PUBLISHED ON : செப் 19, 2016

நம்முடைய மூக்கில் மில்லியன் கணக்கில் வாசனையை நுகரக் கூடிய செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள்தான், நமக்கு பொருட்களின் வெவ்வேறு வகையான வாசனையை அறிய காரணமாக இருக்கின்றன.
இயற்கையில் லட்சத்துக்கும் மேற்பட்ட வாசனைகள் உள்ளன. ஒரு சராசரி மனிதனால் 100 முதல் 200 வகையான வாசனையை அறிய முடியும். ஆனால் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுமார் 800 வகையான நறுமணங்களை உணர்கிறார்கள். காரணம், அந்தச் சூழலுக்குத் தகுந்தவாறு அவர்களுடைய மூக்கின் முகரும் தன்மை மாறிவிடுகிறது.
இடது மூக்கு வலது மூக்கை விட நன்றாக முகரும். சளி பிடித்தல், ஒவ்வாமையின் காரணமாக மனிதர்களுக்கு தும்மல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும் தும்மல் கூட ஜீன் வழியாக வருகிறது. கிட்டத்தட்ட ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், ஒரே மாதிரியாகத்தான் தும்மல் வரும்.
மூக்கில் உள்ள முடி காற்றில் உள்ள தூசி, கிருமிகளை உள்ளே போக விடாமல் தடுக்கிறது. ஜில்லென்று காற்று வீசினாலும், உடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப, காற்றை மாற்றி நுரையீரலுக்கு அனுப்புவது மூக்கே. மூக்கில் உள்ள சளி படலத்தில், வெள்ளை அணுக்கள், நொதி பொருட்கள் இருக்கின்றன. அவை, நோய்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்கின்றன.
மூக்கு நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு உண்டு. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி, மெமரியாக செயல்படுகிறது. இதனால் பழத்தின் வாசனை, பூவின் வாசனை, ஒரு மண்ணின் வாசனை எது என்று நம்மால் தனித்தறிய முடிகிறது.
கார்பன்மோனாக்சைடு போன்ற வாசனையற்ற, வாயுக்களும் உண்டு. இப்படி வாசனையற்ற எந்தப் பொருளும் நம் உடலுக்கு நல்லதல்ல. ஒரு பொருள் நமக்கு வேறுமாதிரியாகவும், மற்றவர்களுக்கு வேறுமாதிரியாகவும் வாசனையைத் தரும்.
ஆண்களை விட பெண்களுக்கு முகரும் தன்மை அதிகம். பெண்களுக்கு 15ல் இருந்து 17 வயது வரை மூக்கு வளரும். ஆண்களுக்கு 17 முதல் 19 வயது வரை. நம் உடலில் துத்தநாகம் (Zinc) குறைவாக இருந்தால் வாசனை அறியும் தன்மை குறையும்.
