PUBLISHED ON : செப் 19, 2016

நூறு வருஷம் கழிச்சு நம்மை எல்லாம் எப்பிடி ஞாபகம் வெச்சுப்பாங்க? அதுக்கு ஏதாவது நாம செய்யவேணாமா?” என்று கவலையோடு கேட்டான் பாலு.
“அப்பதான் நாம இருக்கமாட்டோமே. அதைப் பத்தி ஏன் கவலைப்படணும்?” என்றேன். “அப்பிடி இல்ல. எல்லாரும் நம்மை என்னவா ஞாபகம் வெச்சுக்கறாங்கங்கறது இப்ப நமக்கு முக்கியமா இருக்கு இல்ல, அதைப் போலத்தான் அப்புறமும்” என்று வாதிட்டான் பாலு. ஞாநி மாமா எங்கள் வாதங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
“காந்தி, பாரதி, பெரியார் இவங்கள எல்லாம் ரொம்ப வருஷம் கழிச்சும் கூட ஞாபகம் வெச்சுகிட்டுதானே இருக்கோம். ஐன்ஸ்டைன் மாதிரி எத்தனை விஞ்ஞானிகளை இன்னும் நினைவுபடுத்திகிட்டு இருக்கோம். அவங்கள மாதிரி நாமும் ஏதாவது சாதிச்சாதான், நம்மையும் நினைவு வெச்சுப்பாங்க” என்றேன்.
“எல்லாரும் அந்த மாதிரி சாதிக்க முடியுமா என்ன. உன்னை, என்னை மாதிரி சாதாரண ஆளுங்க எப்பிடி வாழ்ந்தோம்னு நூறு வருஷம் கழிச்சு எப்பிடி தெரிஞ்சுப்பாங்க?” என்று கேட்டான் பாலு.
“நியாயமான கேள்வி. ஆயிரம் வருஷம் முன்ன வாழ்ந்தவங்களைப் பத்தி நாம் எப்பிடித் தெரிஞ்சுக்கறோம்னு யோசி பாலு” என்றார் மாமா. “கல்வெட்டு, அகழ்வாராய்ச்சி, சங்க இலக்கியப் பாட்டு இதுல இருந்தெல்லாம்தானே தெரிஞ்சுக்கறோம்” என்றேன்.
“அதே மாதிரி இப்ப எழுதற இலக்கியங்கள்ல இருந்து, பத்திரிகை செய்திகள்ல இருந்து பின்னாடி வர்றவங்களும் தெரிஞ்சுப்பாங்க” என்றார் மாமா.
“அதுதான் எனக்குக் கவலையா இருக்கு மாமா. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் டிஜிட்டல் ஆகிக்கிட்டே இருக்கு. இப்பப் பாருங்க டேப் ரிகார்டர் கிடையாது. டி.வி.டி. கிடையாது. கேமரால ஃபிலிம் கிடையாது. மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க், பென் டிரைவ்லாம்தான் இருக்கு. புக்ஸ் கூட இனிமே இ-புக்ஸ் ஆயிடும்கறாங்க. இந்த டிஜிட்டல் எல்லாம் நூறு வருஷம் கழிச்சு எடுத்துப் பார்க்க இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றான் பாலு.
“பழங்காலக் கல்வெட்டுகள்ல இருக்கற தமிழ் எழுத்தே வேற. இப்ப இருக்கற வரி வடிவமே வேற. ஆனா பழைய கல்வெட்டை எப்பிடி படிக்கணும்னு இப்பவும் கத்துகிட்டுப் படிக்க முடியுது இல்ல, அந்த மாதிரி டிஜிட்டலையும் எப்பிடி எடுத்துப் பார்க்கணும்னு எதிர்காலத்துல தெரிஞ்சவங்க இருப்பாங்கன்னு நம்புவோம்” என்றார் மாமா.
“நிறைய ஓலைச் சுவடிகளை ஆத்துல போட்டுட்டோம். இன்னும் நிறைய புக்ஸை சர்வாதிகாரிகள் எரிச்சுட்டாங்கன்னு சொல்லியிருக்கீங்களே. அது போல ஹார்டு டிஸ்க், பென் டிரைவை எல்லாம் யாராவது எரிச்சாலோ, அழிச்சாலோ, எல்லா டேட்டாவும் இல்லாமப் போயிடுமே” என்று கேட்டேன்.
