“அடிக்கணும்னு தோணாதா?”

அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். “நிறையத் தடவை தோணும். ஆனா கடைசி நொடில அடிக்காமக் கட்டுப்படுத்திக்குவேன். அடிச்சா, அப்பறம் உன்கூட பேசவே முடியாம போயிடும்ன்னு தோணும்” என்றார் அப்பா. “ஆனா கண்டிப்போம். செல்லமா மிரட்டுவோம். அதெல்லாமே ஒர்க் அவுட் ஆயிடும்” என்றார் அம்மா.

தொடர்ந்து மூவரும் நிறைய பேசினோம். கடைசியில் அப்பாவையும் அம்மாவையும் தங்களுக்குத் தாங்களே மார்க் போட்டுக் கொள்ளும்படி சொன்னேன். உடனே அப்பா, “நீயும் எங்களுக்கு மார்க் போடு. ரெண்டும் ஏதாவது ஒத்து வருதான்னு பார்க்கலாம்” என்றார். மூவரும் மார்க் போட்டுவிட்டு கடைசியில் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது!

அம்மா வழக்கம் போல ஒரு புராணக் கதை சொல்லி நேர்காணலை முடித்தார். “பெற்றோர் எப்பிடி நடந்துக்க கூடாதுங்கறதுக்கு உதாரணம் சிவனும் பார்வதியும். அவங்களுக்குக் கிடைச்ச மாம்பழத்தை ரெண்டு பிள்ளைகள்ல யாருக்குக் கொடுக்கறதுங்கறதுக்கு போட்டி வச்சது முதல் தப்பு. பிள்ளைகளையே முடிவு பண்ணிக்கச் சொல்லியிருக்கணும். அப்ப ரெண்டு பேரும் ஒருத்தருக்கு இன்னொருத்தர் விட்டுக்குடுத்துருப்பாங்க. போட்டி வெச்சதுக்குப் பிறகு அதோட ரூல்ஸையும் குழப்பிட்டாங்க. பிள்ளையார் 'அப்பா அம்மாதான் உலகம்ன்னு' சொல்லி அவங்களையே சுத்தி வந்து ஏமாத்திட்டார். தங்களைக் குழந்தைங்க புகழ்ந்தா, அதுல ஏமாந்துடக் கூடாது. முருகன் கோவிச்சுகிட்டுப் போனதும் அவரை சமாதானப்படுத்தறதும் அப்பா, அம்மா பண்ண தப்பால தானே வரவழைச்சுகிட்ட பிரச்னைதான்” எப்படி பெற்றோர் இருக்கவேண்டும் என்பதற்கு இன்னொரு புராணக் கதையை இன்னொரு நாள் சொல்வதாக அம்மா சொல்லியிருக்கிறார்.

“பாலு, உன்னோட அப்பா, அம்மா கூட பேட்டி எப்படி போச்சு”ன்னு பாலுவைக் கேட்டேன்.

“சூப்பர். அவங்க ரெண்டு பேரும் நல்ல பேரண்ட்ஸாதான் தெரியறாங்க. ஆனா, நான்தான் நல்ல பையனான்னு எனக்கே நடுவுல கொஞ்சம் சந்தேகம் வந்துருச்சு” என்றான் பாலு.

“எங்களுக்கு அதைப் பத்தி சந்தேகமே கிடையாதே” என்றது வாலு. மூவரும் சிரித்தோம்.

வாலுபீடியா1: குழந்தைகளை 24 மணி நேரமும் பத்திரமாகப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் விடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கும் பெற்றோருக்கு 'ஹெலிகாப்டர் பெற்றோர்' என்று உளவியலாளர்கள் பெயர் வைத்துள்ளனர். அதாவது, எப்போதும் சிறுவரின் தலைக்கு மேல் ஹெலிகாப்டர் மாதிரி அவர்கள் சுற்றிக்கொண்டே இருப்பார்களாம்.

வாலுபீடியா 2: வீட்டில், குழந்தைகளை அடிப்பதைச் சட்டப்படி குற்றம் என்று அறிவித்த முதல் நாடு ஸ்வீடன் (1979). யாராவது அந்தக் குற்றத்தைச் செய்து மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us