PUBLISHED ON : செப் 19, 2016

பல்லையோ நகத்தையோ கடிப்பது பொதுவாக நமக்கு கெட்ட பழக்கம். ஆனால் எலிகளுக்கு அது நல்ல பழக்கம்.
ஆம், எலிகள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் பற்களைக் கடிக்கின்றன. விளையாடும்பொழுது 'கிரீச் கிரீச்' என்ற சத்தத்தை எழுப்புகின்றன.
எலிகள் தனித்து வசிப்பதில்லை. அவை குழுவாகவே வசிக்கின்றன. அப்படி தனியாக இருக்கும் பட்சத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. ஒரு முறை சென்ற பாதையை அவை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்கின்றன.
இது, மிகவும் கூச்சத் தன்மையுள்ள உயிரினம். தனக்கு ஆபத்து வரும் என்று அறிந்த நொடியில் அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கும்.
இன்னொரு ஆச்சர்யம் ஒட்டகத்தை விட நீண்ட நாட்கள் எலிகளால் நீர் அருந்தாமல் இருக்க முடியும்.
எலிவால் அதன் உடலை சமன்படுத்தவும், வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
நம் ஊரில் ஆடு, சிங்கம், தேள் எல்லாம் ஜோசியத்தில் பயன்படுத்துவது போல் சீன நாட்டு ஜோசியத்தில் எலி முதன்மையான விலங்காக இருக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் படைப்பாற்றல், நேர்மை, லட்சியம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இறந்த எலிகள் மூலம் பிளேக் நோய் பரவுவதாக கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியது இந்த நோய். பின்னர் மருத்துவ முன்னேற்றம் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது.