“எல்லாத்துக்கும் இன்னொரு இடத்துல பேக் அப் வெச்சிருந்தா, ஒண்ணு அழிஞ்சாலும் இன்னொண்ணு தப்பிக்கற வாய்ப்பு இருக்கு. கவலைப்படாதீங்க. நீங்க வேணா உங்களைப் பத்தி பத்து வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு டைம் கேப்ஸ்யூலைப் புதைச்சு வைங்க” என்றார் மாமா.
அதென்ன டைம் கேப்ஸ்யூல்?
அப்படின்னா காலப் பெட்டகம்னு அர்த்தம். நூறு வருஷம் கழிச்சு இல்லாட்டி ஆயிரம் வருஷம் கழிச்சு திறந்து பார்க்கறவங்களுக்கு நாம் என்னலாம் தெரிவிக்கணும்னு நினைக்கறோமோ, அதையெல்லாம் ஒரு வலிமையான பெட்டகத்துல போட்டு பூட்டி பூமிக்கடியில புதைச்சுடணும். என்னிக்காவது ஒரு நாள் யாராவது அதை எடுத்துப் பார்க்கற வாய்ப்பு இருக்கும். இதுதான் காலப் பெட்டக நடைமுறையாம்.
“இதுவரைக்கும் உலகத்துல எத்தனை காலப் பெட்டகத்தை புதைச்சிருப்பாங்க?” என்று கேட்டேன்.
“அதுக்கு சரியான கணக்கே இல்ல. இன்டர்நேஷனல் கேப்ஸ்யூல் சொசைட்டின்னு ஓர் அமைப்பையே ஏற்படுத்தியிருக்கு. எல்லா டைம் கேப்ஸ்யூல் பத்தியும் தகவல் திரட்டி வெச்சுக்க. இவங்ககிட்ட வராத தகவலும் இருக்கும். இதுவரைக்கும் 15 ஆயிரம் கேப்ஸ்யூல் புதைச்சிருக்குன்னு சொல்றாங்க. அமெரிக்கால 1795ல அமெரிக்கப் புரட்சித்தலைவர்கள்ல ஒருத்தரான சாமுவேல் ஆடம்ஸ் ஒரு காலப் பெட்டகத்தை புதைச்சிருக்காரு. அதை 2014ல திறந்து பார்த்திருக்காங்க.”
“யார் வேணாலும் காலப் பெட்டகத்தை உருவாக்கி புதைக்கலாமா? அரசாங்கம் மட்டும்தான் செய்யலாமா?” என்று கேட்டான் பாலு.
“பெரும்பாலும் தனியார் அமைப்புகள்தான் இதையெல்லாம் செஞ்சிருக்காங்க. 1939ல வெஸ்டிங்ஹவுஸ் கம்பெனி ஒரு பெட்டகத்தைப் புதைச்சுட்டு அதை 5000 வருஷம் கழிச்சுதான் திறக்கணும்னு எதிர்பார்க்கறோனு சொன்னாங்க. 1900மாவது வருஷத்துல டெட்ராய்ட் நகர மேயர் ஒரு பெட்டகத்தைப் புதைச்சார். அதை 2000ல திறந்து பார்த்தாங்க. சிங்கப்பூர் உட்பட 12 நாடுகள்ல காலப்பெட்டகங்கள் வெவ்வேற சமயத்துல
புதைக்கப்பட்டிருக்கு” என்றார் மாமா.
“இந்தியால யாரும் இதைச் செய்யலியா?” என்று கேட்டேன்.
“இந்திரா காந்தி பிரதமரா இருந்தப்ப 1973ஆம் வருஷம் சுதந்திர தினத்தன்னைக்கு டெல்லி செங்கோட்டை வாசல்ல ஒரு காலப் பெட்டகத்தைப் புதைக்க ஏற்பாடு செஞ்சாங்க. அதுல அவங்க ஆட்சியைப் பாராட்டி எழுதி வெச்சிருக்குனு எதிர்க்கட்சிகள்லாம் குற்றம்சாட்டினாங்க. 1977ல ஆட்சி மாறினதும் புதுசா வந்த ஜனதா அரசாங்கம் டிசம்பர் 8ஆம் தேதி அதைத் தோண்டி எடுத்துடுச்சு. ஆனா கேப்ஸ்யூல் உள்ள என்ன இருந்திச்சுன்னு இதுவரைக்கும் அரசு அறிவிக்கவே இல்ல. சமீபத்துல தகவலறியும் சட்டத்தின் கீழே ஒருத்தர் அதைப் பத்தி கேட்டிருக்காரு. அப்பிடி ஒரு கேப்ஸ்யூலை புதைச்சதாவோ எடுத்ததாவோ அரசாங்கத்து கோப்புகள்ல எந்த விவரமும் இல்லைன்னு பதில் சொல்லிட்டாங்க.”
