PUBLISHED ON : நவ 18, 2019

சங்க இலக்கியங்களில் ஒன்று 'பட்டினப்பாலை. கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதியது. சோழ நாடு, காவிரி ஆறு, கரிகாலனின் வீரம், காவிரிப்பூம்பட்டினம் என, பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது இந்நூல். கடற்கரை நகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றிப் பேசுவதால், இந்நூல் 'பட்டினப்பாலை' எனப்பட்டது.
இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடினார் என்று, நச்சினார்க்கினியர் உரை மூலம் அறிய முடிகிறது. தன்னையும் தன் ஊரையும் பாடிய புலவருக்கு கரிகாலன், பதினாறு நூறாயிரம் பொன்னை பரிசாகக் கொடுத்தான் என்கிறது, 'கலிங்கத்துப்பரணி'
'தழுவு செந்தமிழ்ப்பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்'
என்று குறிப்பிடுகிறது.
இது மட்டுமல்ல; பட்டினப்பாலை அரங்கேறிய உறையூர் பதினாறுகால் மண்டபத்தையும் கரிகாலன், உருத்திரங்கண்ணனாருக்கே பரிசாகக் கொடுத்து விட்டான். கரிகாலன் மண்டபத்தை பரிசாகக் கொடுத்த செய்தியை, சங்கர சோழன் உலா, தமிழ் விடு தூது, பாண்டி மண்டல சதகம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
காவிரிக்கரையில் திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது திருவெள்ளறை திருக்கோவில். வாயிலின் சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அதில், பாண்டிய நாட்டை ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216 - -1238). இவன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்து சோழ நாட்டின் பெரும்பகுதியை அழித்தான். ஆனால், பட்டினப்பாலை அரங்கேறிய பதினாறுகால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டு விட்டான். தமிழ் மீதும் தமிழ்ப் புலவர் மீதும் அவனுக்கு இருந்த பற்றே இதற்குக் காரணம்.
கோயில் கல்வெட்டு கூறும் செய்தி:
வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே.'
பாண்டிய மன்னன் கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- கி. ஸ்ரீதரன்