“மாநில அரசுகள் யாரும் காலப் பெட்டகம் புதைக்கலியா?” என்று கேட்டேன்.
“குஜராத் மாநிலம் உருவான பொன்விழா கொண்டாட்டத்தின்போது அப்ப முதலமைச்சரா இருந்த நரேந்திர மோடி ஒரு கேப்ஸ்யூலைப் புதைக்க ஏற்பாடு செஞ்சாரு. மாநிலத்தின் சிறப்புகள் பத்தி அதுல சொல்லி இருக்குன்னு அறிவிச்சாங்க” என்றார் மாமா.
“ஆட்சி மாறினா அதையும் தோண்டி எடுத்துப் பார்த்துடுவாங்க.” என்றேன். “ஆனா என்ன இருந்துதுன்னு நமக்குச் சொல்ல மாட்டாங்க” என்றது வாலு.
“என்ன எழுதி என்ன புதைச்சு வெச்சாலும் அதை யார் என்னிக்கு எப்பிடிப் புரிஞ்சுப்பாங்க, எந்த அளவு நம்புவாங்கன்னு நமக்குத் தெரியாது. காந்தி சொன்ன மாதிரி நம் வாழ்க்கைதான் நாம் மத்தவங்களுக்கு தரும் செய்தி. அதை எப்பிடி வாழறோம்கறதுதான் முக்கியம். அதை சரியா வாழ்ந்தா பல தலைமுறைகளுக்கு நிச்சயம் அதைப் பத்தி பேசிகிட்டுதான் இருப்பாங்க” என்றார் மாமா.
தொடர்ந்து, “1939ல புதைச்ச கேப்ஸ்யூல்ல, விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், மிலிகன், எழுத்தாளர் தாமஸ் மான் மூவரும் வருங்கால மக்களுக்கு எழுதின கடிதங்களை வெச்சிருந்தாங்க. ஐன்ஸ்டைன் நாங்க நிறைய சாதிச்சிருக்கோம்; ஆனாலும் வறுமையில வாடற மக்கள் நிறைய இருக்காங்க. இதெல்லாம் உங்க காலத்துல மாறும்னு நினைக்கறேன்னு எழுதினார். மிலிகன் சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இப்ப சண்டை நடந்துகிட்டிருக்கு, ஜனநாயகம் ஜெயிச்சா எதிர்காலத்துல யுத்தமே இல்லாத பொற்காலம் உருவாகும்னு எழுதினார். தாமஸ் மான் எங்களுக்கு 5 ஆயிரம் வருஷம் முன்ன இருந்த மனுஷங்க மாதிரிதான் நாங்க இருக்கோம். நீங்களும் எங்களை மாதிரிதான் இருப்பீங்க. எதிர்காலம் பத்தின நம்பிக்கையிலதான் உலகம் ஓடிக்கிட்டிருக்கு. நீங்களும் அப்பிடிதான் இருப்பீங்கன்னு எழுதினார்” என்று விவரித்தார்.
“அதனால பாலு, நீ விரும்பினா ஒரு காலப் பெட்டகத்தை தயாரிச்சு உன் வீட்டு வாசல்ல புதைச்சு வெச்சுக்கலாம். அதுக்குள்ள நீ விளையாடின கோலி, பம்பரம், கிட்டிப் புள் எல்லாத்தையும் போட்டு அதைப் பத்தி குறிப்பு கூட எழுதி வெக்கலாம். என்னிக்காவது யாராவது பார்ப்பாங்க” என்றார் மாமா.
“என்னோட காலப் பெட்டகம் என் டயரிதான்” என்றேன் நான்.
“நான் டிஜிட்டல். இருப்பேனா இல்லியா தெரியலியே” என்றது வாலு.
வாலுபீடியா 1: விண்வெளியில் இரண்டு டைம் கேப்ஸ்யூல்கள் உள்ளன. ஒன்று நிலவில். இன்னொன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில்.
வாலுபீடியா 2: யாஹூ இணையதளம் ஒரு டிஜிட்டல் கேப்ஸ்யூலை 2006ல் உருவாக்கியிருக்கிறது. இது 2020ல் திறக்கப்படும். 1500 மொழிகள் பற்றிய விவரம் அடங்கிய மூன்று அங்குல நிக்கல் டிஸ்க்கை ரொசெட்டா திட்டம் உருவாக்கி வருகிறது. இந்த டிஸ்க் 2000 வருடமானாலும் பயன்படும் விதத்தில் இருக்குமாம்.
